எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 நவம்பர், 2019

முக்கூறார் கோவில் விஸ்வம் பாடல்:-

முக்கூறார் கோவில் விஸ்வம் பாடல்:-

முக்கூறார் என்ற ஊரில் இருக்கும் விஸ்வம் என்னும் மூன்று கூறாகவும் அனைத்தாகவும் விளங்கும் பரம்பொருள் பற்றி நண்பர், இயக்குநர் செல்வகுமாரும், நண்பர் , இசையமைப்பாளர்  விவேக் நாராயணனும் பாடல் எழுதித் தரச் சொல்லி (2010 இல் )இசை அமைத்தார்கள். அந்த இசைப் பாடல் கோயிலில் தினமும் இசைக்கப்படுவதாகவும் கூறினார்கள். 

அது பற்றி எழுதி அனுப்பிய பாடல்கள் பழைய மெயிலில் போய்விட்டது. எனவே நோட்டுப் புத்தகத்தில் குறிப்பெடுத்த வரிகளில் இருந்து புதுப்பித்து இருக்கிறேன். ( எழுதுவதே ஒரு தவம் . எனவே நோட்டுகள், டைரிகளில் எழுதி வையுங்கள் என்று கூறுவார் நண்பர் செல்வம். அது இப்போது கை கொடுத்தது. ).

முக்கூறார் கோவில் விஸ்வம் பாடல்.:-

1.ஊழிக்கால மேகமாய் உருண்ட சடைமுடி
ஆழிக்கால வெள்ளமாய் அதிர்ந்த நடனமாடி
ஏழ்பிறப்பிலும் எனைத் தொடந்த எம்மான்
பாழ்பிறவி அறுக்க சுடலைபூசிய பெருமான்.
லிங்கரூபமாய் உயிரைப் பெருக்குவாய்
சக்தி ரூபமாய் அனைத்தையும் காப்பாய்
திருத்தல மலை உடையானே  முக்கண் மூன்றுடையானே
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே.

2. ஆணும் பெண்ணும் அலியும் கடந்த முக்கூறே
லிங்க உருவில் எழுந்த ஞான முகக்கூறே.
அனுமனும் நீ சண்டீசனும் நீ
நந்தி தேவனும் நீ நாதப் பிரம்மமும் நீ
மருந்தீசனும் நீ வைத்தீஸ்வரனும் நீ.
வையாற்றின் ஈசனும் நீ செய்யாற்றின் தேவனும் நீ
திருத்தல மலை உடையானே  முக்கண் மூன்றுடையானே
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே



3. அர்ஜுனனுடன் பன்றி வேட்டையாடி
தாருகா வன முனிகளின் செருக்கடக்கி
திரிபுரம் எரித்த பெருமான்
தீபநர்த்தனமாய் ஒளிரும் எம்மான்.
வேழனும் வேலனும் உமையவளும் சூழ
ரிஷபவாகனத்தில் அமர்ந்த பரமேசனே
திருத்தல மலை உடையானே  முக்கண் மூன்றுடையானே
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே


4.ஷோடச  உபசாரமும் செண்பகமும்
கொன்றையும் வில்வமும் விளாம்பழமும்
நூற்றெட்டுச் சங்காபிஷேகமும் சாமரமும்
ஆனித்திருமஞ்சனமும் திருவாதிரையும்
காப்பரிசியும் களியும் களிப்போடு ஏற்று
பூத கணங்களோடு சாம்பல்பூசி ஆடும்
திருத்தல மலை உடையானே  முக்கண் மூன்றுடையானே
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே.

