எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 8 மார்ச், 2020

பங்குனிப் பூத்தட்டும் பால்குடமும்.- முத்துமாரி.

பங்குனிப் பூத்தட்டும் பால்குடமும்.- முத்துமாரி.

முத்துமாரி அம்மன் கோயில்.
”காத்திடுவாள் ஆத்தாள் காத்தாயி
திருக்கண்ணபுரம் சேர்ந்தாள் மகமாயி
திருவேற்காட்டில் காத்திருந்தேன் கருமாரி
அம்மா விளையாடுகின்றாளே ஒரு மாரி ..

வெட்டவெளிப் பாதையிலே தாய் சிரிப்பாள்
எந்தன் வினைகளெல்லாம் பார்வையிலே சுட்டெரிப்பாள்
முத்தம்மா என்றழைத்தால் மாரி முத்தம்மா முத்துமாரி
முத்தம்மா என்றழைத்தால் முன் நடப்பாள் தன்
மூக்குத்தி ஒளியாலே கண் திறப்பாள்

கடற்கரையில் தவமிருந்தாள் பூமாரிக்கண்ணி
என் கண் துடைத்துக் கை கொடுத்தாள் முண்டகக் கண்ணி
நடப்பதெல்லாம் நடக்கட்டும் அது விதியாகும்
சிவநாயகியாள் துணை இருப்பாள் அது போதும். ( காத்திடுவாள் ஆத்தாள் )
--என்ற சீர்காழி திரு கோவிந்தராஜன் குரல் அம்மனைத் துதிக்கும் போதெல்லாம் என்னுள் ஒலிக்காமல் போவதில்லை. ( சின்னஞ்சிறு பெண்போலே என்ற பாடலும். ) கேட்கும் கணம் தோறும் ஒரு பரவசம் ஊருடுவும். அம்மன் கோயிலின் பக்கம் சென்ற போதும் அங்கிருந்த ஆன்மீக அலை பரவி நம்மைச் சூழ்ந்து நிரம்பி அதே பரவசத்தில் உடல் எங்கும் புல்லரித்தது.

பூத்தட்டு.
ஆடிதான் அம்மனுக்கு உகந்த மாதம் என்றாலும் காரைக்குடிப் பகுதியில் பங்குனிப் பூத்தட்டும் பால்குடமும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. செவ்வாய் ( திருவிழா ) பூத்தட்டு, முளைப்பாரி, மதுக்குடம், பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், காவடி, கரகம், தீச்சட்டி எடுத்தல், தீமிதித்தல் ( பூமிதி ) என மிகச் சிறப்பாக பங்குனித் திருவிழா கொண்டாடப்படுகின்றது.

வாத்திய வரவேற்பு
காரைக்குடியில் இரு முத்துமாரியம்மன் கோயில்கள் உள்ளன. செக்காலையில் பெரிய முத்துமாரியம்மனும், முத்துப்பட்டணம் மீனாட்சிபுரத்தில் சின்ன முத்துமாரியம்மனும் கொலுவீற்றிருந்து அரசாட்சி செய்கின்றார்கள்.
பாளை - மதுக்குடம்.

இந்த வருடம் மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலின் திருப்பணி காரணமாக விழா ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள்.

தென்னம்பாளையைச் சீவி குடத்தில் வைத்து உள்ளே மஞ்சள்தண்ணீர் வேப்பிலை போட்டு மதுக்குடம் அமைக்கின்றார்கள்.

பூத்தட்டுத் திருவிழா  முடிந்ததும் வளர்க்கப்படும் முளைப்பாரிகள் ( நவதானியம் ) இரண்டடி நீளத்துக்குச் செழித்து வளர்ந்திருந்தன.
முளைப்பாரி

பங்குனித் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்துவோர் ஒரு மாதம் அல்லது ஒரு மண்டலம் காப்புக் கட்டி விரதமிருக்கின்றார்கள். புது மஞ்சள் உடையுடன் குளித்து வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றார்கள். கையில் வெப்பம் போக்கும் வேப்பிலையுடனும் மங்களகரமான மஞ்சளும் குங்குமமும் அணிந்து வருகின்றார்கள். வீதியெங்கும் கோலமிட்ட வாசல்களில் வரும் பக்தர்களை அம்மனாக நினைத்துப் பாதத்தில் மஞ்சள் நீர் ஊற்றுகின்றார்கள் மக்கள்.
மதுக்குடம்.

சென்ற வாரம் பெரிய முத்துமாரியம்மன் கோயிலில் மிகப் பெரும் அளவில் பூத்தட்டு நிகழ்ச்சி நடந்தது. ஊரெல்லாம் பூவாசம். தாமரை, சாமந்தி, ரோஜா, மல்லிகை, முல்லை , இருவாட்சி, மரிக்கொழுந்து, என வாசம் மிக்க மலர்களை நிறைந்த பூத்தட்டை வாணவேடிக்கையுடன்  வண்டி வண்டியாகக் கொண்டு வந்து கோயிலில் செலுத்தினார்கள். மங்கல வாத்தியங்கள் ஒலிக்க மின்அலங்காரம் செய்யப்பட்ட ஊர்திகள் ஊர்வலமாக வர அங்கங்கே இருக்கும் அனைத்து மக்களும் வாசலில் மிகப் பெரிதாகத் தேர் மயில் தீபம் முளைப்பாரிக் கோலங்கள் எல்லாம் போட்டு வரவேற்கின்றார்கள். பூத்தட்டையும் செலுத்துகின்றார்கள். பல்வேறு சமூகத்தாரின் மண்டகப் படி தொடர்ந்து நடைபெறுகின்றது. மலரபிஷேகத்தில் முகம் மலரக் கிடக்கிறாள் முத்துமாரி.
பெண் குழந்தை எடுத்த பால்குடம்.

