எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 செப்டம்பர், 2020

தாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.

தாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.

தேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

இக்கோயில் அம்மன் திருவக்கரை வக்ர காளி அமைப்பில் என் கண்ணுக்குத் தென்பட்டது. கூகுள் குழுமத்தில் தேமொழி என்பவர்

//ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரிய நாயகி அம்மன் கோயில் தேவகோட்டையில் உள்ளது. 

நடனமாட இவ்வூருக்கு வந்த பெண் தனியாக வெளியே தனித்து சென்றிருந்ததை சந்தேகித்து 
அப்பெண் மேல் அவதூறு பேச அதனை தாங்க இயலாது அப்பெண் தற்கொலை செய்து கொள்கின்றாள். 
அப்பெண்ணுக்கு எழுப்பப்பட்ட ஆலயம் இது. அடிப்படையில் ஐயனார் தெய்வத்துக்கான கோயில் இது. 
ஏனைய பல நாட்டார் தெய்வங்களுக்கான தனி சன்னிதிகளும் இங்கே உள்ளன.
மனிதர்கள் தெய்வங்களாக உருமாற்றம் அடையும் உதாரணங்களில் இக்கோயிலும் ஒன்று.
இக்கோயிலை இன்று பதிவுசெய்திருக்கின்றேன்.///
என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதைத் தவிர வேறு பதிவுகள் இல்லை. கோயில் பற்றிய விபரங்கள் கொண்ட ஆய்வேட்டில் இப்பெயர் உள்ளது. 
மிக அழகான கோயில் இது. அம்மனைப் பார்த்தால் நமக்கும் ஆவேசம் வருவது உறுதி. அவ்வளவு அருள் பொங்குகிறது.

திங்கள், 28 செப்டம்பர், 2020

பூமீஸ்வர ஸ்வாமிதேரின் காவல் தெய்வங்கள். - சுடலை மாடனும் காட்டுக் கருப்பரும்.

பூமீஸ்வர ஸ்வாமிதேரின் காவல் தெய்வங்கள். - சுடலை மாடனும் காட்டுக் கருப்பரும்.

கடியாபட்டி பூமீஸ்வர ஸ்வாமி கோயிலின் தேரைப் பற்றி இரு இடுகைகள் முன்பே எழுதி உள்ளேன். அத்தேரின் கீழே செதுக்கப்பட்டுள்ள காவல் தெய்வங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் ஒவ்வொரு கட்டைகளிலுமாக பல்வேறு உக்ர தெய்வங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவை போக தனி அம்மன் , தனிச் சாமிகளும் செதுக்கப்பட்டுள்ளன.

”கீழ்க்கட்டையில் காவல் தெய்வங்கள். தேரைக் காவல் காக்கும் தெய்வங்கள். ஐயனார். வீரன், கருப்பர் போன்ற காவல் தெய்வங்கள். அதன் மேல்படியில் குதிரை வீரர்கள், வீரப் பெண்கள். அதன் மேல்படியில் உக்ர தெய்வங்கள். அதற்கும் மேல் படியில் சாத்வீக தெய்வங்கள் என மனதையும் கண்ணையும் கருத்தையும் நிறைத்தனர் தெய்வத் திரு உருவத்தினர்.

 தேரை முன்புறமிருந்தும் & பின்புறமிருந்தும் வழிநடத்தும் காடன், சுடலை மாடன், அங்காளம்மன், பாவாடைராயன், பேச்சியம்மா  போன்ற  சாமிகளும், அய்யனார்,கறுப்பர், முனியையா போன்ற தெய்வங்களும் இருந்தனர்.” என முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன்.

 இவர்  தேரின் பின்புறம் செதுக்கப்பட்டிருக்கிறார். சிங்கத்தின் மேல் வீற்றிருக்கிறார். சுற்றிலும் நான்கு சிங்கமுக யாளிகள், இரண்டு யானை முக யாளிகள்  மற்றும் அண்டபேரண்டப் ப்ட்சிகள் இரண்டு  வேறு. சுடலை மாடனா தெரியவில்லை.

வியாழன், 24 செப்டம்பர், 2020

திரௌபதி அம்மனுக்குக் கோவில். !

திரௌபதி அம்மனுக்குக் கோவில். !

முதல் முறையாக கும்பகோணத்தில் இக்கோயிலை சாரங்கபாணி கோயிலுக்கருகில் கீழ வீதியில் பார்த்தேன். வித்யாசமான அமைப்பில் கோபுரமும் இருந்தது.

