எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 8 மே, 2019

ஸ்ரீ விட்டல் ருக்மணி சம்ஸ்தான். கோவிந்தபுரம்

ஸ்ரீ விட்டல் ருக்மணி சம்ஸ்தான். கோவிந்தபுரம்


ஸ்ரீ விட்டல் ருக்மணி சம்ஸ்தான். கோவிந்தபுரம்.

வாங்கக்  குடம் நிரப்பும் வள்ளல்  பெரும் பசுக்கள்  நிரம்பிய இடம் ஆயர் பாடி. அந்த ஆயர் பாடி மாளிகையில் மட்டுமல்ல . கும்பகோணத்தை அடுத்த கோவிந்த புரத்திலும் கூட பசுக்களைக் கோவிந்தன் காக்கிறார். அங்கே இருக்கும் ஸ்ரீ விட்டல் ருக்மணி சம்ஸ்தானை  திருக்கடையூர் செல்லும் வழியில் பார்த்துச் சென்றோம்.


காலை வெய்யிலின் கிரணங்கள் பளிச்சென்று ஒளிபூசிக் கொண்டிருக்க சந்தனமும் ஆரஞ்சும், காவியும் பர்ப்பிள் கலருமாய் செங்கொடி பறக்க ஜொலித்தது கோயில். இதை நிறுவியவர் பிரம்மஸ்ரீ விட்டலதாஸ் ஜெயகிருஷ்ண தீக்‌ஷிதர். விட்டல ருக்மணி கோயிலும், கோசாலையும் இணைந்தது இது.

கோயிலின்

முன் படியில் இதை நிறுவியவர் சிலை ( என்றுதான் தோன்றுகிறது ) ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. பல படிகள் கடந்து உள்ளே சென்றால் அர்த்த மண்டபம், வசந்த மண்டபம் ஆகியன வந்தன. இங்கே கிட்டத்தட்ட 200 பேர் அமர்ந்து உபன்யாசம் கேட்கலாமாம்.


கிட்டத்தட்ட 2004 இல் இதற்கு அடிக்கல் நாட்டி 2011 இல் முடிக்கப்பட்டிருக்கு. மகாராஷ்ட்ரியன் ஸ்டைலில் கட்டப்பட்ட இதில் 100 கோடி நாம சங்கீர்த்தனங்கள்எழுதிய பத்திரங்களை அஸ்திவாரத்தில்  வைத்து எழுப்பப்பட்டிருக்கு.

கிருஷ்ணரின் 16 லீலைகளைச் சித்தரிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கு. மத்தியில் உள்ள மண்டபத்தில் பாண்டுரங்க விட்டலரும், ருக்மாயியும் இடுப்பில் கைவைத்தபடி தரிசனம் கொடுக்கிறார்கள். அழகுத் தெய்வ உருவங்கள். இதன் கீழே மெடிக்கல் ஹாலும் லைப்ரரியும் இருக்கிறதாம்.

ஒரு வழியில் சென்று தரிசித்து மறுவழியில் வந்தோம். வெளியே துவார பாலகருக்குப் பதிலாக நாம சங்கீர்த்தனம் செய்யும் இரு கலைஞர்களின் உருவம் பிரம்மாண்டமாகச் செதுக்கப்பட்டிருக்கு.

கொஞ்சம் தள்ளிச் சென்றால் ஒரு புஷ்கரணி. பக்தர்கள் நீராடுவதற்காக. அதன் பெயர் சந்திரபாகா.

அதைக்கடந்து சென்றால் தென்னை மரங்கள் சூழ புல்வெளியும் அதன் மையத்தில் ஒரு மண்டபத்தில் மாடுகளும் வரிசையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அவை இரு லைன்களாக கம்பிக்கு இருபுறமும் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் காலுக்குக் கீழேயே கழிவுகள் செல்லவும் கழுவி விடும் தண்ணீர் செல்லவும் நீளத் துளைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் கீழே நீள சாக்கடை அமைக்கப்பட்டிருந்தது.

மண்டபத்தின் மையத்தில் ஸ்ரீ ராஜ கோபாலர் பரிபாலனம் செய்ய உச்சியில் கட்டுத்துறை முழுதும் அழகு தென்னம்கீற்றுக்களால் முடையப்பட்டிருந்தது. வண்ணக் கீற்றுக்கள் கொண்டு பூக்கள் டிசைனால்  உதர விதானங்களை அழகு படுத்தி இருந்தார்கள். பக்க வாட்டுக்களில் கிருஷ்ணலீலை ஓவியங்கள் தொங்கின.

