எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 மே, 2020

திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப்பெருமாள் ஆலயத்தில் போதி மரம்..

திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப்பெருமாள் ஆலயத்தில் போதி மரம்..


இத்திருத்தலைத்தைப் பார்த்ததுமே மிகக் கம்பீரமாகவும் பொலிவாகவும் இருந்தது. பெருமாள் உறையும் ஸ்தலங்கள் என் மனதிற்குப் பிடித்தமானவை. அதிலும் பள்ளி கொண்ட பெருமாள் என்றால் ரொம்பவே பிடிக்கும். ரொம்ப அட்டகாசமாக தலைக்குக் கீழே கை கொடுத்து அரவணையில் அரைத்துயிலில் அவர் அருள் பாலிப்பதே அம்சம். இங்கே வலதுகை கீழ் வைத்து  சயனத்திருக்கோலத்தில் இருக்கிறார் ஸ்ரீ தர்ப்ப சயன இராமர்.  . முதலில் அவரது பிரம்மாண்டத் திருக்கோலத்தில் வியந்து பாத தரிசனம் செய்து திரும்பத் திரும்ப அந்தக் கண்ணனைக் கார்மேக வண்ணனைக் கரிய எம் பெருமானை கண் நிறைய வணங்கினேன்.


இவர் ராமருக்கு பாணம் தந்து வெற்றி பெற உதவியதால் வெற்றி பெருமாள் என்றும் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். பட்டாபி ராமர், சந்தான ராமர், லெக்ஷ்மி நரசிம்மர் ஆகியோர் சிறப்பாக அருள் பாலிக்கிறார்கள்.




பெருமாளுக்குரிய 108 திவ்யதேசங்களுள் ஒன்று இவ்வாலயம். வைணவ க்ஷேத்திரங்களில் 44 வதாம். திருமங்கையாழ்வாரால் 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்திருத்தலம்.



புல்லாரண்யம், தர்ப்பாசனம் என்று பலராலும் புகழ்பெற்றதாகும். க்ருதயுகத்தில் புல்லவர், காலவர், கண்வர் என்ற 3 மகரிஷிகள் உலக நன்மைக்காகத் தவம் இயற்றும்போது அரக்கர்களால் துன்பம் அடைந்தனர்.



மகரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க மகாவிஷ்ணு முதலில் அரச மர ரூபமாய் அவர்களைக் காப்பாற்றி அதன் பின் சங்கு சக்கரதாரியாக அபய முத்திரையுடன் காட்சியளித்துத் தன்னைச் சேவிக்கும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.



திரேதா யுகத்தில். 60, 000 மனைவியர் இருந்தும் பிள்ளைப்பேறு இல்லாத தசரதன் வேண்ட அவருக்கு இத்தலத்துப் பெருமாள் பிள்ளைப் பாக்கிய அளித்தார். 

தேவகீசுத கோவிந்தா வாஸுதேவ ஜகத்பதே
தேஹிமே தனயம் கிருஷ்ணா த்வாமஹம் சரணம்கத
தேவதேவ ஜகன்னாத கோத்ர விருத்திகா ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்

என்று ஆதி ஜெகன்னாதப் பெருமாள் மந்திரோபதேசம் செய்ய தசரதன் நாகப் ப்ரதிஷ்டை செய்து பின் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து புத்திரர்கள் பெற்றதாக ஸ்தலபுராணம்.


அதன்பின் ராமர் பிறந்து திருமணமாகி ஆரண்யத்திற்குச் சென்று சீதையைப் பிரிகிறார். பின் சீதையைத் தேடி வரும்காலத்தில் சேதுக்கரை வரை சென்று எங்கெங்கும் ஜலமாய் இருப்பதால் எப்படிக்கடலைத் தாண்டுவது என்றும் தூது சென்ற அனுமனையும் காணவில்லையே என்றும் ஆயாசத்துடன் வல்வில் இராமன் சோகமயமாய்த் தன் தம்பி லெக்ஷ்மணன் மடியில் தலைசாய்த்து தர்ப்பையைப் பரப்பி உடல்நீட்டி  ( தர்ப்பைப்புல்லைத் தலையணையாக வைத்துப் படுத்திருந்ததால்தான் இத்தலத்தின் பெயர் திருப்புல்லாணி என்றழைக்கப்படுகிறது ) 

///குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் காட்டி
வடதிசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி /// - என்று ஆழ்வார் பாடல்படி

