எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 20 ஜனவரி, 2020

ஆடி மாத அம்மன் ரெசிப்பீஸ்.

ஆடி மாத அம்மன் ரெசிப்பீஸ்.


ஆடி ம அம்மன் –கலவை சாத- ரெசிப்பீஸ்.


1.சிவப்பு குடைமிளகாய் தக்காளி சாதம்
2.பரங்கிப்பிஞ்சு தேங்காய் சாதம்
3.தினை மாங்காய்இஞ்சி சாதம்
4.எலுமிச்சை வேர்க்கடலை சாதம்
5.குதிரைவாலி பருப்பு சாதம்
6.தேங்காய்ப்பால் நெய் சாதம்
7.கிடாரங்காய் கேரட் சாதம்
8.காய்கறி இனிப்பு சாதம்
9.சம்பா சாதம்
10.சாமை அக்கார அடிசில்.

1.சிவப்பு குடைமிளகாய் தக்காளி சாதம்.


தேவையானவை:-
பச்சரிசி சாதம் – 1 கப், சிவப்புக் குடைமிளகாய் – 1, ஆப்பிள் தக்காளி -2, நாட்டுத் தக்காளி – 1, பெரிய வெங்காயம் – 1, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், கடுகு, உளுந்து, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:- ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, வெந்தயம் தாளிக்கவும். அதில் நீளமாக அரிந்த பெரிய வெங்காயம், சிவப்பு குடைமிளகாய், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். அதில் உப்பையும் மிளகாய்த்தூளையும் சேர்க்கவும். நன்கு வதங்கி சுண்டியதும் இறக்கி பரப்பி ஆறவிடவும். இதில் உதிர்த்து ஆறிய பச்சரிசி சாதத்தைப் போட்டு நன்கு கிளறி உபயோகிக்கவும்.

2.பரங்கிப்பிஞ்சு தேங்காய் சாதம்:-
தேவையானவை:-
பச்சரிசி சாதம் – 1 கப், பரங்கிப்பிஞ்சு பாதி, தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், முந்திரி -10, வரமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு – அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் அல்லது நெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை:-
பரங்கிப் பிஞ்சைத் தோல் சீவி பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பானில் நெய் அல்லது தேங்காய் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து, முந்திரி,கடலைப்பருப்பைத் தாளிக்கவும். இதில் இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், பச்சைமிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கி பரங்கிப்பிஞ்சைப் போட்டு வதக்கவும். சிறிது நீர் தெளித்து மூடி நன்கு வெந்ததும் உப்பும் தேங்காய்த்துருவலும் போட்டு பிரட்டி ஆறவிடவும். உதிர்த்து ஆறிய சாதத்தை இதில் கொட்டி நன்கு கிளறி உபயோகிக்கவும்.

3.தினை மாங்காய்இஞ்சி சாதம்:-

தேவையானவை:-
தினை அரிசி – 1 கப், மாங்காய் இஞ்சி – 50கிராம், கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:-
தினை அரிசியைக் களைந்து மூன்று பங்கு தண்ணீர் விட்டுக் குக்கரில் நன்கு வேகவைக்கவும். மாங்காய் இஞ்சி பச்சைமிளகாயைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அல்லது மிக்ஸியில் பெரபெரப்பாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து கருவேப்பிலை சேர்க்கவும். அரைத்த கலவையைப் போட்டுப் பிரட்டி உப்பு சேர்த்து இறக்கி தினை அரிசி சாதத்தைப் போட்டு நன்கு கலந்து உபயோகிக்கவும்.

4.எலுமிச்சை வேர்க்கடலை சாதம்:-

தேவையானவை :-
பச்சரிசி சாதம் – 1 கப், எலுமிச்சை சாறு – 1 பழத்தின் சாறு அல்லது 3 டீஸ்பூன், உப்பு சேர்த்து வேகவைத்த நிலக்கடலை – அரை கப், உப்பு – கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, வறுத்துப் பொடிக்க :- வரமிளகாய் – 2, வெந்தயம்- கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை. தாளிக்க :- எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை:-
பச்சரிசி சாதத்தை உதிர்த்து ஆறவிடவும். வரமிளகாய் வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து அதில் பெருங்காயப்பொடியையும் உப்பையும் சேர்த்துப் பொடிக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பைத் தாளித்து எலுமிச்சை சாறையும் மஞ்சள்தூளையும் போடவும். இதில் பொடித்த பொடியைப் போட்டு அடுப்பை அணைக்கவும். வேர்க்கடலையைத் தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டிச் சேர்த்து சாதத்தையும் உதிர்த்துப் போட்டு நன்கு கிளறி உபயோகிக்கவும்.

5.குதிரைவாலி பருப்பு சாதம்:-

செய்முறை:-
குதிரைவாலி அரிசி -1 கப், பாசிப்பருப்பு – அரை கப், தக்காளி – 1,பூண்டு – 2 , சீரகம் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு இணுக்கு, நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
குதிரை வாலி அரிசியையும் பருப்பையும் களைந்து அரைமணிநேரம் ஊறவிடவும். இதில் பொடியாக அரிந்த தக்காளி, பூண்டு, சீரகம் சேர்த்து மூன்று கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் நன்கு வேகவிடவும் இறக்கி மசித்து உப்பு சேர்க்கவும். நெய்யில் கருவேப்பிலையை வதக்கி சாதத்தில் கொட்டி உபயோகிக்கவும்.