( நான் முன்பு குறிப்பிட்டிருந்த ஒரு இடுகையில் உள்ள ஓவியத்தில் இருக்கும் இரு பெண்கள் பாஞ்சாலியும் சிம்ஹிகாவுமா எனத் தெரியவில்லை. ஏனெனில் ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியங்களில் கோட்டையத்துத் தம்புரான் எழுதிய மலையாள மகாபாரதக் கதைப்படி  அஞ்ஞாதவாதத்தில்  ஷார்துளா என்ற தன் கணவனை கொன்றதற்காகப் பழி வாங்க தேவதை உருவில் வந்து துர்க்கைகோயிலுக்குப் போக பாஞ்சாலியை அழைக்கும் சிம்ஹிகாவும் பாஞ்சாலியும் இடம் பெற்ற படம் இதுவாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். )


மேலே ஒன்பது  குட்டி தேவர்கள்/ தேவதைகள் மாலை பிடித்தபடி நிற்க நாற்புறமும் காவல் தெய்வங்கள் கைகூப்பி அமர்ந்திருக்க, இரு பணிப்பெண்கள் இருபுறமும் வீற்றிருக்க பாஞ்சாலி/திரௌபதி அம்மன் பாண்டவர்கள் ஐவரும் கிருஷ்ணரும் சூழ நின்றிருக்கும் கோலத்துடன் இருந்தது கோபுரம்.

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோயில்

இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோயில்

காந்தி மகானும் இராட்டையில் நூல் நூற்கும் பெண்மணிகளும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரணிக் கோவிலில் சிற்பமாகவே வடிக்கப்பட்டுள்ளனர்.. அதுவும் விதானத்தில். மிகவும் கடினமான காரியம் விதானச் சிற்பமும், விதான ஓவியமும்தான்.

டெல்லியில் ஜண்டேவாலா மந்திர் என்று ஒரு தேவி கோவில் உண்டு. சுதந்திரப்போராட்ட காலத்தில் இக்கோவிலில் நம் தேசியக்  கொடியை ஏற்றுவார்கள் என்று சொல்லக் கேள்வி. விநாயக சதுர்த்தி மும்பையில் தேசிய எழுச்சிக்குப் பயன்பட்டதுபோல் தென்னகக் கோவில்களும் தேசவிடுதலை உணர்வுகளை மதிப்பளித்துச் சிற்பங்கள் வெளியிட்டுள்ளன.

முன்பே இரணியூர் பற்றிப் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன். இது நகரத்தார் கோவில் உலா பகுதியில் இடம்பெற எழுதி உள்ளேன். இக்கோவில் நகரத்தார்களின் ஒன்பது கோவில்களில் ஒன்று.

நீலமேகப்பெருமாள், இரணிக் காளி ஆகியோருக்கு தனிக்கோவில் உண்டு. இக்கோவில் ஆட்கொண்ட நாதர் கோவில். இங்கே நாராயணன் நரசிம்மன் உருக்கொண்டு இரணியனை அழித்தபின் அடங்காத உக்கிரம் கொண்டு விளங்கியதால் அவரை ஆட்கொண்ட சிவனையும் சேர்த்து இரணியூர் ஆட்கொண்ட நாதராக வழிபடப்படுகிறார். ( அரியும் அரனும் ஒன்று. எனவே இங்கே சிவ விஷ்ணு சேர்த்தே வணங்கப்படுகிறார்கள் ).  இரண்ய சம்ஹாரத்தையும் இரண்ய மல்யுத்தத்தையும் இன்னும் பல ஓவியங்களையும் சிற்பங்களையும் பின்னர் பகிர்கிறேன்.

அஷ்டலெக்ஷ்மிகள் வெளியே, நவ துர்க்கைகள் உள்ளே, வீரபத்திரர், 108 அம்மன் சிற்பங்கள், 108 பைரவ திரு மூர்த்தங்கள் ( பைரவ சந்நிதி கருவறை புறச்சுவர் சிற்பங்களாக ) வடிக்கப்பட்டுள்ளார்கள்.
மிகச் சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலை ஒரு முறையேனும் தரிசிக்க வாருங்கள், காரைக்குடியிலிருந்து 27 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கீழசீவல்பட்டி வழியாகச் செல்லலாம்

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

உயிர்கொடுத்த உஜ்ஜயினி மாகாளி. - சாமுண்டி & வரசித்தி மாதா

உயிர்கொடுத்த உஜ்ஜயினி மாகாளி. - சாமுண்டி & வரசித்தி மாதா

ஜோதிர்லிங்கஸ்தலங்களில் ஒன்று உஜ்ஜயின். இங்கே மாகாகாளேஸ்வரை தரிசிக்கச் சென்றபோது மகா காலபைரவரையும் மாகாளியையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. பிறப்பறுக்கும் ஏழு ஸ்தலங்களில் உஜ்ஜனியினியும் ஒன்று. இந்தூரிலிருந்து காரில் சென்றோம்.

