திருக்கடையூரில் அப்பா அம்மாவின் விஜயரத சாந்தி - 1 .
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி சந்நிதியில் நித்தமும் ஆயுஷ்ஹோமங்கள், ம்ருத்யுஞ்செய ஹோமங்கள், உக்ரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம் என ஒரே கோலாகலம்தான். கனகாபிஷேகம் , மகுடாபிஷேகம் ஆகியனவும் இருக்கலாம் தெரியவில்லை.
கோவிலின் பிரகாரமெங்கும் பிறந்த நட்சத்திரம் கொண்டாடும் தம்பதிகள்.
மார்க்கண்டேயனின் பதினாறாம் வயதின்போது அவருக்கு ஆயுள் முடிந்துபோக எமன் கவர்ந்து செல்ல வருகிறார். அப்போது மார்க்கண்டேயர் சிவனுக்கு பூஜை செய்து சிவலிங்கத்தை வாரியணைக்க அதிலிருந்து சிவன் தோன்றி எமனை எட்டி உதைத்து மார்க்கண்டேயரை சிரஞ்சீவி ஆக்கினார் என்பது ஸ்தல வரலாறு. இவர் கால சம்ஹார மூர்த்தியாகவும் எழுந்தருளி இருக்கிறார். இதனால் இங்கே இந்த ஹோமங்கள் , சாந்திகள் செய்வது சிறப்பு.
அமிர்தமே லிங்கமாக அமைந்ததால் இங்கு இருக்கும் மூலவர் அமிர்த கடேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர். அம்மை அபிராமி. அம்மனின் எழிலில் மூழ்கியிருந்த அபிராமி பட்டர் அமாவாசையை பௌர்ணமி என்று அரசனிடம் கூறிவிட்டார். அதனால் அபிராமியை அந்தாதியால் பாட அவள் தன் தாடங்கத்தை எறிந்து அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருத்தலம். இன்னும் பல்வேறு சிறப்புக்களும் உண்டு.
இங்கே சென்ற ஆண்டு அம்மா அப்பாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா நடந்தது. நான், அப்பா, அம்மா மூவர் மட்டுமே சென்றுவந்தோம். அந்நிகழ்வின் தொகுப்பாக இப்புகைப்படங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
இங்கே நவக்ரஹ சந்நிதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் அமிர்த புஷ்கரணி, கால தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், மூவர் தேவாரம் பாடிய திருத்தலம். ( மாணிக்கவாசகர் பாடவில்லை ).
கோவில் வாசலில் வேதியர் கூறியபடி முதலில் மாலை மாற்றிக் கொண்டார்கள் அப்பாவும் அம்மாவும்.