எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 3 டிசம்பர், 2019

நவராத்திரி ரெசிப்பீஸ் & கோலம்ஸ். குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

நவராத்திரி ரெசிப்பீஸ் & கோலம்ஸ். குமுதம் பக்தி ஸ்பெஷலில்.


இந்த ரெசிப்பீஸும், கோலங்களும் செப்டம்பர் 16 - 30, 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. . 

1.சீரக சாதம் :-
தேவையானவை:-
சீரக சம்பா அரிசி/ பாசுமதி அரிசி/பச்சரிசி- 1 கப்
சீரகம் – 2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 10
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1/3 டீஸ்பூன்
செய்முறை:-
சீரக சம்பா, பாசுமதி. பச்சரிசி இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஒரு கப் எடுத்துக் களைந்து வைக்கவும். ஒரு பானில் நெய் ஊற்றி சீரகம், முந்திரி தாளிக்கவும். முந்திரியை எடுத்து விட்டு அரிசியை வதக்கி இரண்டு கப் தண்ணீர் ஊற்றி உப்புப் போட்டு இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். ஆறியதும் திறந்து முந்திரி சேர்த்து நிவேதனம் செய்யவும்.

2.மிளகு சாதம்:-
தேவையானவை:-
சீரக சம்பா சாதம்  - 2 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து – 2 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்
செய்முறை:- சீரக சம்பா அரிசியைக் களைந்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேகவைத்து ஒரு பேசினில் உதிர்த்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் உளுந்தை வாசனை வரும் பக்குவத்தில் வறுத்து மிளகை கடைசியில் சேர்த்து லேசாக வறுத்து இறக்கவும். உப்புடன் சேர்த்துப் பொடித்து சாதத்தில் தூவி நெய்யை உருக்கி ஊற்றிக் கலந்து நிவேதிக்கவும்.
3. கேரட் புட்டு:-
தேவையானவை:-
பாசிப்பருப்பு – 1 கப்
கேரட் – 1 கப் துருவியது
தேங்காய் – ½ கப் துருவியது
வெல்லம் – ½ கப் துருவியது
ஏலப்பொடி – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- பாசிப்பருப்பை வறுத்துக் கால்மணி நேரம் ஊறவைத்து கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் காரட் துருவலைக் கலந்து உப்புப் போட்டு குக்கரில் அல்லது இட்லி பாத்திரத்தில் வேகவைக்கவும். வெந்ததும் கட்டிகள் இல்லாமல் உதிர்க்கவும். இதில் பொடித்த ஏலக்காய், துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்துக் கலந்து நிவேதிக்கவும்.

4. முலாம்பழ விதை சிக்கி:-
தேவையானவை:-
முலாம்பழ விதைகள் – 1 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
சீனி – 1 ½ கப்
பால் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – ½ கப்
செய்முறை:-
முலாம்பழ விதைகளை தூசி இல்லாமல் சுத்தம் செய்யவும். ஒரு கடாயில் நெய்யை ஊற்றி முலாம்பழ விதைகளைப் போட்டு சிவப்பாகும்வரை வறுக்கவும். விதைகள் தெறித்தால் ஒரு கையால் மூடியை லேசாக மூடியவாறு பிடித்து மறு கையால் வறுக்கவும்.
சீனியில் தண்ணீரை ஊற்றிக் கம்பிப்பாகு வைக்கவும். கொதிக்கும்போது பால் ஊற்றினால் அழுக்கு நுரைத்து வரும் அதை நீக்கிவிட்டு வறுத்த முலாம்பழ விதைகளைப் போட்டுஇரண்டு நிமிடம் கிளறவும்.
ஒரு தட்டில் நெய் தடவி இந்தக் கலவையை அரை இன்ச் கனத்துக்கு ஊற்றவும். 10 நிமிடங்களில் லேசாக இறுக ஆரம்பிக்கும்போது டைமண்ட் துண்டுகளாக கட் செய்து நிவேதிக்கவும்.

5. தாமரைவிதைப் பாயாசம்:-
தேவையானவை:-
பால் – 1 லிட்டர்
தாமரை விதை – 1 கப் ( நான்கு துண்டுகளாக நறுக்கவும்)
முந்திரிப்பருப்பு – 20 ( நான்காக ஒடிக்கவும்)
பாதாம் பருப்பு – 20 ( துண்டுகளாக கத்தியில் நறுக்கவும் )
கிஸ்மிஸ் – 2 டேபிள் ஸ்பூன்
பிஸ்தா – 1 டேபிள் ஸ்பூன்
கொப்பரை – பட்டையாக சீவியது 1 டேபிள் ஸ்பூன்
சீனி – ½ கப்
ஏலகாய்த் தூள் – ½ டீஸ்பூன்
செய்முறை:-
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் கொதிக்கும்போது நான்காக நறுக்கிய தாமரை விதை, பாதாம், பிஸ்தா, முந்திரி, கிஸ்மிஸ், பட்டையாக சீவிய கொப்பரை போட்டு வேக விடவும். அடி பிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும்.சிறு தீயில் அரைமணி நேரம் வெந்ததும் சீனி சேர்க்கவும். சீனி கரைந்து கொதித்ததும் ஏலப்பொடி தூவிக் கலந்து இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.. சுவாமிக்கு நிவேதனம் செய்யவும்.