சக்தி பீடம் என்றும் சொல்லப்படக்கூடிய இத்தலத்தில் எல்லாக் கோயில்களுமே உக்கிரம் தாங்கியவைதான். அஸ்தியால் அபிஷேகம் நடத்தப்படும் ஜ்யோதிர்லிங்கம், சாராயம் படைக்கப்படும் கால பைரவர் , சிரசைக் கொய்து சமர்ப்பித்தும் உயிர்ப்பித்த காளி என்று எங்கு நோக்கினும் உக்ர பக்தியை விளைக்கும் சாமிகள் . இந்த மாகாளியை வரசித்தி மாதா என்றும் சொல்கிறார்கள். ஸ்கந்த புராணத்தில் இந்த தேவியை ரக்த தண்டிகா/சாமுண்டா என்றும் சொல்கிறார்கள்.

பர்த்துருஹரி, விக்கிரமாதித்தன், சாலிவாகனன், காளிதாசன் ஆகியோர்  அரசாண்ட & வாழ்ந்த இடம்.

புதன், 16 செப்டம்பர், 2020

கானாடுகாத்தான் கோயில்கள்.TEMPLES AT KANADUKATHAN.

கானாடுகாத்தான் கோயில்கள்.TEMPLES AT KANADUKATHAN.

கானாடு காத்தான் எனப்படும் செட்டிநாட்டில் இத்தனை கோயில்களா என்று ஆச்சர்யப்படும் அளவுக்குக் கோயில்களை தரிசித்தேன். அவை இங்கே.

முதலில் சிதம்பர விநாயகர் கோயில் இக்கோயிலில் வித்யாசமாக விநாயகருடன் ஒரு நாகரும் முருகனும் பார்வதியும் சிவனும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். இக்கோயில் ராஜாவீட்டின் எதிரேயே ( செட்டிநாடு பேலஸ் ) அமைந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.
காணக் கண் கொள்ளாக் காட்சி, இக்கோயில் பற்றிப் பின்னர் விபரமாக எழுதுவேன், மனங்கவர் விநாயகர். மிக அருமையாகப் பராமரிக்கப்படும் கோயில். உள்ளே பாருங்கள் தாய் தம்பி தந்தையுடன் காட்சி அளிக்கிறார்.

திங்கள், 14 செப்டம்பர், 2020

இளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக்கோயில்.

இளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக்கோயில்.

ஈடு இணையற்ற இளையாற்றங்குடி என்றொரு புத்தகமே வந்திருக்கிறது. நான் அதை இன்னும் வாசிக்கவில்லை. இக்கோயில் காரைக்குடியில் இருந்து 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. கீழச்சீவல்பட்டி ஹைவேஸ் வழியாக இரணியூர் போகும் பாதையில் சென்று அதன் பின் பிரிந்து வரும் பாதையில் செல்லலாம்.

கி பி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில் இது. மூன்று நிலை ராஜகோபுரம் நம்மைக் கம்பீரமாக வரவேற்கிறது.  இங்கே ஒன்பது தீர்த்தம் ஒன்பது கோவில் ஒன்பது விநாயகர் இருப்பதாக என் அத்தை கூறினார்.

ஈசன் கைலாச நாதர், இறைவி நித்யகல்யாணி அம்மை. கோவிலின் பக்கவாட்டில் புஷ்கரணி இருக்கிறது.  எதிரே அங்காளம்மன் கோயிலும் கருப்பர் கோயிலும் பிரம்மாண்டமாய் அமைந்திருக்க பின்புறம் பெருமாள் கோயிலும் உள்ளது.

மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானம் அமைந்த ஊர். இவர் இளைப்பாறிய குடி என்பதால் இது இளையாற்றங்குடி என வழங்கப்படுகிறது. இங்கே வேதபாடசாலையும் உள்ளது.
சிதம்பரத்தில் இருந்து - சோழ நாட்டிலிருந்து பாண்டி நாட்டுக்குப் புலம் பெயர்ந்த நகரத்தார் இங்கேதான் முதலில் ஒன்றுகூடினார்கள். பாண்டிய மன்னன் கி பி 707 இல் இக்கோயிலையும் இந்த ஊரையும் அவர்களுக்கு வழங்கினார்.  அதன் பின் ஒன்பது பிரிவாகப் பிரிந்து ஒன்பது கோயிலாக அமைத்துக் கொண்டார்கள். இதுதான் முதல் கோயில். இக்கோயிலைச் சார்ந்தவர்களும் தம்மை எட்டு உட்பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டார்கள்.

வியாழன், 10 செப்டம்பர், 2020

சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.

சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.

காரைக்குடியில் இருந்து கழனிவாசல் வழியாக கானாடுகாத்தான் செல்லும் ஹைவேஸ் சாலையில் இடதுபுறம் அமைந்துள்ளது இக்கோயில். காரைக்குடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். பூவாண்டிப்பட்டி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. கோவில் வாசலுக்கு முன்பே உள்ள  16 கால்  மண்டபம் இங்கே வித்யாசமான ஒன்று.

கிழக்கு பார்த்த ஐந்து நிலைக் கோபுரம். ஒரு நாள் மாலையில் சென்றபோது கோயில் திறந்திருக்காததால் ( இது மட்டும் ஒன்பது நகரத்தார் கோயில் உலாவின்போது தப்பித்துவிட்டது. இதற்குப் பதிலாக நகரச் சிவன் கோயிலுக்குச் சென்று தரிசித்திருந்தோம் ). இன்னொருநாள் காலையில் சென்று தரிசித்தோம்.

ஆரவாரமில்லாத அமைதியான கோயில்கள் அனைத்துமே. ஆறுகாலபூஜையும் நித்யப்படி கட்டளைகளும் குறைவில்லாமல் நடந்துவருகின்றன.
சூரை மரங்கள் நிறைந்திருந்த ஊராதலால் இது சூரைக்குடி என வழங்கப்பட்டிருக்கிறது.

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

ஒரு தேரில் இத்தனை சிற்பங்களா ?

ஒரு தேரில் இத்தனை சிற்பங்களா ?

கடியாபட்டி பூமிஸ்வர சுவாமி கோயிலின் தேரைப் பார்த்து இன்றுவரை வியந்துகொண்டே இருக்கிறேன். ஒரு தேரை கிட்டத்தில் இவ்வளவு தெளிவாகப் பார்த்தது அன்றுதான்.

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

மருதமலை முருகன் கோயில்.

மருதமலை முருகன் கோயில்.

மருதமலை மாமணியே முருகையா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா நீயா

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க
தேவன் மகனோடு மனம் விட்டுப் பேசிப்பாருங்க
தீராத வினையெல்லாம் தீர்ந்துபோகுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க.

என்ற இரு பாடல்களும் பள்ளிப்பருவத்தில் விரும்பிக் கேட்டவை. .

கோயமுத்தூர் சென்றால் மறக்காமல் தரிசிக்கும் இடங்களில் முதன்மையானது மருதமலை. கோவை அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. இந்த வழியில்தான் வடவள்ளி, அக்ரி காலேஜ் ஆகியன அமைந்துள்ளன. கோயிலுக்கு அருகில் காலேஜ் இருப்பதால் இளவட்டங்கள் குன்றிலிருக்கும் குமரனைச் சுற்றுவார்கள்.

புதன், 2 செப்டம்பர், 2020

வல்லக்கோட்டை முருகன் கோயில்

 வல்லக்கோட்டை முருகன் கோயில்

சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் அமைந்துள்ளது வல்லக்கோட்டை முருகன் கோயில் . திருத்தணி செல்லும்  முன் இங்கே சென்று வணங்கிவிட்டுத்தான் சென்றோம் . அழகன் முருகன் ஆறடி உயரத்துக்கும் மேலே ( ஏழடி உயரம் என்கிறார்கள். ). வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியனாக அழகுற நின்று அருள்பாலிக்கிறான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் என்கிறார்கள்.
அங்கே வேல் மட்டுமல்ல மயில்களும் கண்டோம். ஒன்றல்ல பல.

பரிகாரக் கோலங்கள்

பரிகாரக் கோலங்கள்