எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

தேவகோட்டை, கோட்டையம்மன், பிள்ளையார் , சிவன் கோயில்கள்.

தேவகோட்டை கோட்டை அம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்று வந்தோம் இந்த வருடம். கொரோனாவின் காரணத்தால் கூட்டம் இல்லாமல் அமைதியாக வரிசையில் சென்று தரிசித்தோம். மாலை நேரம் நான்கு மணி இருக்கும். 

தேவகோட்டையின் முக்கிய தெய்வங்களில் ஒன்று கோட்டை அம்மன். இத்திருவிழாவிற்காக விரதம் எல்லாம் இருந்து வந்து வணங்குவார்கள் மக்கள். 

இந்தக் கோயில் 130 நகரத்தார் புள்ளிகளுக்குச் சொந்தமானது. 16 ஆண்டுக்கு ஒரு முறை அறங்காவலர் குழு நியமிக்கப்படுகிறது. மேலும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் 15 நாட்கள் வருடத் திருவிழா நடக்கிறது. ஒரு தளம்/மேடைதான் அம்மன். அம்மேடையில் பூரண கும்பம் வைத்துத் திருவிழாவின் போது அம்மனை அலங்கரிக்கிறார்கள்.

வைஷ்ணோ தேவியில் மூன்று பிண்டிகள் (  பிடி மண் போல சமைந்த 3 உருவங்கள் ) தேவியாக வணங்கப்படுகிறாள். காரைக்குடி முத்தாளம்மன் கோவிலிலும் மேடையே அம்மன் அருவமாக உறையும் இடம் . திருவிழாவின் போதுதான் அம்மன் உருவம் எடுக்கிறாள். 


இந்த அம்மனுக்கு பூஜை மட்டும் செய்வார்கள். ஆனால் முன்னே இருக்கும் பலி பீடத்துக்குத் தினமும் எல்லாத் திரவியமும் கொண்டு அபிஷேகம் உண்டு. அபிஷேகத்தின்போது  300, 400 லிட்டர் பால் உபயோகப்படுத்தப்படுமாம் ! 

பல்வேறு வேண்டுதல்கள் உண்டு. உடல் நலம் காக்க மாவிளக்குப் போடுதல் , திருமண பாக்கியம் பெற  திருமாங்கல்யம் சாத்துதல் , குழந்தை பிறந்தால் கரும்புத் தொட்டில் கட்டுதல் என. சில மக்கள் கும்பிடு கரணம் போன்றவற்றையும் நேர்ந்து கொள்வதுண்டு. 


அலங்கரிக்கப்பட்ட அம்மனைத் திருவிழா முடிவில் திருக்குளத்தில் நன்னீராட்டி எடுப்பார்கள் . அருவமாய் உறைந்து காத்திருக்கும் அவள் அடுத்த வருடம் திரும்பத் தன் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு நன்றி சொல்ல வரும்போது  அங்கே உருவமாக எழுந்தருளி இருப்பாள் கோட்டை அம்மன். 

முல்லை, மல்லிகைப் பூப்பந்தலுக்குள் கோட்டை அம்மன் கொலுவிருக்கும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும் நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். 

இந்தக் கோவில் கோட்டையம்மன் கோவிலுக்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவில். பிள்ளையார் கோவிலுக்குள்ளேயே கொடிமரம் உள்ளது வித்யாசம். 

திண்ணஞ்செட்டி வகையறா நகரத்தார்கள் இதைப் பரிபாலிக்கிறார்கள். 

திண்ணஞ்செட்டி ஊருணிக்கருகில் இருக்கிறது என நினைக்கிறேன்.  அழகான கொடுங்கைகளும் தூண்களும் சிம்ம யாளிச் சிற்பங்களும் மிகப் பெரிய மணியும் அழகு.

அந்தக் காலக் கல் கட்டிடம். 