5.மானசரோவரில் அமர்நாத்பனிலிங்கமாய்
பசுபதிநாத்தாய் மஞ்சுநாதனாய்
மல்லிகார்ஜுனனாய் , பீமேஸ்வரராய்
கால பைரவனாய் சட்டநாதராய்
கைலாசநாதனாய் பரமானந்தனாய்
உள்ளதும் அல்லதுமாய் இருப்பவனே
திருத்தல மலை உடையானே  முக்கண் மூன்றுடையானே
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே

6.திருவாசகமே என் உயிர் வாசகமே
இறைப்பேறே என் இம்மையின் மோட்சமே
இமயத்தை முடியாய்க் கொண்ட கொடுமுடியோனே
ஓமெனும் ஒலிக்குறிப்பே விஸ்வமயமானவனே.
நால் வேதங்களையும் வெண்நாய்களாய் மாற்றி
கைப்பற்றி உலவும் கால பைரவா
திருத்தல மலை உடையானே  முக்கண் மூன்றுடையானே
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே

7.நாகமாலை அணிந்தோனே, நாவல்நிறக் கண்ணோனே
மீனாக்ஷி நாதனே பார்வதி மணாளனே
தாட்சாயிணியைத் தோளேந்தித் தாண்டவமாடியவனே
பஞ்சாட்சர மந்திரமே பாஞ்சராத்ரா தீபமே
பிறதோஷம் அண்டாத பிரதோஷ வேளையில்
பிரதி தினம் பூஜித்தேன் எம்மானே
திருத்தல மலை உடையானே  முக்கண் மூன்றுடையானே
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே.

8. சாம்பற் பூசிய சங்கரா  சாரங்கபாணி
தில்லையம்பல நடராசா சீர்காழி சட்டநாதா
தனம் தேடுவோர்க்கு தனாகர்ஷண பைரவா
கிரஹங்களும் கிரணங்களும் தீண்டாத காளத்திநாதா
அருணனே ஆவியே தண்ணிலவே
திருநாகேஸ்வரா தர்ப்பாரண்யேஸ்வரா
திருத்தல மலை உடையானே  முக்கண் மூன்றுடையானே
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே

9. அட்டாங்க யோகமே அரையாடை உடுத்தோனே
அடிமுடி அறியவொண்ணா அண்ணாமலையோனே
புலியாசனத்திலமர்ந்த யோகநிட்டைக்காரா
வியாக்கிர பாதனும் பதஞ்சலியும் பணிந்து வணங்குவரே
நவக்கிரக தோஷம் நீக்க நவத்தலங்களில் அமர்ந்தவா
ஆதி சங்கரனே ஆலமர் பெருமானே
திருத்தல மலை உடையானே  முக்கண் மூன்றுடையானே
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே

10.முக்கண்ணனே முப்புரமெரித்தோனே
மன்மத தகனம் செய்து மனமது செப்பனிட்டோனே
சாந்த மூர்த்தியே சைவ சித்தாந்தமே
பிறைசடை தாழம் துறந்த எம்மானே
இருகரம் கூப்பித் தொழுவோர்க்கு
இம்மையிலும் மறுமையிலும் அருள்வாயே
திருத்தல மலை உடையானே  முக்கண் மூன்றுடையானே
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே.

11.பிரம்ம கபாலத்தில் பிக்ஷை கொண்டாய்
செருக்குற்ற நந்தி சித்தம் தெளிவித்தாய்
நீலகண்டரை இளமையாக்கினாய்
கண்டத்தில் ஆலகாலவிஷமடக்கினாய்
நாகமணிந்து நீறு பூசி சூலம் ஏந்தி
அறுவகையாய்த் தாண்டவமாடுகிறாய்.
திருத்தல மலை உடையானே  முக்கண் மூன்றுடையானே
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே

12. சூலமும் உடுக்கையும் மானும் மழுவும்
தீயும் தேவரும் நந்தியும் நாரதரும்
பிரதோஷ காலத்தில் சூரிய  சந்திரரும்
யுகங்கள் தோறும் உன்னுடன் ஆட
புனுகுச் சட்டத்தில் அடங்கியவனே
சம்பாப்பாவாடையில் உலகம் பாலிப்பவனே
திருத்தல மலை உடையானே  முக்கண் மூன்றுடையானே
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே

