தென் திருப்பதி அரியக்குடியின் மூலைக் கருடனும், சுதர்சனச் சக்கரத்தாழ்வாரும்.
திருப்பதிக்கு நேர்ந்து கொண்டால் கூட அந்தப் ப்ரார்த்தனையை அரியக்குடி பெருமாள் ஏற்றுக் கொள்வதால் நிறைவேற்றி விடலாம். ஆனால் அரியக்குடியில் நேர்ந்துகொண்டால் அந்தப் பிரார்த்தனையை அங்கேயேதான் நிறைவேற்றவேண்டும். அந்தத் திருவேங்கடமுடையான் அவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பார்கள்.
திருப்பதி பெருமாளைச் சேவிக்கச் சென்ற சேவுகன் செட்டியார் அவர்கள் முதுமை அடைந்ததால் மலை ஏற முடியாமல் தவிக்க பெருமாளே அவர் வசிக்கும் இடத்துக்கு அருகில் இருப்பதாக அருள் பாலித்துக் கோயில் கொண்டதால் திருப்பதியை விட அரியக்குடியே அதிகம் சக்தி கொண்டது என்கிறார்கள்.இதைத் தென் திருப்பதி என்றும் சொல்கிறார்கள்.
சேவுகன் செட்டியார் தேடியபோது துளசிச் செடியும் காளாஞ்சியும் குங்குமமும் கண்ட இடத்தில் மூலவர் கிடைத்ததாகச் சொல்வார்கள். அங்கேயே பிரம்மாண்டமாகக் கோயில் ( கல் மண்டபங்கள் ) எழுப்பி உள்ளார்கள். வெளிப்பிரகாரத்தில் தசாவதாரச் சிலைகள் உள்ளன.
வருடா வருடம் புரட்டாசி சனிக்கிழமைகளில் தரிசனம் செய்வதோடு அவ்வப்போதும் அரியக்குடி சென்று வருவதுண்டு. மிகச் சிறப்பான வைணவத் தலம் அது.
வைகுண்ட ஏகாதசியன்று பெருங்கூட்டம் இருக்கும். வீட்டிலேயே மானஸபூஜை செய்து விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதுண்டு. முடிந்தவர்கள் நாலாயிரம் திவ்யப் ப்ரபந்தமும் படிக்கலாம்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் 1
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே. 11ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே 1
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே 11
அதைப் பற்றி விரிவா இங்கேயும் பாருங்க. !!!
அரியக்குடி கோயில் ஐநூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான் என்றாலும் அதன் கீர்த்தி அளவிடற்கரியது.திருப்பதிக்கு நிகரான பெருமை உடையது. அதன் கோயிலும் திருச்சுற்று மாளிகையும் பிரம்மாண்டமானது. இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்களுடன் கண்கவர் காட்சி கொண்டது.
இங்கே பெருமாள் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருந்தாலும் இதன் உற்சவர் சேவுகன் செட்டியாரால் ஸ்ரீரங்கத்தில் உடையவரிடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொண்டுவரப்பட்டதாம். அதன் ஒவ்வொரு வாகனங்களும் மிகப் பிரம்மாண்டமானவை.
ஹரி > அரி குடி கொண்ட ஊர் என்பதால் அரியக்குடி என வழங்கப்படுகிறது. மிக அழகான ஒன்பது நிலைக் கோபுரம். அதன் கருடாழ்வாரின் இருபுறமும் சிங்கங்கள் அமைந்து கவினுறக் காட்சி தருகிறார்கள். மூலவர் திருவேங்கடமுடையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார்.
வைகுண்ட ஏகாதசியில் விரதமிருந்து அரியக்குடிப் பெருமாளைத் தரிசித்து மறுநாள் துளசி தீர்த்தம் அருந்தி முடிந்தவர்கள் பழ ஆகாரம் கொண்டு முடிப்பார்கள். அநேகர் நெல்லிக்காய் தயிர்ப்பச்சடி, அகத்திக்கீரைப் பொரியல், சுண்டைக்காய்ப் பச்சடி, கருணைக்கிழங்குக் குழம்பு, பாசிப்பருப்பு மசித்து பச்சரிசிச் சோறு, நெய், தயிர் உண்டு விரதம் முடிப்பார்கள்.
முதல்நாள் தூக்கம் வராமல் இருக்க ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்வதும் பரமபதம், தாயம் விளையாடுவதும் உண்டு.
அரியக்குடியில் பிரகாரத்தில் இருக்கும் அழகு கருடாழ்வார். :) இதன் புஷ்கரணியின் பெயர் ஆகாச கங்கை. அது இதன் எதிரில் படிகள் வைத்த மிகப் பெரிய சைஸ் கிணறு போல் இருக்கும்.
ஒன்பது நிலை ராஜ கோபுரம். தெங்கிளங்கீற்றுகளுக்குள் ஒய்யாரக் காட்சி தருகிறது.