இசை நிகழ்ச்சி எல்லாம் நடத்தப்படுகின்றது. அதற்கு முன் விழா மேடையில் சிறுவர்கள் தெய்வத் திருப்பாடல்களைச் சொன்னார்கள். ஒரு சிறுவன் திருவாசகத்தை முழுமையாகச் சொன்னான் . கேட்கக் கேட்க இன்பமாக இருந்தது. பலூன், மிட்டாய், அணிமணிக் கடைகளும் அங்கங்கே ஒளிவெள்ளமும் உறவினர் கூட்டத்தின் கலகலப்பும்  ஊரை உல்லாசமாய் வைத்திருந்தது.
சூலம் போன்ற அலகு குத்தி வேண்டுதல்.

பூத்தட்டு முடிந்ததும் இந்த வாரம் நேற்று இரவு முளைப்பாரி, மதுக்குடம் ,கொண்டு வந்து கோயிலில் வைத்திருக்கின்றார்கள்.  இவற்றை சிவன் கோயில் ஊரணியில் இன்று சேர்ப்பார்கள்.

ஆணிச் செருப்பணிந்து வேண்டுதல்
இன்று பால்குடம், அலகு, காவடி, தீச்சட்டி, தீமிதி என ஒரே கோலாகலம்.  வீட்டுக்கு வீடு விருந்தினர்கள் வந்திருக்க  கிடாய், கோழி எனக் குழம்பு வாசமும் உறவினர்களின் சந்தோஷக் குரல்களும் ஆனந்தவாரியாக்குகின்றன. 
உடம்பெங்கும் அலகு குத்திக் காவடி

ஓரிருவர் உடம்பெங்கும் அலகு குத்தி காவடி எடுக்கின்றார்கள்.சிலர் வாயில் நீண்ட சூலத்தை அலகு குத்தி வந்தார்கள். கோயில் வாசலில் குலவை ஒலியுடன் அலகு நீக்கி திருநீறு போட்டு எலுமிச்சையை வைக்கின்றார்கள்.
குழந்தை எடுத்த பால்குடம்.

குலவை ஒலியுடன் குட்டிப் பிள்ளைகள் பால்குடம் எடுத்து வந்த காட்சி சிறப்பு.குடம் குடமாகப் பாலபிஷேகத்தில் முகமும் அகமும் மலரக் காட்சியளிக்கின்றாள் நம் வெக்கை நோயும் ஊழ்வினையும் தீர்க்கும் முத்துமாரி.
தண்ணீர்ப் பந்தல்.
வாசலில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர், மோர், பானகம், சர்பத் என வழங்கி இன்புறுகின்றார்கள். அங்கங்கே அன்னதானமும் நடைபெறுகின்றது.

தீச்சட்டி

மக்களுக்கு கோடையில் ஏற்படும் வெப்ப நோய்கள் தாக்காதிருக்கவும், பயிர் பச்சை செழிக்கவும். உயிரினங்கள் வாழவும், நோய் நொடியிலிருந்து உயிர் பிழைக்க வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும், வம்சம் செழிக்கவும், வியாபாரம் பெருகவும் விவசாயம் சிறக்கவும் மக்கள் வேண்டிக்கொண்டு  முளைப்பாரி, மதுக்குடம், பால்குடம் , தீச்சட்டி, தீமிதி, கரகம், காவடி, அலகு குத்துதல் போன்ற  பிரார்த்தனைகளைச் செலுத்துகின்றார்கள்.
முத்துமாரிஅம்மன் கோயில்
வாழ்க எம்மை வாழ்விக்கும் முத்துமாரி.! வளர்க என்றும் நம் அம்மன் புகழ்.!

1 கருத்து:

  1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University30 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 1:24
    காரைக்குடி கோயில் விழா நிகழ்வுகளைக் கண்டேன். இதுவரை நான் பார்த்திராத ஆணிச் செருப்பணிந்து வருதலை இப்போதுதான் பார்த்தேன். மெய்சிலிர்த்தது.

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்30 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 2:16
    பாடலும் படங்களும் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள், ஹனி மேடம்.

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்31 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 6:44
    கோவில், திருவிழா போன்ற விஷயங்கள் மகிழ்ச்சி தருபவை..... எங்களுக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது - உங்கள் பதிவின் மூலம்..

    பதிலளிநீக்கு

    முத்துசபாரெத்தினம்31 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 2:05
    காணக் கிடைக்காத காட்சியிது பங்குனியில் காரைநகர் பொங்கிவழியும்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan1 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 10:04
    நன்றி ஜம்பு சார். ஆம் சார் நானும் இங்குதான் முதன் முறையாகப் பார்த்தேன்.

    நன்றி விஜிகே சார்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி சும்மாவின் அம்மா :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan1 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 10:04
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.