எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 6 மார்ச், 2020

நரியங்குடி கருங்குளம் ஆதீனமிளகி ஐயனார் காட்டுக்கருப்பர் கோயில் புரவியெடுப்பு

நரியங்குடி கருங்குளம் ஆதீனமிளகி ஐயனார் காட்டுக்கருப்பர் கோயில் புரவியெடுப்பு

”வேட்டைக்கு வந்து கோட்டைக்குப் போகும் “என்ற பாட்டைக் கேட்கும்போதெல்லாம் தன்னை அறியாமல் தலையும் காலும் தாளமிட்டிருக்கின்றன.டண்டக்கு டண்டக்கு டண்டக்கு டண்டன், டண்டக்கு டண்டக்கு டண்டக்கு டண்டன்  என.!

 கோடை காலம் வந்துவிட்டது. இனி குலதெய்வம்  கும்பிடுதல், அம்மன் கோயில் திருவிழாக்கள், கூழ் ஊற்றுதல்  பூச்சொரிதல், தேரோட்டங்கள், தெப்பம், செவ்வாய் என தமிழக கிராமத்து ஊர்கள் களை கட்டி விடும்.


வெய்யில் சுட்டெரிக்கும் கோடையையும் திருவிழாக்களால் கொண்டாடுகிறார்கள்  நம் மக்கள். அவற்றுள் முக்கியமான ஒன்று புரவியெடுப்பு. இது பொதுவாக இரு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. சில பல லட்சங்கள் செலவு செய்து ஊர் கூடி இத்திருவிழாவை நடத்துகின்றார்கள்.

கொடிகளும் குடைகளும் சூழ காரைக்குடிப் பக்கமிருக்கும் கல்லலில் உள்ள நரியங்குடி ஆதினமிளகி ஐயனார் காட்டுக் கருப்பர் கோயிலில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புரவி எடுப்பு நடைபெறுகிறது.

விவசாயம் செழிக்கவும், நோய் நொடி அண்டாமல் இருக்கவும் கொண்டாடப்படும் திருவிழா இயற்கையைச் சமன் செய்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பாரம்பர்யக் கரகக் கலை.
நாட்டார்கள் நகரத்தார்கள் இணைந்து நடத்தும் திருவிழா இது. ஐயனாரின் வாகனமான புரவிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விழா இது. இதனை உருவாரம் எடுத்தல் என்கிறார்கள்.
நோய் நொடி ஏற்பட்ட போது தீர்த்து வைக்கக் கோரி வேண்டிக் கொண்டு உரு வாங்கிப் போடுதல் என சில கோயில்களில் உலோகத்தால் செய்யப்பட்ட உருக்களை - உடல் உறுப்புகளை வாங்கிப் போடுவார்கள். இங்கே உருவாரம் எடுத்தல் என உடல் உபாதை மற்றும் மற்ற பிரச்சனைகள் துன்பங்களைத் தீர்க்கவும் உருவாரம் எடுக்கிறார்கள்.
நரியங்குடி ஊர் நாட்டார்களின் மக்கட் செல்வங்கள் ( இளைஞர்கள் ) அநேகர் வெளிநாடுகளில் வேலை நிமித்தம் இருந்தாலும் சொந்த ஊரில் குலதெய்வ வழிபாட்டில் மிகுந்த முக்கியத்துவம் செலுத்தி இந்தப் புரவியெடுப்பில் பங்கேற்கிறார்கள்.

முதலில் ஒரு நல்ல நாளில் புரவி செய்யப் பிடி மண் எடுத்தல் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின் அதனை ஒரு கலைஞர் ( குயவர் )  புரவியை  வடிவமைக்கிறார். பொதுவாக இரு பெரும் புரவிகளும், ஐந்து சிறு புரவிகளும் வடிக்கப்படுகின்றன. ஐயனார் சிலை ஒன்றும் செய்யப்படுகின்றது.

வெண்மை நிறமே முக்கியத்துவம் கொடுத்து அடிக்கப்படுகிறது. வெண் புரவிகள். அதன் பின் அவை வடிக்கப்பட்ட கலைஞரை முன் வைத்து ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றன. ஊர்வலத்தின் முன்னே எலுமிச்சை குத்திய ஐயனாரின் அரிவாளைச் சுமந்து வேளார்கள் வருகிறார்கள்.

