எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 12 மார்ச், 2020

மாசிமகம் ரெசிப்பீஸ் & கோலங்கள்.

மாசிமகம் ரெசிப்பீஸ் & கோலங்கள்.

மாசிமகம் ரெசிப்பீஸ். :-

1.ஓட்ஸ் & நட்ஸ் பர்ஃபி
2.பூரணம் இட்லி
3.குருணை மிளகு உப்புமா
4.தானிய அடை.
5.முள்ளங்கிச் சட்னி
6.உருளை மைதா தோசை.
7.கத்திரி பீர்க்கை கடையல்
8.தக்காளி கட்லெட்
9.வெந்தயக்கீரை பக்கோடா
10.நெய்ப்பாயாசம்.

1.ஓட்ஸ் & நட்ஸ் பர்ஃபி

தேவையானவை :-
முழு ஓட்ஸ் – 2 கப், முந்திரி பாதாம் வேர்க்கடலை – தலா 6 ( வறுத்துத் தோல் நீக்கியது.) நெய் – 1 டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, ப்ரவுன் சுகர்/நாட்டுச் சர்க்கரை – 2 கப்.

செய்முறை:-
ஓட்ஸை வெறும் கடாயில் வறுத்து ஆறவிடவும். முந்திரி பாதாம் வேர்க்கடலையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஓட்ஸையும் ஒரு சுற்று சுற்றி இறக்கவும். ப்ரவுன் சுகரில் சிறிது தண்ணீர் ஊற்றி முற்றிய பாகுவைத்து அதில் உப்பையும் நெய்யையும் சேர்த்துக் கலக்கி ஓட்ஸ் & நட்ஸ் கலவையைப் போட்டுக் கிளறவும். ஒரு தட்டில் அரிசி மாவைத் தூவி ஓட்ஸ் & நட்ஸ் கலவை ஒட்டாமல் வந்ததும் கொட்டி சமமாகத் தட்டி மீதி அரிசி மாவைத் தூவித் துண்டுகள் போடவும் . ஆறியதும் எடுத்து நிவேதிக்கவும்.


2.பூரணம் இட்லி

தேவையானவை:-
இட்லி மாவு – 10 கரண்டி , பூரணம் செய்ய – தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், வெந்த கடலைப் பருப்பு – 1 கப், தூள் வெல்லம் – அரை கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை, ஒடித்த முந்திரிப் பருப்பு – 10, நெய் -1 டீஸ்பூன்.

செய்முறை:-
நெய்யில் தேங்காய்த் துருவலை வதக்கி வெந்த கடலைப் பருப்பையும் தூள் வெல்லத்தையும் போடவும். வெந்து உருண்டு வரும்போது ஏலப்பொடியும் உப்பும் போட்டு இறக்கவும். இட்லிப் பாத்திரத்தை ரெடி செய்து இட்லி மாவை ஊற்றும் போது அரைக் கரண்டி ஊற்றி அதில் இந்தப் பூரணக் கலவையில் ஒரு கரண்டி வைத்து மேலே சிறிது மாவு ஊற்றி இட்லிகளாக அவித்து எடுத்து நிவேதிக்கவும்.

3.குருணை மிளகு உப்புமா

தேவையானவை :-
பச்சரிக் குருணை – 1 கப், எண்ணெய் – 20 மிலி, கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், வரமிளகாய் – 1 , கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு – அரை டீஸ்பூன், மிளகு – 20 கொரகொரப்பாகப் பொடிக்கவும்.

செய்முறை:-
ஒரு கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும். இன்னொரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து கடலைப்பருப்பு தாளித்து மிளகாயை இரண்டாக ஒடித்துப் போட்டுக் கருவேப்பிலை சேர்க்கவும். இதில் அரிசிக் குருணையைப் போட்டு நன்கு புரட்டி உப்பு சேர்த்துக் கொதிக்கும் தண்ணீரில் வேகப் போடவும். நன்கு வெந்து பொல பொலவென ஆகும் சமயம் பொடித்த மிளகைப் போட்டு நன்கு கலந்து இறக்கி மூடி வைத்து சிறிது நேரம் கழித்து நிவேதிக்கவும்.

4.தானிய அடை.