6. சாபுதானா கிச்சடி:-
தேவையானவை:-
ஜவ்வரிசி – 1 கப்
எண்ணெயும் நெய்யும் கலந்து – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
சீரகம் – ½ டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 2 இரண்டாக கீறவும்.
வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – ½ டேபிள் ஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 1 இரண்டாக கிள்ளவும்.
இஞ்சி – 1 இன்ச்  - துருவவும்.
( பனீர் – 20 கி துண்டுகளாக்கியது, விரும்பினால் சேர்க்கவும் )
உருளைக்கிழங்கு – 1 சிறியது
உப்பு – ½ டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லி, கருவேப்பிலை – பொடியாக அரிந்தது 1 டீஸ்பூன்.

செய்முறை:-
ஜவ்வரிசியைக் கழுவி சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். உருளையைத் தோல்சீவி சதுரத் துண்டுகளாக்கவும், பனீரையும் சதுரத் துண்டுகளாக்கவும்.
கடாயில் எண்ணெயையும் நெய்யையும் சூடாக்கி உருளைத் துண்டுகளை பொன்னிறமாகும்வரை வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். இதேபோல் பனீரையும் பொன்னிறமாக வதக்கி எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் சீரகம், பெருங்காயத்தூள், பச்சைமிளகாய், வரமிளகாய், இஞ்சி, வேர்க்கடலை, கடலைப்பருப்புப் போட்டுத் தாளிக்கவும். ஊறவைத்த ஜவ்வரிசியை உப்பு சேர்த்து ( விரும்பினால் சிறிது மிளகும் சேர்த்து ) கரண்டியால் நன்கு கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி மெல்லிய தீயில் மூடி போட்டு வேக விடவும்.  
ஜவ்வரிசி நன்கு கண்ணாடி போல் வெந்ததும் உருளை, பனீர்துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி கருவேப்பிலை கொத்துமல்லி தூவி நிவேதனம் செய்யவும்.

7. அவல் வடை:-
தேவையானவை:-
கைக்குத்தல் அவல் – 1 கப்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி மாவு  - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும்.( விரதம் என்றால் சேர்க்க வேண்டாம். )
பச்சை மிளகாய் – 2 பொடியாக அரியவும்.
சீரகம் – ½ டீஸ்பூன்
இஞ்சி – 1 டீஸ்பூன் துருவியது
கருவேப்பிலை கொத்துமல்லி – 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது.
உப்பு – 1/3 டீஸ்பூன்.
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.
செய்முறை:-
அவலை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒரு முறை தண்ணீர் ஊற்றி லேசாகக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும் அதில் கடலை மாவு, பச்சரிசி மாவு, பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், இஞ்சி , கருவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து மெல்லிய வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொறித்தெடுக்கவும். நிவேதிக்கவும்.  

8. சாமை உருளை போண்டா:-
தேவையானவை:-
சாமை மாவு – 1 கப்
அவித்த உருளை – 2
ராக் சால்ட் – ½ டீஸ்பூன்
மிளகுப் பொடி – ½ டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 2 பொடியாக அரியவும்.
கருவேப்பிலை கொத்துமல்லி –  2 டீஸ்பூன் பொடியாக அரிந்தது.
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
சாமை மாவைப் போதிய தண்ணீர் ஊற்றிக் கட்டிகள் இல்லாமல் கலக்கவும். அதில் ராக் சால்ட், மிளகுப் பொடி, பச்சைமிளகாய், கருவேப்பிலை கொத்துமல்லி இவற்றில் பாதியை போட்டுக் கலக்கவும். அவித்த உருளைக்கிழங்கை உதிர்த்து மீதி ராக்சால்ட், மிளகுப்பொடி, பச்சைமிளகாய், கருவேப்பிலை கொத்துமல்லியைச் சேர்த்துப் பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டவும்.
எண்ணெயைக் காயவைத்து உருளை உருண்டைகளை சாமை மாவில் நன்கு தோய்த்து போண்டாக்களாகப் பொரித்தெடுக்கவும்.

9. பார்லி வேர்க்கடலை சுண்டல்:-
தேவையானவை :-
பார்லி – 1 கப்
பச்சை வேர்க்கடலை – ½ கப்
தேங்காய் – ¼ கப் துருவியது
பச்சைமிளகாய் – 2 இரண்டாகக் கீறவும்
இஞ்சி – 1 இன்ச் துருவவும்.
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – ¼ டீஸ்பூன்
உளுந்து – ¼ டீஸ்பூன்
சீரகம் – ¼ டீஸ்பூன்
கருவேப்பிலை கொத்துமல்லி – 2 டீஸ்பூன் பொடியாக அரிந்தது.
உப்பு – 1/3 டீஸ்பூன்

செய்முறை:-
பார்லியைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பச்சை வேர்க்கடலை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி குக்கரில் 4, 5 விசில் வரும்வரை நன்கு வேகவிடவும்.  கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, சீரகம், இஞ்சி, கருவேப்பிலை, பச்சைமிளகாய், கொத்துமல்லி தேங்காய்த்துருவல் வதக்கி அதில் அவித்த கடலை பார்லியைப் போட்டு உப்பு சேர்த்து வதக்கி எடுத்து நிவேதனம் செய்யவும்.

1 கருத்து:

  1. 'பரிவை' சே.குமார்6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 10:29
    மிகச் சிறப்பான குறிப்புக்கள்....
    வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்6 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:04
    வாழ்த்துகள். குறிப்புகள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்6 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 6:24
    வீட்டில் சொல்லி முலாம்பழ விதை சிக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:05
    நன்றி குமார்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி தனபாலன் சகோ :) செய்து பார்த்தீங்களா.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:06
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.