கொடிகளும் குடைகளும் சூழ சாமியாட்டம் நடைபெறுகிறது. புரவிகள் கொட்டும் பறையும் கொம்பும் எக்காளமும் மேளதாளமும் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன.

சாட்டையால் அடித்துக் கொண்டு ஆண்களும் சாமி வந்து பெண்களும் ஆடியபடியே வர வேட்டி துண்டு அணிவித்து பரிவட்டம் கட்டப்பட்ட புரவிகள் மாலை மரியாதையோடு சுமந்து வரப்பட்டு கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு நிறுவப்படுகின்றன.இதற்கென முன்பே மருந்தைச் சேர்த்து இடித்து உருட்டி வைத்திருக்கின்றார்கள்.

அதன் பின் தக்க முறைப்படி பூமாலை சாத்தி பூசை செய்து வழிபாடு நடத்துகின்றார்கள்.

2011, 2013, 2015 என இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இத்திருவிழா கோலாகலத்தோடு நடைபெறுகிறது. இனி 2017 இல் இருக்கும். குழந்தை வரம் வேண்டியும் நிறையப் பேர் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றார்கள்.

வேங்கை பிடித்தல் என்று கண்மாயில் மண் எடுத்துக் கரை உயர்த்தும் நிகழ்வும் நடைபெறுகிறது. இயற்கையை சமன் படுத்தும் நிகழ்ச்சியாக ஊர் கூடிக் கண்மாயைத் தூர் வாருதலால் மழை நீர் சேகரிப்பும் முறையாகக் கண்மாய்களில் நிகழ்கின்றது.

https://www.facebook.com/nnagarathar/posts/465034140254140


நரியங்குடி புரவியெடுப்பு
Posted by Muthu Sabarathinam on Tuesday, June 4, 2013


https://www.facebook.com/muthu.sabarathinam/videos/vb.100001640949200/932955616769128/?type=3&theater


https://www.facebook.com/muthu.sabarathinam/videos/vb.100001640949200/932991636765526/?type=3&theater


Posted by Muthu Sabarathinam on Tuesday, June 2, 2015

Posted by Muthu Sabarathinam on Tuesday, June 2, 2015

நரியங்குடி புரவியெடுப்பு
Posted by Muthu Sabarathinam on Tuesday, June 4, 2013
 


டிஸ்கி:- புரவி எடுப்புப் புகைப்படங்கள் என் அம்மா ( வலைப்பதிவர் - சும்மாவின் அம்மா - திருமதி. முத்து சபாரெத்தினம் அவர்கள் எடுத்தது. வீடியோவும் அம்மா எடுத்ததுதான். இன்னும் புரவி ஊர்வலமாகக் கொண்டு வரப்படும் புகைப்படங்களை இன்னொரு இடுகையில் பகிர்கிறேன். 

இவற்றையும் பாருங்க.

1. நரியங்குடி கருங்குளம் ஆதீனமிளகி ஐயனார் காட்டுக்கருப்பர் கோயில் புரவியெடுப்பு.

 2. நரியங்குடி கருங்குளம் ஆதீனமிளகி ஐயனார் காட்டுக்கருப்பர் கோயில் புரவியெடுப்பு - சில புகைப்படங்கள்.

 3.  நரியங்குடி கருங்குளம் ஆதீனமிளகி ஐயனார் காட்டுக்கருப்பர் கோயில் புரவியெடுப்பு - இன்னும் சில புகைப்படங்கள்.


1 கருத்து:

  1. வை.கோபாலகிருஷ்ணன்14 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 11:30
    இந்த ஆண்டு நடைபெறாவிட்டாலும்,
    இந்தப் பதிவினிலேயே திருவிழா களைகட்டியுள்ளது.

    படங்களெல்லாம் அழகாக உள்ளன.

    டண்டக்கு டண்டக்கு டண்டக்கு டண்டன்,
    டண்டக்கு டண்டக்கு டண்டக்கு டண்டன் ! :)

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu14 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 12:26
    புகைப்படங்களுடன் தகவல்களுக்கு நன்றி சகோ. முதல் முறை அறிகின்றோம்.

    பதிலளிநீக்கு

    Yarlpavanan14 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 9:52
    சிறந்த பகிர்வு

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan15 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 2:27
    நன்றி விஜிகே சார்

    நன்றி துளசி சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan15 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 2:27
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.