திருநெல்லிக்காவல் நெல்லிவனநாதேசுவரர் மங்களநாயகி திருக்கோயில்
திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் நெல்லிவனநாதேசுவரர் கோயிலுக்கு மன்னை சென்றிருந்தபோது சென்று வந்தோம். கிராமங்கள் தொடர இருபுறமும் வாய்க்கால்களும் வயல்களுமாக நடுவில் ஒற்றைப் பாதையில் மிகக் கவனமாகச் சென்று வந்தோம்.
மிக அழகான அருமையான கோவில். துவஜஸ்தம்பமும் எழுநிலை ராஜகோபுரமும் கம்பீரமாக வரவேற்கிறது. மேற்கு நோக்கிய கோவில் என்பதால் மாலை நேரத்தில் கோபுரத்தின் மேலும் சந்நிதி வரையிலும் சூரிய ஒளி பாய்ந்து அழகு ஊட்டியிருந்தது.
எடுப்பான துவஜஸ்தம்பத்தின் கண்கவர் காட்சி.
இதன் தலமரம் நெல்லி மரம் என்பதால் இந்த ஊரின் பெயர் திருநெல்லிக்கா.
சூரியன், பிரம்மன் ஆகியோர் வந்து வழிபட்டதால் பிரம, சூரிய தீர்த்தங்கள் உள்ளன.
உள்ளே விநாயகர், சுப்ரமணியர்,சனி பகவான், சண்டேசர், துர்க்கை, நால்வர் ஆகியோரும் அருள் பாலிக்கிறார்கள்.
ஈசன் மேற்கு நோக்கித் திருப்பார்வை பார்க்க அம்பிகையோ தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள்.
கோயிலின் உட்புறம் முழுவதும் ஓவியங்கள். தோல் நோய்க்குப் பரிகாரமாக இங்கே உள்ள ஒருதீர்த்தத்தில் நீராடும்படிக்கூறிய ஓவியங்கள். மேலும் திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டியும் இத்திருத்தலநாதரை மக்கள் வழிபடுகிறார்கள்.
ஆரூரில் பிறந்தால் முக்தி
அண்ணாமலையை நிலைத்தால் முக்தி
ஐயாறு மண்ணை மிதித்தால் முக்தி
இதுபோல் சிதம்பரத்தில் தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இங்கு வந்தால் இவை எல்லாமே ( பிறந்தால், நினைத்தால், தரிசித்தால், இறந்தால் முக்தி ) கிடைத்துவிடும் என்கிறார்கள்.
பிரகாரத்தில் அம்மன் சந்நிதியின் எதிர்ப்புற சுவரில் ருத்ர தாண்டவமும், காளி தாண்டவமும் மாபெரும் சித்திரங்களாக உயிர்பெற்றுள்ளன.மூன்று கால் உடைய இந்த முனிவர் பிருங்கி முனிவர் என நினைக்கிறேன்.
சிவனின் ருத்ர தாண்டவத்தைப் பிரம்மனும் விஷ்ணுவும் கூடக் கண்டு களிக்கிறார்கள்.
அம்மன் சந்நிதிப் பிரகாரம்.
முதலில் எடுத்த விநாயகர் இப்போதுதான் இங்கே அப்லோட் ஆகியிருக்கிறார். :)
ஆமா. இந்தக் கோயில் ஸ்தலமரமா நெல்லி மரம் எப்பிடி வந்துச்சுன்னு சொல்லவே இல்லையே.
தேவலோகத்தில் கற்பகம், பாரிஜாதம், சந்தானம், அரிசந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்கள் இருந்தன. வேண்டியவர்க்கு வேண்டியதைத் தரும் சக்தி உண்டு அவற்றுக்கு. இதனால் அவற்றின் அகங்காரம் பெருகிப் போயிற்று. அதனால் தேவலோகத்துக்கு வந்த துர்வாசரை அவை மதிக்கவில்லை. துர்வாசர்தான் கோபத்துக்கும் பிடிசாபத்துக்கும் பெயர் போனவராயிற்றே.
உடனே இந்த ஐந்து மரங்களுக்கும் கொடுத்தார் ஒரு பிடி சாபத்தை. ” நீங்கள் உங்கள் இறுமாப்பு அடங்குமாறு புளிக்கும் சுவை கொண்ட கனிகளைத் தரும் நெல்லிமரமாக மாறி பூலோகத்தில் இருங்கள் “
மரங்கள் வேறு வழியறியாது பூமியில் நெல்லி மரங்களாகத் தோன்றி இத்தலத்தில் வளர்ந்துவந்தன. இவற்றின் நிலைகண்டு இரங்கி ஈசன் இந்த மரங்களின் அடியில் சுயம்புவாகத் தோன்றினார். அவரை இவை அனுதினமும் வணங்கி வர அவர் அவற்றுக்கு அருள் பாலித்தார்.
எனவே ஐந்தும் சாபவிமோசனம் பெற்று தேவலோகம் சென்றடைந்தன. எனவே இத்தலம் திருநெல்லிக்கா என்று பெயர் பெற்றது. இத்தலம் உறையும் இறைவன் திருநெல்லிவனநாதர் என்று ( ஆம்லேசுவரர், ஆம்லேசுவரி - ஆம்லா என்றால் நெல்லிக்கனி ) வணங்கப்படுகிறார்.
மிகச்சிறந்த இத்தலத்துக்குச் சென்று வாருங்கள். ரோகம் நீங்கும். திருமணத்தடை நீங்கும். குழந்தைப் பேறு உண்டாகும்.
திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பாடப்பட்ட சிறப்புப் பெற்ற திருத்தலம் இது.
“வெறியார் மலர் கொன்றை யந்தார் விரும்பி
மறியார் மலைமங்கை மகிழ்ந்து தவன்தான்
குறியார் குறிகொண்டு அவர்போய்க் குறுகும்
நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. ”
திருச்சிற்றம்பலம்.
பதிலளிநீக்குThenammai Lakshmanan31 ஜூலை, 2022 அன்று AM 1:16
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !