எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 3 மே, 2019

பூந்தணலில் பூமாலை சூடிய புவனேஷ்வரி

 பூந்தணலில் பூமாலை சூடிய புவனேஷ்வரி

பூந்தணலில் பூமாலை சூடிய புவனேஷ்வரி.:-
******************************

மதுரை மீனாக்ஷி, காஞ்சி காமாக்ஷி , காசி விசாலாக்ஷி தரிசித்திருக்கிறேன்.
வெகுநாளாக புதுக்கோட்டை புவனேஷ்வரியை தரிசிக்கவேண்டும் என்ற எண்ணம். அது இந்த விஜயதசமியன்று நிறைவேறியது.


ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்தோடு அமைந்தது இக்கோயில். இது புதுக்கோட்டை தஞ்சை சாலையில் சிறிது பிரிந்து உள்புறமாகச் செல்லும் பாதையில் அமைந்திருக்கிறது.  சேலம் ஸ்கந்தபுரியில் இருக்கும் புவனேஷ்வரி போல மிகப் பிரம்மாண்டமான உருவம். பார்த்ததுமே எட்டுத் திக்கும் பற்றிப் பரவும் அக்னி போல் ஒரு தேஜஸ்.


பதினொரு படியுள்ள கொலு.
தினப்படி நடக்கும் ஹோமம் என்றாலும் அன்று விஜயதசமி என்பதால் மிக
விமர்சையான ஹோமம். வெளியில் பூ வாங்கும்போதே நம்முடைய பூவை
புவனேஷ்வரியின் கைகளிலாவது சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆசை.. ஏனென்றால் வாங்கி ஒரு கூடை அல்லது அண்டாவில் போட்டு வைத்து பின் சமர்ப்பிப்பார்கள். நாம் வாங்கியதை அவள் சூடக் கண்டால்தானே நமக்கு சந்தோஷமாக இருக்கும். இதை நினைத்தபடியே  சாமந்திப் பூ ஒரு முழமும், அரளிப்பூ ஒரு முழமும் , ஒரு தாமரைப் பூவும் வாங்கி  உள்ளே சென்றால் அங்கே ஒரு அண்டாவில் போடும்படி இடது பக்க சன்னதியில் இருந்த ஒரு அர்ச்சகர் கூறினார்.

எதிர் எதிரே இரண்டு சன்னதிகள். அதில்  ஒரு சன்னதியில் போடப்போகும் சமயம் தாமரையை மட்டும் போடச் சொல்லிவிட்டு கட்டிய பூக்கள் இரண்டையும் எதிரே நடந்து கொண்டிருந்த ஹோமத்துக்குக் கொடுக்கும்படிச் சொன்னார். அங்கே சில பெண்கள் அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்தனர்.

இன்னொருபுரம் பிரம்மாண்டமான அம்மன். பார்த்ததும் நம்கையில் இருந்த
கொஞ்சம் பூவை பார்த்து வெட்கமாய் இருந்தது. அவள் திருமேனிக்கு ஆயிரக்கணக்கான தாமரைகளைத் தொடுத்துச் சூட்டினால்தான் அழகு. ஏதோ ஒரு இடத்திலாவது  அம்மன் மேல் பட்டால் போதும் என்று எண்ணியபடி அம்மன் சன்னதி எதிரே நடந்து கொண்டிருந்த பிரம்மாண்டமான ஹோமத்தைப் பிரமித்துப் பார்த்தபடி அந்த மாலைகளை அவர்கள் சமர்ப்பிக்கும்போது சமர்ப்பிக்கும்படி சொல்லி விட்டுப் பிரகாரம் வந்தோம்.

ஏனெனில் பயணத்தின் நடுவே சென்றபடியால் ஹோமம் முடிந்து பூர்ணாகுதியும் தீபாராதனையும் பார்க்கமுடியுமோ என்ற எண்ணத்தில் அவர்களிடம் கொடுக்க நேர்ந்தது. எனினும் பூமாலையை அம்மனுக்கு சமர்ப்பிக்கும்போது பக்கத்தில் இல்லையே என்ற எண்ணம் வாட்டத்தான் செய்தது.

அங்கே நவராத்திரிக்காக 11 படிகளில் கொலு வைக்கப் பட்டிருந்தது. ஹோமம்
மிக விமர்சையாக நடந்து கொண்டிருந்தது. சந்தனப் பொடி போல ஒன்றையும்,
சமித்துக்களையும்,நெய்யையும்  இருபக்கங்களில் இருந்தும் ஹோமத்தில்
மந்திர உச்சாடனத்தோடு சமர்ப்பித்துக்கொண்டிருந்தார்கள். மேலே மிகப் பெரிய  சிம்னி போன்று இருந்ததால் அதிகம் புகையில்லாமல் ஹோமத்தின்
நறுமணங்கள் மட்டும் சூழ்ந்திருந்தது.

சரி வலம் வந்து வணங்கலாம் என்று வலம் வர ஆரம்பித்தோம். பிரகாரத்தில்
ஸ்ரீ ஆதி சங்கரர், நந்தி தேவர், அக்தியர்,திருமூலர், புண்ணாக்கீசர், புலத்தியர், போகர், புலிப்பாணி முனிவர், பல சிரசுகளுடன் கூடிய விச்வரூப சதாசிவம், கருவூரார், கொங்கணர் மற்றும் சித்தர்கள், முனிவர்களின் உருவச் சிலைகள் செதுக்கப்பட்டிருந்தன. கீழே ஜட்ஜ் சுவாமிகளின் அதிஷ்டானம் பற்றியும் இங்கே கோயில் உருவானது பற்றியும் போட்டிருந்தார்கள்.

சுற்றுப் பிரகாரங்களில் பஞ்சமுக விநாயகர், பஞ்சமுக ஆஞ்சநேயர் இன்னும்
உக்கிரமான சுவாமிகள் அனைவரும் மிக சாந்தமான கோலத்தில் வீற்றிருந்தனர். இயற்கைச் சாளரம் வழியே காற்று வந்து கொண்டிருந்தது . மேலே பூராவும் மனம், சொல், செயல் இவற்றால் ஆண்டவனைத் துதிப்பது பற்றியும் அடைவது பற்றியுமான பொன்மொழிகள்.

”எண்ணம் போல வாழ்வு”. “ பிரிதலும், சேர்தலும் உறவின் நியதி”. “எது ஈர்க்கிறதோ அதுவே வெறுக்க வைக்கும் பின் ஈர்க்கும் “ “ இறைவன் மட்டுமே சத்தியமானவன். “ எனப் பொன்மொழிகளும் பழமொழிகளும், இறைவழியில் நடப்பதற்கான அறிவுரைகளும் நிரம்பிக் கிடந்தது.

படித்து பிரதக்ஷணம் முடித்து வந்தபோது கடவுட்தத்துவத்தில் மனம் இன்னும்
ஆழ்ந்திருந்தது. விழுந்து நமஸ்கரித்து எழுந்து  அமர்ந்த போது பூர்ணாகுதி
ஆகத் தொடங்கி இருந்தது. பச்சையும் சிவப்பும் கலந்த பட்டுப் புடவையை
ஹோமத்தில் சமர்ப்பித்தனர். வாங்கி அணிந்து  நீலத் தேவதைபோல பசும்
பொன்னாய் ஒளிர்ந்தாள் புவனேஷ்வரி.. அடுத்து மாலை.. மாலை கட்டிக்
கொண்டிருந்த மகளிர் நாங்கள் கொடுத்த இரண்டு மாலைகளையும்  அவர்கள்
கட்டியதோடு இணைத்துக் கொடுக்க அந்த மாலையை வாங்கி வேதியர்கள்
ஹோமத்தில் சமர்ப்பிக்க லாவகமாக வட்டமாக ஒரு பூந்தணல் மஞ்சளும்
சிவப்புமாக எழுந்து அந்த மாலையை வாங்கி ஒளிர்ந்தது. சூடிக் கொண்ட
சுடர்க்கொடி போல தகதகத்தது அம்மன் திருமேனி குண்டத்தில் இருந்து
எழுந்த ஒளியில். 

உடல் எல்லாம் புல்லரித்தது. ஆஹா அணிந்து கொண்டுவிட்டாள் புவனேஷ்வரி.

”யாதேவி சர்வ பூதேஷு சக்தி ரூபேன சமஸ்திதக :
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ ll ”

சந்தோஷத்தில் நிரம்பிக் கிடந்தது மனது.

நாம் வழங்கும் பூவை  எடுத்துக் கொள்வாளா புவனேஷ்வரி என தினமும்
ஒரு அம்மா வந்து செல்வதாகவும் ஆனால் ஒரு முறையே சென்று தரிசனம்
செய்த என் பூவை அவள் சூடிக் கொண்டது விசேஷம் என்றும் பூக்காரப் பெண்
சொன்னாள். பல நாட்களாக நான் மனதுள்  அவளைக் காண ஆசையோடு
தவித்துக் கொண்டிருந்தேன் என்றும் அதனால்தான் என் தாகத்தைத் தணித்து
அவள் என் ஆசைக்கேற்ப பூமாலை சூடிக் கொண்டாள் எனவும் அந்தப்
பெண்ணிடம் சொல்லவில்லை. அந்தப் பரவச  உணர்வுடனே  வெளியே
வந்தபோது பொன்னிறமான மாலை நேரம் பூந்தணலில் பூமாலை சூடிய
புவனேஷ்வரி போல மென்மையான கதகதப்புடன் ஜொலித்தது .
தாயின் அரவணைப்பு கிடைத்த குழந்தை போல மகிழ்வோடு திரும்பினேன்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்7 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:54
    பரவசம் அடைய வைத்தது... வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:17
    நன்றி தனபாலன் சகோ.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:17
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.