13. மாணிக்க வாசகனே, ஞான சம்பந்தனே
கனக கும்பேஸ்வரனே காசி விஸ்வநாதனே
அனுசூயையின் கைக்குழந்தை ஆனவனே
பூதகண நாதனே வேதங்கள் நான்கின் தேவனே
ப்ரளயக் காலத்தில் இருளொளியாய் நின்றவனே
உப்பிலியப்பனே ஒப்பிலாப் பெம்மானே
திருத்தல மலை உடையானே  முக்கண் மூன்றுடையானே
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே

14. ஆணென்ற ரூபத்துக்குப் பிறந்தவன் வேலன்
பெண்ணென்ற ரூபத்துக்குப் பிறந்தவன் வேழன்
அரிஅர ரூபத்துக்குப் பிறந்தவன் ஐயப்பன்
மனிதரில் முக்கூறும் சுமந்த முக்கூறானே.
சிவம் நீ சாந்தம் நீ சைவம் நீ வைணவம்நீ
அபிஷேகப் பிரியனும் நீ அணையா ஜோதியும் நீ
திருத்தல மலை உடையானே  முக்கண் மூன்றுடையானே
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே

15. அறுபத்து நான்கு நாயன்மாரும்  காரைக்காலம்மையும்
பட்டினத்தடிகளும் உன்னடி பின் தொடர
முயலகனும் உன் பாதம் பிடிக்கவே பிறந்து கிடக்க
அண்ட கோசங்களுக்கு ஆதியே, மூல ஜோதியே
ரத்ன சபை, பொற்சபை, தாமிர சபை, வெள்ளி சபை, சித்திர சபை ,
எத்தனை சபை  எத்தனை நடனம் ஆடினாலும்
என் இதயச்சிற்சபையிலாடும் உன் நடனத்துக்கு ஈடுண்டோ.
திருத்தல மலை உடையானே  முக்கண் மூன்றுடையானே
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே

16. அபிஷேகப் ப்ரியனோ  அலங்காரப் பிரியனோ
மேய்ப்பனோ மந்த ஹாஸனோ விஸ்வாசனோ
கல்லாலாலின் கீழமர்ந்தவனோ குழல் கீதனோ
ராதை நேசனோ மஹேஸ்வரி மணாளனோ
மஹாதேவனோ விஸ்வரூபணோ குஞ்சிதபாதனோ
வெண்ணை வாயனோ கண்ணன் மாயனோ, 
திருத்தல மலையுடையானே முக்கண் மூன்றுடையானே 
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே

17. பூதகி அழித்தவனே பூத கண நாதனே
ஞான மோட்ச சதாசிவனே மத்யபுரி வாசனே
மீனாக்ஷி சொக்கேசனே மதங்க காளிங்க நர்த்தனே
பிரணவப்பொருள்கேட்டுப் பிள்ளையைக் குருவாக்கியவனே
மன்றிலே எடுத்த கால் மனதிலே வை அப்பனே
முக்கோடி தேவருக்கும் நேசனான ஈசனே
திருத்தல மலை யுடையானே முக்கண் மூன்றுடையானே 
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே

18. உருவே உருவின் களிப்பே அருவே அருவின் வெளிப்பே
கருவே கருவின் உயிரே தருவே தருவின் உயிர்ப்பே
திருவே திருவின் எழிலே  இருவினை மும்மலம் அழிப்பே
அண்ட கோசங்களின் ஆதியே ஜோதியே விஸ்வப்பிரம்மனே
அனுசூயையின் முக்குழந்தையே ஆதிமூலமே அனாதியே
உருவாய் அருவாய் கருவாய் உயிராய் தருவாய் திருவாய்   
திருத்தல மலையுடையானே முக்கண் மூன்றுடையானே 
முக்கூறாரே திருப்பள்ளி எழுந்தருள்வாயே

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்12 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 8:20
    சிறப்பை பதிவு செய்தமைக்கு நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு

    Yarlpavanan13 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 2:21
    சிறந்த பகிர்வு!

    visit: http://ypvn.0hna.com/

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan16 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 5:42
    நன்றி தனபாலன் சகோ

    நன்றி ஜீவலிங்கம் சார்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan16 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 5:42
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.