எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 29 நவம்பர், 2020

மணக்குள விநாயகர். கஜானனை பூஜிக்கும் லெக்ஷ்மி.

மணக்குள விநாயகர். கஜானனை பூஜிக்கும் லெக்ஷ்மி.

புதுச்சேரி மணக்குள விநாயகர ஆலயம் மிக அழகானது. இது பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோவில். தொள்ளைக்காது சித்தர் என்பவர் ஒரு மணற்குளத்தங்கரையில் உருவாக்கி வழிபட்டு வந்த விநாயகர் இவர். எனவே கருவறை அமைந்திருக்கும் இடமே ஒரு கிணறு போன்ற நீர்நிலைமேல் என்கிறார்கள். பக்கத்திலேயே ஒரு குழியில் எப்போதும் வற்றாமல் நீர் நிரம்பி நிற்கிறது என்றும் சொல்கிறார்கள்.

பிள்ளையார்பட்டிக் கோவிலுக்குப் பின்  அருளாட்சி வெகுவாகப் பொலிய நான் பார்த்த விநாயகருக்கான தனிக்கோவில் இது. சுமார் 35 லட்சரூபாய் மதிப்பிலான ஏழரைக்கிலோ தங்கத் தகட்டால் செய்யப்பட்ட தங்கத்தேர் கொண்ட கோவில் இது. தங்கத்தேர் மட்டுமல்ல. கோபுரம் கூட தங்கத்தால் வேயப்பட்ட கோவிலாம். !

புதுவை கடற்கரைக்கும், அரசு அலுவலகங்களுக்கும் அரவிந்தர் ஆசிரமத்துக்கும் பக்கத்தில் உள்ளது. மிக அழகான நீண்ட தூய சாலைகள் கொண்டது புதுவை.

வெள்ளி, 27 நவம்பர், 2020

குரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில்.

குரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில்.


குரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில்.

குன்றக்குடியில் இருந்து நான்கைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில். எல்லா ஐயனார் கோவில்களும் போல இருந்தாலும் இது இன்னும் மிரட்சியோடு கூடிய அழகு.

அமைவிடமே ஒரு ஆற்றின் மேல் என்பதால் இவர் ஆறடி ஐயனார். கோவிலின் இடப்புறம் அந்தப்பக்கட்டு ஒரு கண்மாய் தெரிகிறது. அதன் நீர்த்தடம் வரும் ஆற்றுப்பாதை கோவிலின் வலப்புறம் ஒரு மாபெரும் ஆற்றுப்பாதை. மதகடி போல் காட்சி தந்தது.

வியாழன், 26 நவம்பர், 2020

திருக்காளஹஸ்தி காளத்தியப்பர் கோவில்.

திருக்காளஹஸ்தி காளத்தியப்பர் கோவில்.

திருக்காளஹஸ்திக்கு ஒருநாள் மாலையில் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. திருத்தணியில் இருந்து டாக்ஸி மூலம் சென்றடைந்தோம். மின்னும் வெய்யிலில் பளீரென்ற மூன்று நிலை வெண் கோபுரம் கண்ணைக் கவர்ந்தது. இன்னொரு புறம் எழுநிலை இராஜகோபுரம் இருக்கிறது. 


செருப்பு, செல்ஃபோன் காமிரா எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு டோக்கன் வாங்கிச் செல்லவேண்டும். எனவே மிக மிக அழகான தங்க வேலைப்பாடுகள் ( ! ) ஆமாங்க தங்கமும் வெள்ளியும் பிடித்த விதானத்தின் தொங்குகொம்புகள், தூண்களிலிருந்து நீண்ட தாமரைகள், தாமரை மொக்குகள், விளக்கு வளையங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தாலும் புகைப்படம் எடுக்க இயலவில்லை. பணக்காரத்தனம் மிரட்சியூட்டும் அளவு இருந்தது. அவ்வளவு திருப்பணிகள் இக்கோயிலுக்குப் பலரும் செய்திருக்கிறார்கள். பணக்காரச் சாமி J

செவ்வாய், 24 நவம்பர், 2020

திருத்தணிகை முருகன் கோவில்.

திருத்தணிகை முருகன் கோவில்.

