எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 16 அக்டோபர், 2020

மெய்யாத்தாள் படைப்பு.

மெய்யாத்தாள் படைப்பு.

காரைக்குடியில் மெய்யாத்தா செட்டியப்ப  ஐயா படைப்பு கடந்த ஃபிப்ரவரி 14 அன்று நிகழ்ந்தது. எல்லாப் படைப்பையும் விட இந்தப் படைப்புக்கு அதிக கூட்டம். ஏனெனில் அனைவருமே வந்து பங்கேற்கலாம் என்பதே இதன் சிறப்பு. மற்றைய படைப்புகள் ( அக்கினி ஆத்தா, பாப்பாத்தி, அழகன் செட்டி ) போன்ற படைப்புகள் அவரவர் ஐயாக்கள் வீடுகள் , பங்காளிகள் வீடுகள் மட்டுமே பங்கேற்கக்கூடியதாக இருக்கும்.

அனைத்துமே வருஷப் படைப்பாக இருக்கும். மாசி மாசம் என்பது படைப்பதற்கு உகந்த மாதமாக இருக்கிறது. சிலர் ஆடியிலும் படைக்கிறார்கள். முன்னோரை வணங்குவதும், குலதெய்வத்தை வணங்குவதும் வாழ்க்கைக்கான காப்பு.

எங்கள் மெச்சி பெரியத்தா ( மெய்யம்மை ) ஆவிச்சி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் அவ்வப்போது மெய்யாத்தா படைப்புப் பற்றியும் அனைவரும் வரலாம் என்பது பற்றியும் கூறி புடவை வாங்கி வைப்பதாகக் கூறுவார்கள். அதே சமயம் அங்கே வைக்கப்படும் புடவைகளைப் படைப்பு முடிந்ததும் ஏலத்தில் எடுக்கவும் பலர் போட்டி போடுவார்கள். ஏனெனில் இங்கே போழை/பேழை கட்டாமல் ( அதில் வைக்கப்படாமல் )  அந்தப் புடவைகள் அவ்வப்போது ஏலம் விடப்படுவதுண்டு. குழந்தைப் பேறு வேண்டுவோர், திருமணம், வேலை கிடைக்க வேண்டுவோர் இவற்றை ஏலத்தில் எடுப்பார்கள்.

இந்த வருடம் அந்தப் புகழ் பெற்ற படைப்பில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் அமைந்தது அதிர்ஷ்டமே. ( திருமணக் கூடம் போலிருக்கும் மெய்யாத்தா படைப்பு வீட்டின் உள்ளேயும் கழிகள் கட்டி தரிசனம் செய்யப் பாதை அமைத்திருந்தார்கள் !!! )  திரும்ப வரும்போது விபூதிப் பிரசாதம் கிடைத்தது. மேலே ஹாலில் அனைவருக்கும் உணவு உண்டு என்றாலும் கூட்டத்தைப் பார்த்துவிட்டு வீடு வந்து உணவருந்தினோம். ஆனாலும் உறவினர் மூலம் தேங்காயும் மாவிளக்கும் வந்து சேர்ந்தது.
பள்ளயம்/பள்ளையம், மாவிளக்கு, அர்ச்சனை எல்லாமே உண்டு. இரு வாயில்கள் வழியாகச் சென்று வந்தோம். கூட்டம் அதிகமான போது ஒரு வாயிலில் சென்று வணங்கி  மறுவாயிலில் வெளியே வந்தார்கள் போலிருக்கிறது.

மெய்யாத்தாள்.
ஐந்து பள்ளயங்களும் புடவை வேஷ்டிகளும் , பூக்குவியல்களும்.
சீரும் சிறப்புமான கொப்பாத்தாள் போல
சீரான வாழ்வளிக்கும் செட்டியப்ப ஐயாவும் மெய்யாத்தாளும்.
காணக் காணத் தெவிட்டாத பேரழகு. மனதில் ஒரு நிம்மதி பரவியது. , காவல் தெய்வங்களைக் கண்ணுற்றதுபோல்.

செட்டியப்ப ஐயா
இன்னொரு ஆவிச்சி குடும்ப அங்கத்தினரின் சாந்தி புத்தகத்தில் மெய்யாத்தா பற்றிய ஓரிரு பாடல்கள் கண்டேன். அதை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.

மெய்யாத்தாள்.

திருவும் அறிவும் உடல் வளமும்
செம்மைப் பண்பும் சிறப்பு எனையும்
மருவும் மகளிர் மணப்பேறும்
மக்கட் பேறும் வளர் செல்வப்
பொருளும் அருளும் தரும் கல்விப்
புகழும் ஆவான் குலங்காத்து
வருமெய் யாத்தாள் மலரடிகள்
வணங்க நாளும் வழங்கிடுமே.

-- கருப்பட்டிக் கவிராயர்.

சீக்குறும் மேனி சீக்கிரமாகத்
தேறிட வைக்கும் மெய்யாத்தா
ஊக்கமும் தந்து செய்தொழில் ஓங்க
உதவிகள் செய்யும் மெய்யாத்தா
தேக்கிடும் வாழ்க்கைச் சிக்கலை எல்லாம்
தீர்த்துமே காக்கும் மெய்யாத்தா
வாக்குகள் தந்து வாழ்வினைக் காக்க
வாய்த்த தெய்வ மெய்யாத்தா.

உலகெங்கிலுமிருந்து இந்தப் படைப்பில் கலந்து கொள்ளக் காரைக்குடி மக்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
///மெய்யாத்தாள் சந்நிதி  மானகிரி அருகில் உள்ள இலங்குடி பகச்சாலமூர்த்தி ஐயனார் கோயில் பிரகாரத்தில் அமைந்து சிறப்பிக்கிறது// என்பது எனக்கு ஒரு குழுமத்தில் பகிர்ந்தபோது கிடைத்த புதுத்தகவல்.

செட்டியப்ப ஐயா துணையிருக்க
செட்டான வாழ்க்கை நலம் வாய்க்கும்.
கஷ்டங்கள் எல்லாம் ஓடிப் போகும்
இஷ்டங்கள் எல்லாம் நிறைவேறும்.

பிள்ளை குட்டிகள் பேரன் பேத்திகள்
குலம் தழைத்திட கருணை செய்தருள்.
குவலயம்தனில் இயைந்து வாழ்ந்திட
குலவிளக்கே கடைக்கண் பார்த்தருள். 

ஆயுள் ஆரோக்கியம் காக்க நீயிருக்க
அவனியில் தொல்லை இனிமேல் இல்லை.
தனம் தான்யம்  மனை மாளிகை 
தாய் நீவழங்க உன் தயையே எல்லை. 

வருடம்தோறும் வந்தே வணங்கும்
வாய்ப்பினைத் தந்திடு மெய்யாத்தா. 
வையகம்போற்றும் வாழ்க்கை வாழ
மெய்யாத்தா அருள் வை ஆத்தா. 

இது நான் எழுதியது. :)

1 கருத்து:

  1. iramuthusamy@gmail.com10 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 3:10
    செட்டிநாட்டின் குலதெய்வ வழிபாடு படையல் பற்றிய சிறப்பான அறிமுகம்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan12 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 1:11
    நன்றி முத்துசாமி சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

    பெயரில்லா24 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 8:03
    மிக நன்று. படைப்பு வீட்டு முகவரி தர இயலுமா? அழகாத்தா படைப்பு பற்றியும் எழுதலாமே?

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.