காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.
பழனி பாத யாத்திரைக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்ட காவடிகள் ஊர்வலம் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் இவை.தைப்பூசத்துக்குக் காரைக்குடியில் இருந்து நகரத்தார் காவடி, நாட்டார் காவடி இரண்டும் புறப்படும். பொங்கலை ஒட்டி இந்நிகழ்வு இருக்கும்.
அரண்மனைப் பொங்கல் ஐயா வீடு என்று சொல்லப்படும் ஒருவர் வீட்டில்தான் காவடிகள் வைக்கப்பட்டிருக்கும். அங்கே இருந்து புறப்பட சில நாள் முன்பே காவடியைப் பெற்று வீட்டுக்குக் கொண்டு வந்து காவடி பூசை செய்து விநாயகர், சாமி வீடு , குலதெய்வ வழிபாடு எல்லாம் செய்து அதன் பின் காவடியை எடுத்துத் தோள் மேலேந்தி வீட்டில் சொல்லிக் கொண்டு அனைவரும் ஓரிடத்தில் கூடி பூசை செய்து அதன் பின் ஊர்வலம் வந்து அனைத்துக் கோயில்களிலும் வணங்கி பூசை செய்து காவடி புறப்படும். நேர்த்திக்கடனைப் பூர்த்தி செய்ய வருடந்தோறும் காவடி எடுப்பவர்கள் பெருகிவருகின்றார்கள்.
வீட்டில் நடக்கும் காவடி பூசை விமர்சையானது. கார்த்திகை வேல் பூசை போல காவடிக்கும் பூசை. மதியம் 7 காய்கறியுடன் பாயாசம் வடை அப்பளம் வைத்து ஊரோடு விருந்து நடைபெறும். இதில் பாடப்படும் பாடல்கள் மன எழுச்சியையும் புத்துணர்வையும் தூண்டுவன. எனர்ஜி பூஸ்டர்ஸ் எனலாம். விருந்து முடிந்ததும் மாலை பானக பூசை செய்து நிறைவேறும்.
காவடிகள் வில்லிலிருந்து அம்பு போல் புறப்பட்டுச் செல்லும் காட்சி காணக் கண்கோடி வேண்டும். இடும்பன் சிவகிரி, சக்திகிரி மலைகளைச் சுமந்து சென்றபோது சுமையைப் பழனியில் முருகனின் திருவிளையாடலால் இறக்கி வைத்தபின் எடுக்க இயலவில்லையாம். வாழ்க்கையில் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகச் சுமந்து பழக இறைவனின் அருள் வேண்டியே காவடி எடுக்கப்படுகின்றது. பக்தர்கள் தம் பக்தியைச் சுமந்து இறைவனிடம் சமர்ப்பிக்கின்றனர்.
அரண்மனைப் பொங்கல் குடும்பத்தார் அனைவருக்கும் விபூதி வழங்கியபடி செல்லும் காட்சி. அக்குடும்பத்தின் இளம் சிறார்களும் பங்கேற்பார்கள். காவடிக்காரர்கள் நடைப்பயணம் முழுவதும் இடையில் உடுத்திய வேட்டி மட்டும்தான் உடை. சட்டை அணிய மாட்டார்கள்.