திருத்தணிகைக்கு இந்த முறை சென்றபோதும் ( படியில் ஏறாமல் ) வாகனப் பிரயாணப்பாதையிலேயே சென்றோம்.  அது ஒரு காலை நேரம். மிக அழகாக வடிவமைக்கப்பட்ட முகப்பு ஆர்ச்சுகள் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது.
திருத்தணியைப் போல வெய்யில் கொட்டிய ஊரை நான் பார்த்ததே இல்லை. சும்மா உங்க வெய்யில் எங்க வெய்யில் இல்லை. இது தந்தூரி அடுப்பு கூட இல்லை சூளையில் செங்கல்லைச் சுடும் வெய்யில். ஆமா அந்த ஊரில் எப்படித்தான் எல்லாரும் இருக்காங்கன்னே தெரியல. :(

ஞாயிறு, 22 நவம்பர், 2020

ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்

”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அடிக்கடி நான் முணுமுணுப்பது. அதேபோல் குழந்தைகளைக் கொஞ்சும் போது “ ங்கா ங்கா ங்கா காவேரி ரங்கா கஸ்தூரி ரங்கா எங்கே இருக்குமாம் ரங்கம்பழம் . தீர்த்தக் கரைக்கும் திருவானைக்காவலுக்கும் நடுவிலே இருக்குமாம் என்னைப் பெத்த ரங்கம் பழம்” என்று கொஞ்சுவார்கள் காரைக்குடிப் பக்கம்.  மேலும் ஸ்ரீரங்கம் என்றால் ஸ்ரீரங்கத்து தேவதைகளும் ரங்கநாதன் ஆகிய சுஜாதாவும் நினைவுக்கு வராவிட்டால் நாம் என்ன எழுத்தாளர். ? 

108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்று. காவிரிக்கரையில் அமைந்திருக்கும் சிறப்புப் பெற்றது. ஏழு சுற்று மதில்கள், 21 கோபுரங்கள் மட்டுமல்ல. தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிதான இக்கோபுரம் தமிழக அரசின்  பண்பாட்டுச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றியது இங்குதானாம். !

வெள்ளி, 20 நவம்பர், 2020

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்.

திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் கொண்டவை. அதில் முதல் இரண்டு கோபுரங்களின் வழியாக ஆட்டோ போன்றவையும் வரும். இரண்டாவது கோபுரம் வழியாக கோயிலுக்கான பொருட்களைச் சுமந்து மெட்டாடர் வேன் சன்னிதிக்கு முன்பு வரை வரும். அம்மாம் பெரிசு. !!!
இக்கோயிலில் ஒரு சிறப்பு காலைச்சந்தி பூஜையில் கோ பூஜை நடக்கும். சங்காபிஷேகங்களும் பிரசித்தம். உச்சிக்கால பூஜை விமர்சையாக நடக்கும். அப்போது அர்ச்சகர் புடவை உடுத்தி க்ரீடம் அணிந்து மேளதாளத்தோடு யானை முன் செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து பூஜை செய்வார். அர்ச்சகார் ரூபத்தில் அகிலாண்டேஸ்வரியே இறைவனை பூஜைசெய்வதாக ஐதீகம். பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்று இது. காவிரி நீர் இங்கே சந்நிதிக்கே வருகிறது. எனவே இது அப்பு ஸ்தலம்.

புதன், 18 நவம்பர், 2020

ஆத்தங்குடி நகரச் சிவன்கோவில்.

ஆத்தங்குடி நகரச் சிவன்கோவில்.

ஆத்தங்குடி நகரச் சிவன் கோவில்

ஆத்தங்குடி நகரச் சிவன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் முடிந்தது. ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். கோபுரங்கள் புதுப்பொலிவுடன் ஜொலிக்க சுற்றிலும் நூற்றுக்கணக்கான யாகசாலைகள் காட்சி அளித்தன. எல்லா வகையிலும் ( வட்டம் , சதுரம், தாமரை, இதயம் ஆகிய வடிவங்களில் ) யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

திங்கள், 16 நவம்பர், 2020

திருச்சி தாயுமானசுவாமி கோயில்.

திருச்சி தாயுமானசுவாமி கோயில்.

தாயுமான சுவாமிகள் கோவில்.

தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் இங்கே வாழைப்பழத்தாரை வேண்டுதலாக அளித்தார்கள். அதை ஒரு கயிறில் கட்டி ஆட்டி தீபம் காட்டி திரும்ப எங்களுக்கே அளித்தார்கள். அதில் இருந்த வாழைப்பழங்களை அங்கே படியேறி வந்தவர்களுக்குப் பிரசாதமாக அளித்தபடியும் நாங்களும் எடுத்துக்கொண்டு திரும்பினோம்

சனி, 14 நவம்பர், 2020

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்.

திருப்பட்டூர் சென்றால் வாழ்க்கையில் திருப்பம் நிகழும் என்பார்கள். அதே போல் அன்றிலிருந்து நம் தலையெழுத்தும் மாற்றி  சிறப்பாக எழுதப்படுகிறதாம். திருச்சியிலிருந்து முப்பத்தைந்து கிலோமீட்டரில் ( சமயபுரத்தில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் ) இருக்கிறது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கே ஒரு விசேஷம் தினமும் சூரிய ஒளி பிரம்மபுரீஸ்வரரின்மேல்பட்டு  அவரைத் தரிசித்து வணங்குகிறது.

இங்கே தினமும் பிரம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. சிவன் சந்நிதியிலிருந்து ப்ரகாரத்தில் சிவனுக்கு வலப்புறம் தெற்குத் திசையில் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார் பிரம்மா. இவருக்கு மஞ்சள் பூசி விசேஷபூஜை நடக்கிறது. இந்த பூஜை கட்டாயம் காணவேண்டிய ஒன்று. அன்று வியாழக்கிழமையாகவும் அட்சய திரிதியையாகவும் அமைந்தது வெகு சிறப்பு. எனவே ஏழரைக்கு மேல் அபிஷேகமும் அலங்காரமும் நடந்தது
பிரம்மன் சிவனைப்போல ஐந்து தலைகள் பெற்றதால் ஆணவம் அடைய சிவன் அவரது ஐந்தாவது சிரசைக் கொய்துவிடுகிறார். இதற்குபிரம்மா சாபவிமோசனம் கேட்க ஈசன் தன்னைத் திருப்பட்டூர் என்னும் தலத்தில் துவாதச லிங்கமாக பிரதிஷ்டை செய்து வணங்கச் சொல்கிறார். அதே போல் வணங்கும் பிரம்மனின் தலையெழுத்தை சிவன் மாற்றியதுமல்லாமல் இங்கே பிரம்மனை வணங்க வருபவர்களின் தலையெழுத்தையும் மாற்ற அருள் செய்கிறார். பிரம்மன் வழிபட்டதால் ஈசன் பிரம்மபுரீஸ்வரர், நாயகி பிரம்ம நாயகி.

வியாழன், 12 நவம்பர், 2020

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்.

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்.

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில்.

திருச்சி மலைக்கோட்டைக்குப் போகும்போது தெரியாது உச்சிப் பிள்ளையார் நிஜமாகவே மிக மிக உச்சியில்தான் இருக்கிறார் என்று. கல்லூரிப் பருவத்தில் ஒருமுறை சென்ற போது மலையைச் சுற்றி இருக்கும் கடைகளில் ஷாப்பிங் செய்துவிட்டுத் திரும்பி விட்டோம். சில ஆண்டுகளுக்கு முன்பு போகும்போதும் திருச்சி ஏர்ப்போர்ட்டில் நெருங்கிய உறவினரை ரிசீவ் செய்ய சென்றதால் தாயுமான சுவாமி சந்நிதிக்கு மட்டும் சென்று வணங்கி வந்தோம்.
கீழே மாணிக்க விநாயகர் அருள் வழங்குகிறார். அவரை ஒட்டியும் ஒரு பாதை. அதன் பின்னும் மலையில் ஒரு மலைப்பாதை. ஒரு பையன் சைக்கிள் எல்லாம் ஓட்டிப் போனான். சிலர் டூ வீலரிலும். ஆமா இவங்க எல்லாம் எங்கேருந்து எங்கே போறாங்க. இத்தனையையும் தாங்குதா அந்த மலை. ( ஏன்னா தாயுமானவர் ( சிவன் )  சந்நிதியைச் சுற்றிலும் ஏகப்பட்ட மண்டபங்கள், பழைய மண்டபங்கள், புது மண்டபங்கள், சந்நிதிகள், இதுல மலைக்குகைகள், ( பல்லவர் கால & பாண்டியர் கால ) குடைவரைக் கோயில்களும் நாயக்கர் கால கோட்டை ஒன்றும் இருக்காம் ! ) கர்நாடகப் போரில் இக்கோட்டை முக்கியப்பங்கு வகித்ததாம் !