8 நாட்கள் உபவாசம் இருந்தார். அதன்பின் கடலரசன் வழிவிட்டார்



அப்பொழுது இராவணனின் தம்பி விபீஷணன்
புத்ர தாரா நசங்கத்வா
ராகவௌ சரணம் கத
என் அண்ணன் இராவணனால் துரத்தப்பட்டேன் ரகுராமா உன்னைச் சரணடைந்தேன். என்று விபீஷண சரணாகதி இங்கே நடந்துள்ளது. ராவணனுடைய மந்திரிகள் சுகன் சாரணன், இவர்களது சரணாகதி , ஸமுத்ர ராஜா , அவருடைய பத்னிகள் ராமனிடம் சரணாகதி பெற்று அனைவருக்கும் ஹேதுவான சேதுபந்தனத்தை வானர சைன்யங்களின் உதவியுடன் கடலில் கட்டி இலங்கையை அடைந்து இராவண சம்ஹாரம் செய்து சீதையை மீட்டு அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டதாக ஸ்தலபுராணம்

மூன்று மூலவர்கள் சன்னதி ஸ்ரீ  ஆதி ஜெகன்னாதப் பெருமாள், ஸ்ரீ தர்ப்ப சயன ராமர், ஸ்ரீ பட்டாபி இராமர் . அமர்ந்த கோலம், கிடந்த கோலம், நின்ற கோலம் அதுபோக அரசமரப் பெருமாள் பட்டாபி ராமராகவும் அருள் பாலிக்கிறார்கள். இது சரணாகதி ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுது. இங்கே புத்ர பாக்கியத்துக்காக நாகப் பிரதிஷ்டை செய்து தம்பதியர் பாயாசம் அருந்தினால் புத்திரப்பேறு கிடைப்பதாக ஐதீகமாம்.



பிரகாரச் சுற்றுக்களில் தசாவதாரம், அஷ்டலெக்ஷ்மிகள் அருள் பாலிக்கிறார்கள். நூற்றெட்டுத் திவ்யதேசங்களும் அழகான ஓவியங்களாய்க் கண்ணைக் கவர்கின்றன.



ஸ்தலவிருட்சம் அரசமரம். சுற்றிலும் நாகர்கள் பிரதிஷ்டை. இந்த அரசமரம் போதி என்றும் அழைக்கப்படுது.  மரங்களில் நான் அரச மரமாய் இருக்கிறேன் என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லி இருக்கிறார். அதுவே இங்கே ஸ்தலமரமாயும் மர வடிவில் மஹாவிஷ்ணுவாகவும் காட்சி அளிப்பது சிறப்பு. இங்கே நாகப் ப்ரதிஷ்டை செய்து வணங்கி உபவாசமிருந்தால் பிள்ளைப்பேறு கிடைக்குமாம்.

இதுதான் போதி மரம். நாகர்கள் பிரதிஷ்டை.


திருமங்கையாழ்வார் தன்னைப் பெண்ணாகப் பாவித்து இங்கே மங்களாசாசனம் செய்துள்ளார். காசி ராமேஸ்வரம் புனித யாத்திரை செல்லும் பக்தர்கள் இங்கே கட்டாயம் வந்து வணங்காமல் போகமாட்டார்கள். ( தேவிபட்டிணம் நவக்ரஹம்,  திரு உத்திர கோச மங்கை, ஆதி ஜெகந்தாதப் பெருமாள் ஆலயம், ஸ்ரீ சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம் ஆகிய கோவில்களுக்கும் செல்வார்கள். )



மிக மிக சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது இவ்வாலயம். மிகச் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் நடந்திருக்க வேண்டும். அழகும் அருளும் தூய்மையும் பொலியும் இவ்வாலயத்தை வணங்கி வெளியே வந்தால் அங்கே உயரத்தில் இருந்து அருளாட்சி செய்யும் மூலைக் கருடனையும் தரிசித்து வந்தோம். 

எச்செயலையும் செய்யும் முன்பு இப்பெருமாளை வேண்டிக்கொண்டால் வெற்றி மீது வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை. எனவே அவரிடம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி கொடு என வேண்டி வந்தோம்.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்19 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 8:01
    அழகான கோவில். படங்களும் மனதைக் கவரும் வடிவில்.

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University19 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 9:47
    திருப்புல்லாணி பெருமாளைக் காணும் பாக்கியம் இதுவரை கிடைக்கவில்லை. உங்களது பதிவு அங்கே செல்லும் ஆசையைத் தூண்டிவிட்டது. நாராயணனைக் காணும் நாளை எதிர்நோக்குகிறோம்.

    பதிலளிநீக்கு

    Anuprem19 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 11:57
    அருமையான இடம்...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:52
    NANDRI VENKAT SAGO

    NICHAYAM SENDRU DHARISITHU VAARUNGKAL JAMBU SIR

    AAM ANU


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam20 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 4:05
    ராமேஸ்வரம் பயணத்தில் திருப்புல்லாணி சென்றிருக்கிறோம் கில்லர் ஜிக்கு நினைவுகள் வரலாம்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 10:31
    nangalum appadithan sendrom Bala sir :)

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.