எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 4 ஏப்ரல், 2020

ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.

ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.

திருக்கோயில்களுக்குச் செல்லும்போதெல்லாம் என்னைக் கவர்ந்த இடங்கள் அதன் ஊருணிகள்தான். நன்கு மகிர மகிர நீர் நிறைந்து தெப்பக்குளங்கள் அழகுறக் காட்சி அளிக்கும். ஊரணி ( ஊருணி) , குளம், புஷ்கரணி, தடாகம், வாவி, தீர்த்தக் குளம்,  எல்லாமே ஒன்றுதான். கோயிலுக்குச் செல்வோர் முதலில் இந்தத் தீர்த்தத்தைத் தம்மேல் தெளித்துக் கொண்டு ( ப்ரோக்‌ஷணம் செய்து கொண்டு ) கால்களை சுத்தம் செய்து கொண்டு உள்ளே சென்று இறைவனை வணங்குவர்.

எனக்கு எப்போதும் ஏதோ ஒரு மையல் அந்த மகிர்ந்து கிடக்கும் நீரின் மீதும், பசியப் படர்ந்து கிடந்து கிளர்ச்சியைத் தூண்டும் பசுமைகளின் மீதும். சில ஊரணிகள் ப்ளேக்ரவுண்ட் மாதிரி காலியாக இருந்தாலும் சிறிதளவாவது நீர் இருக்கும்

பொதுவாக தென்னகக் கோயில்களின் கட்டுமானங்களில் சிறந்தது இந்தத் திருக்கோயில் புஷ்கரணிகள்தான். இவை பெரும்பாலும் சதுர வடிவில் அமையும். நாற்புறமும் படிகள். நாற்புறமும் ஒவ்வொரு கரையிலும் இரு இடங்களில் படிகள் இருக்கும். சில செவ்வக வடிவிலும் வெகு அரிதாக சில வட்ட வடிவிலும் அமைவதுண்டு.

நல்ல கட்டுமானத்தோடு தூர் வாரப்பட்டுப்பராமரிக்கப்படும். மேலும் இக்குளங்களில் ஈசான்ய மூலையில் ஒரு கிணறு கட்டாயம் இருக்கும். இன்னும் ஊரணிக்குள்ளே  சில பல இடங்களிலும் இருக்கலாம். ஊரணியில் நீர் வற்றிய தருணங்களில் இவற்றில் சிலர் நீர் இறைப்பதை காரைக்குடி நகரச் சிவன்கோயிலில் பார்த்திருக்கிறேன்.

தெப்பம் மிதக்கும் காட்சியை மனக்கண்ணுள் கொண்டுவரும் தெப்ப மண்டபத்தோடு இருக்கும் இத்திருக்குளம் காரைக்குடி திருக்கோயிலூரில் உள்ளது . என்றைக்கும் நீர் குறையாது. இம்மாதிரிக் குளங்களுக்கு கம்மாய் - கண்மாய் போன்ற மற்ற நீர் தேங்கும் இடங்களில் இருந்து நீர் வரத்து இருந்துகொண்டே இருக்கும்.
இது அதே திருக்கோயிலூரில் உள்ளே நுழைந்ததும் காணப்படும் ஊரணி. படிகளின் கட்டமைப்புகளையும் கரைகள் பலப்படுத்தப்பட்டிருப்பதையும் பாருங்கள்.
ஸிக் சாக் போல இறங்கும் படிகள் பிரம்மாண்டக் குளம்.
அதே குளத்தில் ஏதோ மினார் போன்ற அமைப்பு, உப்பரிகை போன்றும் தோன்றுது. அடுத்துப் போகும்போது பார்த்து வரணும். படிகளுக்கும் கம்பீர பார்டர். செம்புறாங்கற்களினால் அமைக்கப்பட்டிருக்கு.
இது காரைக்குடியில் செக்காலைச் சிவன் கோயில் ஊரணி. நான் பார்த்த மிக அழகான ஊரணிகளில் இதுவும் ஒன்று. எப்போதும் தாமரை பூத்த தடாகம்தான்.படிகள் நாற்புறமும் இறங்குவது அழகோ அழகு.
இது வைரவன்பட்டி திருக்கோயிலின் புஷ்கரணி. வைரவதீர்த்தம். இதன் படிமுகத்தைப் பாருங்களேன் கொள்ளை அழகு. யானை போன்ற ஒரு அமைப்பு இருக்கு.தூரத்தே பாருங்கள் இதற்குத் தண்ணீர் வரத்து எங்கிருந்தோ வந்து பொங்கி ஊத்துது (படியை ஒட்டிப் பாருங்கள்)