6.தேங்காய்ப்பால் நெய் சாதம்:-

தேவையானவை :-
பாசுமதி அரிசி – 2 கப், தேங்காய்ப்பால் – 4 கப், நெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன். பொடியாக ஒடித்த முந்திரி பாதாம் -2 டீஸ்பூன்,

செய்முறை:-
பாசுமதி அரிசியைக் களைந்து தேங்காய்பாலில் போட்டுக் குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து எடுத்து ஆறவிடவும். இதில் உப்பைத் தூவவும். நெய்யில் பாதாம் முந்திரியைத் தாளித்து வேகவைத்த தேங்காய்ப்பால் சாதத்தைப் போட்டு நன்கு கிளறி உபயோகிக்கவும்.

7.கிடாரங்காய் கேரட் சாதம்:-

தேவையானவை :-
பச்சரிசி சாதம் -1 கப், கிடாரங்காய் – 1, காரட் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், வறுத்துப் பொடிக்க :- வரமிளகாய் 2, கருவேப்பிலை – 1 இணுக்கு, எண்ணெய் – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:-
கிடாரங்காயை இரண்டாக நறுக்கி சாறு பிழிந்த மஞ்சள்தூள், உப்பைப் போட்டு வைக்கவும். வரமிளகாயை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து கடலைப்பருப்பு தாளித்து அதில் வரமிளகாய்ப் பொடியையும் காரட்டையும் போட்டுப் பிரட்டவும். இதன் மேல் கிடாரங்காய் சாறை ஊற்றி உடன் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் சாதத்தை உதிர்த்துப் போட்டுக் கிளறி உபயோகிக்கவும்.

8.காய்கறி இனிப்பு சாதம்:-

தேவையானவை :-
சீரகசம்பா அரிசி – 1 கப், காரட் – 1, பீட்ரூட் – 1, தக்காளி – 1, பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, உப்பு – 1 சிட்டிகை, சக்கரை – கால் கப், பால் – 3 கப், நெய் – 2 டீஸ்பூன், பேரீச்சை – 4, கிஸ்மிஸ், முந்திரி – தலா 10, வனிலா எஸன்ஸ் – சில சொட்டு.

செய்முறை:- சீரகசம்பா அரிசியைக் களைந்து பாலில் போட்டு பாசிப்பருப்பு, சேர்க்கவும். இதில் சிறிய சதுரமாக வெட்டிய காரட் பீட்ரூட், தக்காளி, பேரீச்சையையும் சேர்த்து குக்கரில் இரு விசில் வரும்வரை வைக்கவும். இறக்கி மசித்து இதில் உப்பும், சர்க்கரையும் சேர்க்கவும். நன்கு கரைந்ததும் நெய்யில் முந்திரி கிஸ்மிஸை பொரித்துப் போட்டு வனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கி உபயோகிக்கவும்.

9.சம்பா சாதம்:-

தேவையானவை:-
பச்சரிசி சாதம் – 1 கப், மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், நெய் – 3 டீஸ்பூன், முந்திரி – 10 பொடியாக ஒடிக்கவும். கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு – கால் டீஸ்பூன்

செய்முறை:-
மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். நெய்யைக் காயவைத்து முந்திரியை வறுத்து கருவேப்பிலையைப் போடவும். அது பொரிந்ததும் மிளகு சீரகத்தைப் போட்டுப் புரட்டி அடுப்பை அணைக்கவும். இதில் சாதத்தை உதிர்த்துப் போட்டுக் கிளறி டபராக்களில் நிரப்பி தட்டுகளில் குப்புறக் கவிழ்த்து எடுத்து உபயோகிக்கவும்.

10.சாமை அக்கார அடிசில்.

தேவையானவை:-
சாமை – 1 கப், பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, வெல்லம் – கால் கிலோ, பால் – 6கப், நெய் – கால் கப், முந்திரி – 10, கிஸ்மிஸ் – 10..பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை, ஏலத்தூள் – ஒரு சிட்டிகை, கிராம்பு – 2.

செய்முறை:-
சாமையையும் பாசிப்பருப்பையும் லேசாக வறுத்து நீரில் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். இதில் பால் சேர்த்து குக்கரில் இரு விசில் வைத்து இறக்கவும். பின்பு அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். வெல்லத்தைத் தட்டிப் போடவும். நன்கு கரைந்ததும் இறக்கி வைத்து நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் கிராம்பு பொரித்துப் போட்டு ஏலத்தூள் பச்சைக் கற்பூரம் சேர்த்து நன்கு கலக்கி உபயோகிக்கவும். 

டிஸ்கி :- இந்த ரெசிப்பீஸ் 15.07.2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. 

1 கருத்து:

  1. 'பரிவை' சே.குமார்12 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 11:59
    ஆடி மாத ரெசிபீஸ் அருமை அக்கா...

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்13 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 5:58
    அருமையான குறிப்புகள்.... நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:56
    நன்றி குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:57
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.