செவ்வாய், 10 நவம்பர், 2020

சமயபுரம் மாரியம்மன் கோவில்.

 சமயபுரம் மாரியம்மன் கோவில்.


சமயபுரம் மாரியம்மன் கோவில்.

பால்குடமும் மதுக்குடமும் பூச்சட்டியும் சுமந்து சென்று கொண்டிருந்தார்கள் திருச்சி மக்கள். இது கிட்டத்தட்ட 3 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது. திங்கள், செவ்வாய், புதன். பங்குனிப் பால்குடம். 

திருச்சியில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் கண்ணனூர் என்னும் இடத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் மாரியம்மா. ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவியாக இருந்த அம்மன் தான் மாரியம்மனாக இங்கே கோயில் கொண்டிருக்கிறாளாம். தீர்த்தம் மாரி தீர்த்தம். ஸ்தலவிருட்சம் வேப்பமரம். நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் இது.

ஞாயிறு, 8 நவம்பர், 2020

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்.

அடிமுடி அறியவொண்ணா அண்ணாமலையாரை தரிசிக்கவில்லையே என பலகாலம் ஏங்கி இருக்கிறேன். அதற்கான வாய்ப்பு சில மாதங்களுக்குமுன் கிட்டியது.

அடி அடியாய் கிரிவலம் வரும் வாய்ப்பும் கிட்டியது. அடேயப்பா கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர்கள். ஒரு பௌர்ணமி இரவில் கிழக்கு கோபுர வாசலில் ஆரம்பித்து ( சுமார் 7 மணி இருக்கும். ) இரவு இரண்டரை மணிக்கு கிரிவலம் முடித்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் மாலைதான் எழுந்து திரும்ப கோயில் தரிசனம் செய்தோம்.

கட்டாயம் ஒருமுறை சென்று தரிசிக்க வேண்டிய கோவில் இது.

அடிமுடி அறியவொண்ணா அருணாசலராக ஜோதிஸ்வரூபமாக எழுந்தருளி இருக்கிறார் அண்ணாமலையார்.

அயனும் அரியும் அரனின் அடிமுடி அறிய அன்னமாகவும் வராகமாகவும் உருமாறித் தேடுகிறார்கள்.

அப்போது அரனின் சிரசில் இருந்து பல்லாண்டுகளாக விழுந்து வந்து கொண்டிருந்த தாழம்பூவிடம் பிரம்மன் தான் முடியை தரிசித்ததாக பொய் சாட்சி சொல்லும்படி வேண்டுகிறார்.  அது பொய் சொல்ல சம்மதிக்கிறது.

அரனிடம் அப்படிச் சொல்லும்போது வெகுளும் அவர் தன் பூஜையில் இனி தாழம்பூவிற்கு இடமில்லை சாபமளிக்கிறார். பொய் சொன்ன பிரம்மனுக்கும் உருவ வழிபாடு இல்லை என சாபமளிக்கிறார்.

வெள்ளி, 6 நவம்பர், 2020

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்.

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்.


மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்.

கருங்கற்களால் ஆன கட்டுமானக் கோவில் பாணி வகையில் மிகப் பழமையான கட்டிடம் முகுந்த நாயனார் கோவில் ஆகும். இதற்குப் பின் வந்தவை முறையே கலங்கரை விளக்குக்கு மேல் தட்டிலும் கடற்கரையிலும் எழுப்பட்டுள்ள கணேச்சுவரர், ராஜசிம்மேச்சுவரர். க்ஷத்திரிய சிம்மேச்சுவரர் முதலியவையும் ஆகும்.

புதன், 4 நவம்பர், 2020

சிவன்மலை சுப்ரமண்யசுவாமி கோயில்.