தேவையானவை :-
கொண்டைக்கடலை, பாசிப்பருப்பு, தட்டைப் பயிறு ,கொள்ளு – தலா கால் கப், பச்சரிசி, புழுங்கலரிசி – தலா அரை கப், உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன். வரமிளகாய் – 6, பெருங்காயம் – கால் இன்ச் துண்டு, தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, கருவேப்பிலை கொத்துமல்லித் தழை – 2 கைப்பிடி, இஞ்சி – ஒரு இன்ச் துண்டு, துருவிய காரட் – ஒரு டேபிள் ஸ்பூன். உப்பு – ஒரு டீஸ்பூன் , எண்ணெய் – கால் கப்.

செய்முறை:-
கொள்ளு, தட்டைப் பயறு பாசிப்பயறை லேசாக வறுத்துக் கொண்டைக் கடலையுடன் 8 மணி நேரம் ஊறவைக்கவும். பச்சரிசி புழுங்கல்அரிசி, உளுந்தைக் கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் முதலில் மிளகாய் பெருங்காயம் உப்பு வைத்து அரைத்து அடுத்து அரிசி உளுந்தைக் கொரகொரப்பாக அரைக்கவும். அடுத்து தானிய வகைகளையும் போட்டுக் கொரகொரப்பாகச் சுற்றி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். இதில் மஞ்சள் பொடி, பொடியாக அரிந்த கருவேப்பிலை கொத்துமல்லித் தழை, இஞ்சி, காரட் சேர்த்து நன்கு கலக்கி வைத்து சிறிது நேரம் கழித்து அடைகளாகச் சுட்டு நிவேதிக்கவும்.


5.முள்ளங்கிச் சட்னி:-

தேவையானவை :-
முள்ளங்கி – 2, தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய்- 8, உப்பு – அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் -10, பூண்டுப்பல் – 1, பெருங்காயம் – 1 சிட்டிகை, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன் , கருவேப்பிலை- 1 இணுக்கு.

செய்முறை:-
முள்ளங்கியைத் தோல்சீவித் துருவவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வரமிளகாயை வறுத்து எடுத்து வெங்காயத்தை வதக்கவும். அதிலேயே முள்ளங்கியையும் போட்டுப் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். ஆறியதும் பூண்டு மிளகாய், உப்பு தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும். பெருங்காயப்பொடி போட்டு மிச்ச ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து கொட்டி தேவையான தண்ணீர் சேர்த்துக்கலக்கி உபயோகிக்கவும்.

6.உருளை மைதா தோசை. :-

தேவையானவை. :-
உருளைக்கிழங்கு – 2 , மைதா – 2 கப், தூளாக அரிந்த வெங்காயம் – 1 டேபிள் ஸ்பூன், தூளாக அரிந்த பச்சை மிளகாய் – 2, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 20 மிலி

செய்முறை:-
உருளைக்கிழங்கைத் தோல் சீவி மாவு போலத் துருவவும். இதில் மைதாவைப் போட்டு நன்கு உப்பு சேர்த்துத் தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.தூளாக அரிந்த வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்துக் கரைத்து ஐந்து நிமிடங்கள் வைத்து தோசைக்கல்லில் மெல்லிய தோசைகளாக வார்த்துத் திருப்பிப் போட்டு எடுக்கவும். நிவேதிக்கவும். 

7.கத்திரி பீர்க்கை கடையல்

தேவையானவை:-
கத்திரிக்காய் – 4 , பீர்க்கங்காய் – 1, தக்காளி – 2, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,சாம்பார்த்தூள் – 1 டீஸ்பூன், எண்ணெய்- 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து சீரகம் தலா – 1 டீஸ்பூன், பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை, கொத்துமல்லித்தழை – 1 டேபிள் ஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன்

செய்முறை:-
கத்திரி பீர்க்கை தக்காளி பெரியவெங்காயம் பச்சை மிளகாயைப் பொடிப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாயை வதக்கி அதன் பின் கத்திரிக்காய் பீர்க்கையை நன்கு வதக்கவும் தக்காளியைச் சேர்த்து வதக்கி மஞ்சள்தூள், சாம்பார்த்தூள் போடவும். உப்பைச் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு ஐந்து நிமிடம் வேகவைத்து இறக்கவும். பெருங்காயப் பொடி பொடியாக அரிந்த கொத்துமல்லித்தழை தூவி நன்கு கடைந்து பரிமாறவும்.


