எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 அக்டோபர், 2020

சீர்மிகு சென்னையின் முப்பெரும் சக்திகள்.

சீர்மிகு சென்னையின் முப்பெரும் சக்திகள்.

ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹேண்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா.
நீரும் நெருப்பும் ஃப்ரெண்ட்ஷிப் ஆனது உன்னாலீஸ்வரா.
மயிலையிலே கபாலீசுவரா.
கயிலையிலே பரமேஸ்வரா..

என்ற பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மயிலை கபாலீஸ்வரரை ஒரு இரவு நேரத்தில் சென்று தரிசித்த போது இந்த கோபுர மின்விளக்கு  அலங்காரம் கண்ணைக் கவர்ந்தது.

ஏழு நிலை கொண்ட ராஜ கோபுரம் கிழக்கிலும் மூன்று நிலை கொண்ட கோபுரம் மேற்கிலும் அமைந்துள்ளது.  கற்பகாம்பாள் மயில் ரூபத்தில் தவமிருந்து கபாலீஸ்வரரை  வணங்கி வந்ததால் இந்த ஊருக்கு மயிலாப்பூர் என்று பெயர். எப்போதும் ஏதேனும் விசேஷம் நடந்து கொண்டிருக்கும் கோயில் இது. அகந்தை கொண்ட பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் இவர் கபாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் ஜெகத்தீஸ்வரர், அருணாசலேஸ்வரர், விஸ்வநாதர்,  சந்திரசேகரர், அண்ணாமலையார், உண்ணாமுலையார், மீனாக்ஷி சுந்தரேஸ்வரர், திருஞான சம்பந்தர், பூம்பாவை ஆகியோருக்கு தனிச்சந்நிதி உள்ளது. அறுபத்துமூவர், நர்த்தன விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை ஆகியோரும் அருள் பாலிக்கிறார்கள்.

 இக்கோயிலின் ஒரு வாயிலில் எந்த வாகனம் எந்தக் காரணத்துக்காக என்று போர்டில் எழுதி வைத்துள்ளார்கள்.  தீர்த்தம் கபாலி தீர்த்தம் , ஸ்தலவிருட்சம் புன்னை மரம்.

கோயிலுக்குள்ளேயே கோசாலையும் அமைந்துள்ளது. !!



சுவாமி உலா வரும்போது வாகனம் தாங்குக் கட்டைகள். தூரத்தில் கொடிமரம். பிரகாரத்தில் உபன்யாசம், உற்சவம்  போன்றவை நடத்த ஒரு பெரிய மண்டபமும் இருக்கிறது. மிக அழகான அருமையான இக்கோயிலை ஒருமுறையேனும் தரிசித்து வாருங்கள்.

கோயில் புனருத்தாரணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அடுத்து குருக்ஷேத்திரப் போரில்  பார்த்தனுக்கே சாரதியான பார்த்தசாரதி குடி கொண்டிருக்கும் திருவல்லிக்கேணி. இதையும் இன்னொரு நாள் இரவில் சென்று தரிசித்தோம். அனைவரும் வந்து வணங்கி வணங்கி அருளாட்சி பெற்ற ஸ்தலம்.

அன்று ராமநவமி உற்சவம் என்பதால் பட்டர்கள் அனைவரும் ஒன்று கூடி நின்று ராமனுக்காக பாடல்கள் பாடி இந்த கோபுர வாசல் இருபுறமும் நின்று சேவித்துக் கொண்டிருந்தார்கள். மிக அழகான காட்சி. புகைப்படம் எடுக்கலாமோ கூடாதோ என எடுக்கவில்லை. ராமர் கோயிலுக்குள் பல்லாக்கில் உலா வந்தார்.

இதுவும் எட்டாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்ட வைணவக்கோயில். நரசிம்மருக்கு மிகப் பெரிய தனிச்சந்நிதி , தனிக் கொடிமரம். பார்த்தசாரதி சன்னிதிக்குப் பின்புறம் உள்ள வாயிலில் இவர் கோயில் கொண்டுள்ளார்.

பார்த்தசாரதிப் பெருமாள் கிழக்கு நோக்கிய திருமுகம். ஐந்து நிலை ராஜ கோபுரம். கர்ப்பக்கிரகத்தின் உள் பக்கம் ஆஞ்சநேயர், ராமர், காட்சி தருகிறார்கள். மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர், தாயார் பெயர்  வேதவல்லி. ராமானுஜர், ஆண்டாள், அழகிய சிங்கர், ஆழ்வார்கள் ஆகியோரும் பிரகாரத்தில் கோயில் கொண்டிருக்கிறார்கள்.

இக்கோயிலில் என்னைக் கவர்ந்த அம்சம் கம்பீரமான தோற்றத்துடன் நின்ற கோலத்தில் பெருமாள் மீசையுடன் காட்சி அளிப்பதே. மேலும் பார்த்த சாரதி என்பதால் சங்கம் மட்டும் உண்டு. கதாயுதம் மற்றும் சக்கரம் கிடையாது.
அதே திருவல்லிக்கேணியில் இக்கோயிலின் பின்புறம்  பாரதியார் இல்லமும் மகான் ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனமும் இருக்கிறது. திருவேங்கடநாதனாக அவதரித்த ராகவேந்திரர் பெருமாளின் அம்சம்.