அடுத்து நாங்கள் சென்றது தேவகோட்டையின் நகரச் சிவன் கோவில் 

இது அம்மன் அப்பன் ஆகியோருக்குத் தனித்தனிக் கோபுரங்களுடன், தனித்தனிச் சந்நிதிகளுடன் கூடிய கோவில். 
மிகப் பிரம்மாண்டமான கோவில். நிறையச் சந்நிதிகள். விதானத்தில் வட்டப் பூந்தட்டுகள் போன்ற ஓவியங்கள். 

ஆக்ரோஷம் பொங்கும் பன்னிரு கரங்கள் கொண்ட மகிஷாசுர மர்த்தினி. சிம்ம வாஹினி. 
இது வாயிலுக்கு இன்னொரு பக்கம். 

கயிலாய வாசன் அம்மையுடன். வீணை வாசிக்கும் ராவணன். தும்புரு, நாரதர், ரிஷிகள், கந்தர்வர்கள், தேவகணங்கள், பூதகணங்கள் சூழ அழகுக் காட்சி. 

பிரகாரத்தின் கொடுங்கைகள் சிற்ப வேலைப்பாடுகளைப் பார்க்கக் காணக் கண்கோடி வேண்டும். கருவறைத் தூண்களின் வெளிப்புறம் சேருமிடத்தில் இரட்டை சிம்ம யாளிகள் அற்புதம் !  தாமரைகள் , கவிழ்ந்த மொட்டுகள், பீடங்கள், நாகங்கள் , வளைவுகள், பூக்கள் என எவ்வளவு அற்புதமான சிற்ப வேலைப்பாடு. 

துர்க்கையும் கோமுகியும். 

பிரகாரத்தில் துர்க்கையின் இருபுறமும் துவாரகிகள். நடனக்கோலத்தில் இருப்பது வித்யாசம். நான் துர்க்கையின் பக்கம் இந்தமாதிரிப் பணிப்பெண்கள் சிலையைப் பார்த்ததேயில்லை எங்கும். 

கோமுகியும் பிரம்மாண்டம். 
விதானத்தில் பூக்கள் , பூ வட்டங்கள், விலங்குகள், வித்யாசமான மிருகங்கள். 

பக்கவாட்டில் பூராவும் அம்மனின் திருவுருவக் கோலங்கள் புகைப்படமாக. 
இது பிரகாரத்தின் இன்னொரு பக்கச் சுற்று.

கோயிலின் மெருகு குலையாமல் 12 வருடங்களுக்கு ஒருமுறை  மராமத்து செய்து வர்ணம் அடித்து அடிக்கடி கும்பாபிஷேகம் செய்து வருகிறார்கள். அதுதான் கோயில் ஜொலிக்கிறது. 

எவ்வளவு ஓவியங்கள், அழகும் அருளும் பொலியும் சிற்பங்கள். காணக் கண் கோடி வேண்டும். சிம்ம யாளிச் சிற்பங்கள். மீனாட்சி திருக்கல்யாண ஓவியங்கள், வலப்புறம் விநாயகர், இடப்புறம் முருகன் வள்ளி தெய்வானை என்று அம்மன் சந்நிதி அழகு பொலிந்தது. 


வண்ண விளக்குகள் தொங்க அழகான உள்சுற்று.  
சேக்கிழார் சந்நிதி. 
அம்மை & அப்பன் சந்நிதி இரண்டுமே ஐந்து நிலை ராஜ கோபுரங்கள். !

மிக அழகான கோவில்கள். சிறு மிருகங்கள் நுழைந்துவிடாமல் இருக்க கம்பிக் கதவு போட்டிருக்கிறார்கள். 

இரு கோயில்களுக்கும் இடையில் உள்ள மதிற்சுவரில் மீனாக்ஷி திருக்கல்யாணம். மொத்தத்தில் மனம் நெகிழ வைத்த  நல்ல தரிசனம்.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan10 ஜனவரி, 2022 அன்று பிற்பகல் 8:28
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.