8.தக்காளி கட்லெட்

தேவையானவை :-
ஆப்பிள் தக்காளி – 8, உருளை, காரட், பீன்ஸ் பட்டாணி, காலிஃப்ளவர் – சேர்த்து இரண்டு கப், பெரிய வெங்காயம் ஒன்று, இஞ்சி – அரை இன்ச், பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு டேபிள் ஸ்பூன், துருவிய சீஸ் – 1 டீஸ்பூன், வெண்ணெய் – 1 டீஸ்பூன், வறுத்த முந்திரி – 10 நான்காக ஒடிக்கவும். மைதா – அரை கப், மிளகாய்த்தூள் + உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-

ஆப்பிள் தக்காளியை மேல் பக்கம் மூடி போல வெட்டி உள்ளே இருக்கும் சதைப் பாகத்தைக் குடைந்து வைக்கவும். உருளை காரட் பீன்ஸ் காலிஃப்ளவரை பெரியவெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி, கொத்துமல்லித்தழையைச் சின்னமாக நறுக்கி வைக்கவும். இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி மற்ற காய்கறிகளை வதக்கி தக்காளியின் சதைப் பாகத்தைச் சேர்க்கவும். மிளகாய்ப் பொடி கரம்மசாலாப் பொடி உப்பு சேர்த்து நன்கு சுருள வெந்ததும் இறக்கி வெண்ணெய் துருவிய சீஸ், கொத்துமல்லித்தழை வறுத்த முந்திரி சேர்த்து நன்கு பிசையவும்.  இந்தக் கலவையை தக்காளிக்குள் வைத்து நன்கு ஸ்டஃப் செய்து மேலே சிறிது மைதா எடுத்து பேஸ்ட் மாதிரி செய்து நறுக்கிய மூடியை வைத்து மூடவும். மிச்ச மைதாவில் உப்பு மிளகாய்த்தூள் கலந்து பஜ்ஜி மாவு போல கரைத்து தக்காளியை முழுதால அதில் புரட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.


9.வெந்தயக்கீரை பக்கோடா:-

தேவையானவை :-
கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – கால் கப், பொடியாக அரிந்த வெந்தயக் கீரை – அரை கப், உப்பு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், மிளகு – 10, எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
கடலைமாவில் அரிசி உப்பு மிளகாய்ப் பொடி வெந்தயக் கீரை சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் காய்ந்த எண்ணெயை ஊற்றி நன்கு கலக்கி அதன் பின் லேசாக தண்ணீர் தெளித்துப் பிசையவும். காய்ந்த எண்ணெயில் பக்கோடாக்களாக உதிர்த்துப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். நிவேதிக்கவும்.

10.நெய்ப்பாயாசம்.

தேவையானவை :-
பச்சரிசி – ஒரு கப், நெய் – ஒரு கப், துருவிய மண்டை வெல்லம் – 2 கப், பல்லுப் பல்லாக நறுக்கிய தேங்காய் – அரை கப், முந்திரி கிஸ்மிஸ் – தலா 20, ஏலப்பொடி – கால் டீஸ்பூன்.

செய்முறை:-
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து பச்சரிசியைக் களைந்து வேகப்போடவும். பாதி வெந்ததும் துருவிய வெல்லத்தைச் சேர்க்கவும். சிறிது நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுக்கவும். இன்னும் சிறிது நெய் ஊற்றி தேங்காயையும் பொன்னிறமாக வறுக்கவும். அரிசியும் வெல்லமும் கரைந்து வரும்போது நெய்யைச் சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறிக் கொண்டே வரவும். நன்கு வெந்ததும் தேங்காய்ப் பல், முந்திரி கிஸ்மிஸை சேர்த்து ஏலப்பொடி தூவி இறக்கி நிவேதிக்கவும். 

ிஸ்கி:- இந்த ிவங்கள் 25.2.2016 குமம் பக்ி ஸ்பில் வெளியானை.

1 கருத்து:

  1. வை.கோபாலகிருஷ்ணன்9 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 4:44
    1.ஓட்ஸ் & நட்ஸ் பர்ஃபி, 2.பூரணம் இட்லி 3.குருணை மிளகு உப்புமா 4.தானிய அடை.
    5.முள்ளங்கிச் சட்னி, 6. உருளை மைதா தோசை. 7.கத்திரி பீர்க்கை கடையல் 8.தக்காளி கட்லெட், 9.வெந்தயக்கீரை பக்கோடா 10.நெய்ப்பாயாசம் என அனைத்து செய்முறைகளும் அருமை. பிரசுரம் ஆனதற்கு பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். பிரஸாதமாக 9 & 10 மட்டும் கொஞ்சம் பார்ஸல் அனுப்புங்கோ. :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan16 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 3:57
    நிச்சயம் விஜிகே சார் :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan16 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 3:57

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.