“பூஜ்யாய ராகவேந்திராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே “

என்ற பூர்வ மந்திரத்தைச் சொல்லியபடி வலம் வந்து அக்ஷதை வாங்கி அமர்ந்து தியானித்து வந்தோம்.
மூன்றாவதாக சென்னை பாரீஸ் கார்னரில் இருக்கும் காளிகாம்பாள் கோயில். இந்த எல்லாக் கோயில்களுக்கும் இருவேறு  திசையிலும் கோபுரங்கள் உண்டு. மேலும் இம்மூன்று கோயில்களிலும்  ஒரு ஒற்றுமை முக்கியக் கடவுள் உள்பக்கமாகக் கோயில் கொண்டிருப்பதே.

ராஜகோபுரம் நோக்கிய சந்நிதியாக இல்லாமல் உள்பக்கம் கொடிமரம் அமைந்துள்ளது. காளிகாம்பாள் கோயிலிலும் இந்த மூன்று நிலை ராஜ கோபுரம் முன்பு காளிகாம்பாளும், இதன் பின்புறம் அமைந்த வள்ளி தெய்வானை, பாலசுப்ரமண்யர் சந்நிதி ஐந்து நிலை ராஜகோபுரம் நோக்கியும் அமைந்துள்ளது.

அந்த கோபுரத்தின் வழி நுழைந்தால் வலப்பக்கச் சுவரில் மிகப் பிரம்மாண்டமான சுதைச் சிற்பமாக ருத்ர ரூபிண்யையாக அமர்ந்த கோலத்தில் நாக்கு எல்லாம் வெளியே தொங்க காளிகாம்பாள் காட்சி அளிக்கிறாள். பார்த்தவுடன் புல்லரிக்க வைத்த திருக்கோலம்.

இந்த மேற்கு வாயிலில் வந்தால் வலமாக க்யூவில் வந்து விநாயகர், பின்புறம் மற்றும் உட்புறம் சந்நிதி கொண்டுள்ள காளிகாம்பாளை வணங்கி வெளியே வந்து  பாலசுப்ரமண்யரையும் வணங்கி அமரலாம்.

ஆனால் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் பிரகாரத்தில் கூட்டம் அள்ள மூச்சு முட்டுகிறது. ஆட்களை அளந்து அளந்துதான் விடுகிறார்கள். ஆனாலும் இரு லைன்கள் செல்ல போதிய இடைவெளியிருந்தும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.

ஓரளவு வந்து கருவறையில் கனிவாகக் காட்சி தந்த சின்னஞ்சிறு பெண்போன்ற காளிகாம்பாள் அம்மனை வணங்கி வந்தோம். பக்கத்திலேயே கமடேஸ்வரர் கோயில் கொண்டுள்ளார். சண்டேசரும் நந்தியும் கூட காளிகாம்பாள் சந்நிதிக்கு பக்கத்தில் சிவனாருடன் எழுந்தருளி இருக்கிறார்கள்.
வெய்யில் கொளுத்தும் வேளையிலும் இவர்களை தரிசித்து மீண்டால் வொயிட்ஸ் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோயில் மதியம் பன்னிரெண்டுக்குமேல் கூட திறந்திருந்தது. இதன் பக்கம்தான் ரத்னவிநாயகர் கோயிலும் இருக்கிறது. சத்யம் தியேட்டர் பக்கம். இக்கோயிலும் ஐந்து நிலை ராஜ கோபுரம். அனைத்து தெய்வங்களும் அருளாட்சி புரிகிறார்கள். மிகப் பெரிய கோவில் இது.
வாய்ப்பிருந்தால் சென்னை செல்லும்போது இக்கோயில்களைத் தரிசித்துவிட்டு வாருங்கள். பெஸண்ட் நகர் அஷ்டலெக்ஷ்மி, (மாங்காடு , திருவேற்காடு அம்மன்கள் பற்றி முன்பே எழுதி உள்ளேன். ) பற்றி இன்னொருதரம் எழுதுகிறேன்.  

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்13 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 10:37
    அருமையான விளக்கம்...

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu13 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 10:44
    கோயில்கள் பற்றி நலல் விவரங்கள். நான் சென்னை வ்ந்தால் போது கயிலை செல்லாமல் செல்வதில்லை பெரும்பாலும்.

    கீதா: இக்கோயில்கள் பல முறை தரிசனம் செய்த்துண்டு...கூட்டம் இல்லாத நாட்களில்..கூட்டம் என்றால் கோயில் பக்கம் செல்வதே இல்லை..

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam13 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:16
    காபாலி என்பவனைக் காணக் கண்கோடி வேண்டும் என்னும் பாடல்நினைவுக்கு வந்ததுமுன்பெல்லாம் சென்னைக்கு வந்தால் கபாலி கோவிலைக்காஆமல் போவதில்லை ஒரு முறைகோவில் கும்பாபிஷேகம் சமயத்தில் தரிசனம் செய்தது முண்டு சென்னையில் ஒரே நாளி தைசனம் செய்தால் புண்ணியம் என்று சொல்லப்படும் மூன்று கோவில்கள் பற்றிய பதிவோ என்று நினைக்க வைத்தது

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan18 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 7:22
    நன்றி டிடி சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    நன்றி பாலா சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.