எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 நவம்பர், 2019

பெங்களூரு விவி புரம் & கேஆர் புரத்தில் விநாயகர் சதுர்த்திக்காக விதம் விதமான விநாயகர்கள்.

 பெங்களூரு விவி புரம் & கேஆர் புரத்தில் விநாயகர் சதுர்த்திக்காக விதம் விதமான விநாயகர்கள்.


”கைத்தலம் நிறைகனி அப்பமோடவல் பொரி கப்பிய கரிமுகன் அடி பேணி ”என்றும் ”விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்.” என்ற பாடல்களைப் பாடி விநாயகனை வணங்குவது வழக்கம்.  விநாயகனே அனைத்திற்கும் முதலான கடவுள்.


விநாயகரை வணங்கித்தான் நாம் அனைத்து செயல்களையும் ஆரம்பிப்போம். பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுதத் துவங்குவோம்.

பார்வதியின் மேனியிலிருந்து உருவானவர் விநாயகர் என்றும் அவர் தன் தாய்க்குக் காவலாய் இருக்கும்போது அங்கே வந்த சிவனாரைத் தந்தை என்று தெரியாமல் தடுத்ததால் அவர் சிரசைக் கொய்ததாகவும் , அதனால் துயருற்ற பார்வதி தேவியின் துக்கம் போக்க வடதிசையில் தலை வைத்துப் படுத்திருந்த யானையின் தலையைக் கொய்து விநாயகருக்கு சிரம்கொடுத்ததாகவும் புராணக் கதை சொல்கிறது.

யார் எப்படி வரைந்தாலும் எப்படிப் பிடித்தாலும் இசைந்து கொடுக்கும் தெய்வம் பிள்ளையார். அரசமரத்தடியில் எளிமையாக வாசம் செய்வார். பிள்ளைகள் அனைவருக்கும் பிடித்த தெய்வம் என்பதால் பிள்ளையார் என்று பெயர் வந்திருக்கக் கூடும்.

இவருக்காக என்று மெனக்கெட வேண்டாம். வாழைப்பழம் , தேங்காய் வைத்து நைவேத்தியம் செய்யலாம். மோதகம், எருக்கலங்கொழுக்கட்டை, அப்பம் ஆகியன பிள்ளையார்பட்டியில் நிவேதிக்கப்படுகிறது. எந்த ஒரு சுப நிகழ்ச்சியானாலும் எந்த ஒரு விஷயத்தைத் தொடங்குவதானாலும் விநாயகர் துணையோடு தொடங்கப்படுகிறது. சிதர் தேங்காய் என்பது முதலில் விநாயகருக்குத்தான் உடைக்கப்படுகிறது.

காரைக்குடியில் முனியையா கோயில் என்று இங்கே திருமணம் ஆன தம்பதியினர் மறுநாள் முதன் முதலில் இந்தக் கோயிலில் அபிஷேகம் ஆராதனை செய்துதான் வாழ்வைத் துவங்குவர்.

மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலுக்கு எதிரேதான் எங்கள் கணபதி விலாஸ், நடுநிலைப்பள்ளி. அந்தக் கோயிலில் அப்பா அவ்வப்போது மண்டகப் படிக்கும் சந்தனக் காப்புக்கும் கொடுப்பார்கள். பிரகாரங்களில் விநாயரின் கதை ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருக்கும். மெயினா விநாயகர் பெற்றோரைச் சுற்றி வந்து மாங்கனியைப் பெற்றுக் கொள்வதும், உயரத்தில் சிறு ஓவியமாக மயிலில் உலகத்தை முருகன் சுற்றி வருவதும் இன்னும் கண்ணுள்ளே நிற்கிறது. 

வாதாபி கணபதி என்றும். சாளுக்கியரின் படையெடுப்பின்பின் தான் கணபதியை இங்கே பிரதிஷ்டை செய்தார்கள் என்றும் படித்த ஞாபகம்.

ஆனால் நாதவிந்துவாக பிரவண ரூபத்தில் இந்த அண்டம் உருவாகக் காரணியாக விநாயகரைக் கருதுகிறேன்.   கணபதி ஹோமம் செய்தபிறகுதான் புதுமனை குடிபுகுதல் செய்வார்கள்.அரசமரம் இருக்கும் இடமெல்லாம் அநேகமாக ஒரு விநாயகரும் இருப்பார். எளியோரின் தெய்வம்.

”எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி
மனத்திற் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும்பொழுது நின் மௌனநிலை வந்திடநீ செயல் வேண்டும்.
கணக்குஞ்செல்வம் நூறு வயதையும் தர நீ கடவாயே.”

" பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் “


என்ற இந்த பாரதியார் பாடலை செக்காலைக் காந்தி ஐயா &  சீதை ஆயா அவர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதையும் இன்னும்  பல தமிழ்ப் பாடல்களையும்  ஸ்லோகங்களையும், ஆதி சங்கரர் அருளிய கணேச பஞ்சரத்தினத்தையும், ரண ருண ஹர ஸ்தோத்திரத்தையும், விநாயகர் அகவல், விநாயகர் 108 போற்றியையும் சொல்லித் துதித்து வணங்குவது பழக்கம்.

ஆவணியில் முதலில் தொடங்கும் விழா இது. சதுர்த்தி விரதம் இருப்பவர்கள்  மாலை நேரத்தில் நான்காம் பிறையைப் பார்த்தபின்பு  உப்பு இல்லாமல் ஒரு பொழுது உணவும் பாலும் பழமும் உட்கொண்டு கணபதி சிந்தனையில் இருப்பது. மரபு  . ஒரு வருடம் முடிந்த பின்னர் பிள்ளையார்பட்டியில் கும்பம் சொரிந்து தரிசனம் செய்து விசேஷமாகப் படைக்கப்படும் உணவை உண்டு இந்த நாளில் பூர்த்தி செய்வார்கள்.

”விநாயகனே வினை தீர்ப்பவனே.  வேழமுகத்தோனே. ஞான முதல்வனே. “என்ற சீர்காழியின் குரல் அவ்வப்போது மனதில் ஓடும்.

விநாயக சதுர்த்திக்காக பெங்களூரு விவி புரம் ஆர்வி ரோட்டில் உலாவுக்குக் காத்திருக்கும் விநாயகர் மூர்த்திகளோடு  ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

டிஸ்கி:- இந்தப் படங்கள் அனைத்தையும் ஓடும் பஸ்ஸிலிருந்து ( 25 ஆகஸ்ட் மாலை ) எடுத்தேன். :)

இனிவரும் படங்களை பெங்களூரு கே ஆர் புரம் மார்க்கெட் பக்கம் உள்ள பஸ்ஸ்டாண்டில்  எடுத்தேன்.  

# உலாவுக்குக் காத்திருக்கும் விநாயகர்கள்.

கணபதி பப்பா மோரியா என்ற பாடல்கள் அங்கங்கே ஒலிக்கின்றன.





HAPPY CHATHURTHI GANESHA..:) :) :)

1 கருத்து:

  1. 6 கருத்துகள்:

    திண்டுக்கல் தனபாலன்9 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:42
    மிகவும் அருமை...

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

    sury siva9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:02
    நாம் காணும் உலகத்திலே மூன்று உள்ளன.
    எத்தனை பார்த்தாலும் அலுக்காது என்பார்கள்.

    நிலவு, கடல் அலை, யானை.

    வேழ முகத்தோனை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

    அவ்வளவு கொள்ளை அழகு.

    அவனை தியானித்தால் தியானிக்கும் மனமும் அழகு பெறுகிறது.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு

    ராமலக்ஷ்மி9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:03
    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

    அருமையான படத் தொகுப்பு தேனம்மை. நாங்கள் வசிக்கும் பகுதிகளில் வண்ணம் தீட்டப்படாத பிள்ளையார்களே அதிகம் விற்பனைக்கு வந்திருந்தன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காரணமாக மக்களும் அதிகம் அவற்றையே கேட்டு வாங்கியது நல்ல மாற்றத்துக்கான அறிகுறியாக இருந்தது.

    பதிலளிநீக்கு

    cheena (சீனா)10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:50
    அன்பின் தேனம்மை - அருமையான பதிவு - படங்களுடன் கூடிய பதிவு - இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:06
    நன்றி தனபாலன் சகோ

    நன்றி சுப்பு சார்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி சீனா சார்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:06
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

நவராத்திரிக் கோலங்கள்

  நவராத்திரிக் கோலங்கள்