அடி மாடு என்று சொல்லப்படக் கூடிய பால் சுரப்பு வற்றிய பசுக்கள் எல்லா ரகத்திலும் வகையிலும் நின்றன. இந்த அடிமாடுகள் கேரள கசாப்பு சந்தைக்கு எடுத்துச் செல்லப்படுவது தடுக்கப்பட்டு இங்கே கோசாலையில் பராமரிக்கப்படுகின்றன. இவற்றின் சிறுநீரில் இருந்து அர்க் உள்ளிட்ட ஆயுர்வேதப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. மாடுகளின் சாணம், மூத்திரம், மருந்துப்பொருள் தயாரிக்கவும், வேளாண் பயிர் வளர்ச்சிக்கும், பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது.

பீகாரி இளைஞர்கள் அங்கே பசுக்களைப் பராமரிக்கும் பணியில் இருந்தார்கள். குறிப்பிட்ட நேரத்தில் அவற்றின் சிறுநீரக உறுப்பைத் தொட்டால் அவை அடுத்து அடுத்து சிறுநீர் கழிக்கத் துவங்குமாம். அந்த நேரத்தில் அவற்றைச் சேகரிப்பார்களாம். ஒரு லிட்டர் சிறுநீரின் விலை அதிகமில்லை ஜெண்டில் மேன்... 500 ரூபாய்

இந்த ஸ்ரீ கோகுலம் கோசாலையில்  கிட்டத்தட்ட பிருந்தாவனம், துவாரகை, ஜெர்சி பசுக்கள், கிடேரிகள், காளைகள் என  365 பசுக்கள் இருக்கின்றன. இவற்றுக்கான ஒரு நாளைக்கான கோ கிராஸ் புல் 4,000 ரூபாயும், வைக்கோல்  2,000 ரூபாயும் ஆகிறதாம். ஒரு பசுவை ஒரு வருடத்துக்கு சுவீகரித்துக் கொள்ள 18,000 ரூபாயாம். மற்றும் கோதானம் . கோபூஜை செய்ய 15, 000 ரூபாய்.

தினசரி அன்னதான சேவை 11,000, தினசரி ப்ரசாத விநியோக சேவை 5, 000, தினசரி நித்ய சேவா 11,000, தினசரி கோசேவா 16,000 ஆகிறதாம். அலுவலகத்தில் நிறைய மக்கள் கூட்டம் கோசேவை செய்யக் க்யூவில் நின்றார்கள். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது நல்லது என வாங்கிக் கொடுப்பார்கள். ஒரு பிடி புல் தினமும் கொடுத்தாலும் புண்ணியம் என்று கொடுப்பார்கள். கோமாதா எங்கள் குலமாதா என்று சொல்லுவோம். அந்தக் கோமாதாக்களின் பராமரிப்புக்கு ஜாதி இன வேறுபாடு இன்றி முடிந்ததையும் செய்யலாம்.

கோவிந்தபுரியின் இணையம் www.vittalrukmini.org.

முகவரி:-
ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மந்திர்,
ஸ்ரீ விட்டல் ருக்மணி  சம்ஸ்த்தான்,
கோவிந்தபுரம்,
கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் வழி.

1 கருத்து:

  1. பெயரில்லா15 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:47
    வணக்கம்
    பதிவும் அருமை படங்களும் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:00
    படங்களுடன் அழகான அருமையான பகிர்வு...

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:26
    மிகவும் அழகான படங்களுடன் அருமையான பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    [நான் இதுவரை இரண்டு மூன்று முறை சென்றுவரும் பாக்யம் பெற்றுள்ளேன். ]

    பதிலளிநீக்கு

    தி.தமிழ் இளங்கோ16 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:06
    அழகிய படங்கள் , கோசாலை பற்றிய அதிக விவரங்களுடன் படிக்க ஆர்வத்தைத் தூண்டிய கட்டுரை. நேரம் அமையும்போது ஸ்ரீ விட்டல் ருக்மணி சம்ஸ்தான். கோவிந்தபுரம் சென்று வர வேண்டும்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:56
    நன்றி ரூபன்

    நன்றி குமார்

    நன்றி வைகோ சார்

    நன்றி தமிழ் இளங்கோ.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:56
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.