அதே ஊரணி இன்னொரு கோணத்தில். 
அதே தீர்த்தத்தின் நடைபாதையும் திருக்குளத்தின் படியைக் காக்கும் யாளி போன்ற அமைப்பும்.
இது கானாடு காத்தான் - செட்டிநாட்டில் உள்ள விநாயகர் கோயில் ஊரணி. பொதுவாக இந்தப் பக்கம் உள்ள ஊரணிகள் வற்றுவதே இல்லை. அதேபோலத்தான் கிணறுகளும். எப்பவும் தண்ணீர் இருக்கும்.. நீர் சேமிப்பு அப்படி.
இது பேரையூர் நாகநாத சாமி கோயிலில் புஷ்கரணி. வடிவற்ற அரைக்கோள புஷ்கரணி.
அதே கோயிலின் வெளியில் உள்ள தாமரைத் தடாகம்.
அல்லியும் ஆம்பலும் குமுதமும் கொட்டிக் கிடக்கும் இந்த வாவி காரைக்குடியில் இருந்து கோட்டையூர் செல்லும் வழியில் உள்ளது. இது வட்டக் குளம். வட்ட வடிவில் அமைக்கப்பட்டது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் இது இப்படியே இருக்கு. பயணத்தின் போது தெரிந்த சிநேகிதியைப் பார்ப்பது போல இவளைத் தவறாமல் தரிசித்து விடுவேன். நீர் ததும்பும் ப்ரியம்.
இது புதுவயலிலிருந்து கண்டனூருக்குச் செல்லும் வழியில் கண்டனூர் சிவன் கோயிலின் முன்பு உள்ள ஊரணி. தண்ணீரை விடப் பசுமையும் தாமரையும் ஜாஸ்தி :)
மிக அற்புதமாக கவர்ச்சியோடு இருக்கும் இக்குளம் இரணியூரில் உள்ள நீலமேகப் பெருமாள் கோயிலின் முன்புறம் உள்ள புஷ்கரணி. ஆனால் பாசி படிந்து பசலைபீடித்துக் கிடக்கிறது.

நான் பார்த்து ரசித்த மிக அழகான இவ்வூரணிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. கொஞ்சம் ப்ரோக்‌ஷணம் செய்துகொள்ளுங்கள். :)

டிஸ்கி:- ஊரணியா , ஊருணியா ( ஊறும் நீர் கொண்டது - ஊற்று நீர் கொண்டது ) என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நெல்லைத் தமிழன் பின்னூட்டத்துக்குப் பிறகு ஊருணி என மாற்றி இருக்கிறேன்.  நன்றி நெல்லைத் தமிழன் :)

1 கருத்து:

  1. நெல்லைத் தமிழன்20 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:45
    பொன்னமராவதி பக்கத்திலும் ஊருணிகளைப் பார்க்கலாம். அவை ஊருக்கே அணியாக இருந்த போதிலும் (ஊரணி), ஊருணி என்பதே சரி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:21
    செட்டிநாட்டுப் பகுதிகளில் வடிவழகான ஊருணிகளைப் பார்க்கலாம். பொன்னமராவதி சென்றதில்லை. சென்றால் பார்க்கிறேன். நீங்கள் கூறியபடி திருத்தி உள்ளேன் நெல்லைத் தமிழன் சகோ. நன்றி :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:21
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்24 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:07
    ஊருணிகள் - அழகு. பெரும்பாலான ஊர்களில் இப்படி இருந்த ஊருணிகள் அழிந்து போனது சோகம்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 11:49
    ஆம் வெங்கட் சகோ . ஹ்ம்ம்.

    பதிலளிநீக்கு

    Unknown31 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:32
    Super sister

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.