சிவன்மலை சுப்ரமண்யசுவாமி கோயில்.

திருப்பூர் பார்க் கல்லூரியில் மகளிர் மன்ற நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அக்கல்லூரியின் முதல்வர் திருமாறன் ஜெயமாறன் அவர்களால் சில வருடங்களுக்கு முன்பு அழைக்கப்பட்டிருந்தேன். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பெங்களூருவில் இருந்து இருவருக்கு ஏசி இரண்டாம் வகுப்பு ட்ரெயின் டிக்கெட்டும், திருப்பூரில் தங்க ஏசி ரூமும் புக் செய்ததோடு காலையில் இருந்து இரவு கிளம்பும் வரை ஒரு பேராசிரியரும் பேராசிரியையும் எங்கள் பயணத் திட்டத்தையும் உணவு ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார்கள். மறக்கமுடியாத நிகழ்வு அது. பரிசுப்பொருட்கள், பொன்னாடை, பணமுடிப்பு என்று வேறு கொடுத்து சிறப்புச் செய்திருந்தார்கள்.

நிகழ்வு முடிந்து மாலையில் சிவன் மலை மற்றும் திருப்பூர் வெங்கடேச பெருமாள் கோயில் இன்னும் சில கோவில்களுக்கு  சென்றுவர கார் ஏற்பாடு செய்து கொடுத்தார். சிறப்பான தரிசனம் பெற்றோம்.

கோயிலுக்குச் செல்லும் வழியிலும் மலை மேலும் ஒரே ப்ளாஸ்டிக் குப்பைதான் இயற்கைக்கு இடராக இருந்தது. இது சிவன் மலையா இல்லை ப்ளாஸ்டிக் மலையா என்று எண்ணுமளவு.

487 படிகளாம். நாங்கள் காரிலேயே மலைக்குச் சென்றதால் களைப்பு தெரியவில்லை. சிவன் அருளாலே அவன் மகன் தாள் வணங்கி வந்தோம்.


திங்கள், 2 நவம்பர், 2020

காரைக்குடிக்கருகே சித்திரகுப்தர் கோயில் ( கேது ஸ்தலம் )

காரைக்குடிக்கருகே சித்திரகுப்தர் கோயில் ( கேது ஸ்தலம் )

காஞ்சீபுரத்தில்தான் சித்திரகுப்தர் கோயில் பார்த்திருக்கிறோம் ஆனால் இங்கே காரைக்குடியில் இருந்து பிள்ளையார்பட்டி போகும் வழியில் லெக்ஷ்மி ( குபேரன் ) ஞான சரஸ்வதி, ஐயப்பன் ஆகிய கோயில்கள் உள்ளன.அதை ஒட்டியே இந்த சித்திரகுப்தர் கோயிலும் உள்ளது. தனியார் நிர்வாகம். காலை 7 மணி முதல் திறந்திருக்கிறது.

உள்புறம் புனரமைப்பு வேலைகள் நடைபெறுவதால் பிரகாரம் வர இயலவில்லை. அங்கேயே விளக்குக்கான எண்ணெய் விற்கிறார்கள். வாங்கி கோயிலுக்குக் கொடுக்கலாம். 7 தீபம் ஏற்றி 7 முறை வணங்கினால் சிறப்பு என்றும் போட்டிருக்கிறார்கள்.

குபேரகணபதியும் சித்திரகுப்தரும் அருள் பாலிக்கும் அழகு ஆலயம். ஆனால் புகைப்படம் எடுக்க அவர்கள் விடவில்லை. எனவே வெளியே வந்து ஒரு க்ளிக்.
காஞ்சியை அடுத்து சித்திர குப்தருக்கு அமைந்துள்ள தனி ஆலயம். ஸ்ரீ சித்திர குப்தர் கேது கிரகத்தின் அதிபதி. ஞானத்தையும் மோட்சத்தையும் அளிப்பவர். சுவாமியின் தீபாராதனைக்குத்தேவையான விளக்கெண்ணெய் கொடுத்து தீபம் பார்க்கவும் என்று போர்டில் எழுதி இருக்கிறார்கள்.

பரிகாரக் கோலங்கள்

பரிகாரக் கோலங்கள்