எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 12 ஆகஸ்ட், 2020

அறுபடை முருகன் கோயில்கள். :- பழமுதிர்சோலை

அறுபடை முருகன் கோயில்கள். :- பழமுதிர்சோலை

சின்னஞ்சிறு முருகா சீர் முருகா
வண்ணமயில் முருகா மால் மருகா
......................................................
சுட்ட பழம் வேண்டுமா
சுடாத பழம் வேண்டுமா என்று
ஒளவையைக் கேட்டவனே  

என்று சிறுவயதில் பாடுவதுண்டு. தமிழ்ப் பாட்டி ஒளவையைச் சிறுவனாய் வந்த முருகன் சோதித்த இடம் இது. ஓளவைக்காக நாவல் பழங்களை முருகன் உதிர்த்த ஸ்தலமாதலால் இது சோலை மலை என்றும். பழமுதிர் சோலை என்றும் அழைக்கப்படுகிறது.

அறுபடை வீடுகளில் மதுரையில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தைத் தரிசித்தவுடன் மறுநாளே ஆறாம் படைவீடான பழமுதிர்சோலைக்குச் சென்றோம். இது கள்ளழகர், சோலைமலை முருகன், பதினெட்டாம்படிக் கருப்பர், ராக்காயி அம்மன் கோயில் ஆகிய நான்கு கோயில்கள் இணைந்த ஸ்தலமாகும். இது திருமாலும் அவர் மருமானும் கோயில் கொண்ட இடம். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான இடம்.

அழகன் முருகனைப் பார்க்கப் போனால் வேலும் மயிலும்தானே கூட வரவேண்டும். ஆனால் இங்கோ அரிவாள் கூட வந்தது. அதுவும் அங்கே முதலில் பதினெட்டாம்படிக்கருப்பருக்கு  அரிவாள் வேண்டுதல் செலுத்தச் சென்ற மக்கள் கூட்டம் இது.


அம்மாடியோவ் எவ்வளவு பெரிய அரிவாள்கள். அதை பத்துப் பன்னிரண்டு பேர் சுமந்து சென்றார்கள். இதேபோல் பல அரிவாள்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்தன.அத்தனையும் ஆண்களே சுமந்து சென்றார்கள்.



நன்கு பளபளவென்று ஷார்ப்பாக நீளமாக  ( நுனியில் மாலையிடப்பட்டு ) எத்தனை எத்தனை அரிவாள்கள் !

வேடமிட்டு வழிபடும் அடியவர்கள்  & சந்தனாக குழம்பு பூசி மாலையணிந்து தலைப்பாகை கட்டி வழிபடும் அடியவர்கள்,
திரியெடுத்தாடுவோர், திரியின்றி ஆடுவோர், சாட்டை அடித்தாடுவோர், துருத்திநீர் தெளிப்போர், சாமியாடிகள்,ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்பர். 

கோயில் கொடையாக இந்த ஆடுகளும் கூட்டம் கூட்டமாக வந்தன.
அதன் பின் கள்ளழகரை தரிசித்து மலையில் கோயில் கொண்டுள்ள சோலைமலை ஆண்டவரை தரிசிக்கச் சென்றோம். அழகர் கோயிலில் சம்பா தோசை எனப்படும் வெள்ளை வடை போன்ற பிரசாதம் பிரசித்தம்.
மேலே ராக்காயி கோயிலும் நூபுர கங்கையும் உள்ளன. அதிக உயரமில்லாத இம்மலையில் கோயிலுக்கு நடந்தும் சென்று தரிசிக்கலாம்.  கார் செல்லும் பாதையும் உள்ளது. மிக மிக அழகான பசுமையான மலை இது.

மிகப்பெரும் கோபுரம். அதன்பின் மிகப் பெரும் சன்னதி. ஒரு புறம் புகுந்து நடுவில் வந்து தரிசித்து பின்பு இன்னொருபுறம் வெளியேறலாம். முதல் பகுதியில் விநாயகரும் இரண்டாம் பகுதியில் நடுநிலையாக சுப்ரமணியர் வள்ளி தெய்வயானையும், காட்சி அளிக்கிறார்கள்.

முருகன் குழந்தையாகவும் திருமணக் கோலத்திலும் திருவிளையாடல் செய்து அருள்பாலிக்கும் வித்தியாச ஸ்தலம் இது.  இங்குள்ள முருகனின் பெயர்  வெற்றிவேல் முருகன்.

இது படைவீடு வரிசையில் ஆறாம் படைவீடு. இங்கே ஆனைமுகன் துணை கொண்டு கந்தன் வள்ளியை மணந்த இடம் இது. திருமுருகாற்றுப்படையிலும் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழிலும் பாடல் பெற்றுள்ளது. 

இங்கே தைப்பூசம், வைகாசி விசாகம், ஸ்கந்தர் சஷ்டி ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.இங்கே தேனும் தினைமாவும் பிரசாதம்.

நண்பர் திரு வெற்றிவேல் அவர்களின் தாயார் மனைவி, மகன் ஆகியோருடனும் என் தம்பி குடும்பத்தாருடனும் இரு கார்களில் சென்று தரிசித்து வந்தோம். மதிய நேரம் ஆகிவிட்டது. தீப தூப ஆராதனைகள் பார்த்து பிரசாதங்கள் உண்டு திரும்பினோம்.

இந்தக் கோயில் பற்றிய அருணகிரிநாதரின் திருப்புகழ்.

தனன தான தான தத்த
     தனன தான தான தத்த
          தனன தான தான தத்த ...... தனதான

......... பாடல் .........

துடிகொ ணோய்க ளோடு வற்றி
     தருண மேனி கோழை துற்ற
          இரும லீளை வாத பித்த ...... மணுகாமல்

துறைக ளோடு வாழ்வு விட்டு
     உலக நூல்கள் வாதை யற்று
          சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே

உடல்செய் கோர பாழ்வ யிற்றை
     நிதமு மூணி னாலு யர்த்தி
          யுயிரி னீடு யோக சித்தி ...... பெறலாமே

உருவி லாத பாழில் வெட்ட
     வெளியி லாடு நாத நிர்த்த
          உனது ஞான பாத பத்ம ...... முறுவேனோ

கடிது லாவு வாயு பெற்ற
     மகனும் வாலி சேயு மிக்க
          மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலூர்போய்க்

களமு றானை தேர்நு றுக்கி
     தலைக ளாறு நாலு பெற்ற
          அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே

முடுகு வீர சூர பத்மர்
     தலையின் மூளை நீறு பட்டு
          முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா

முநிவர் தேவர் ஞான முற்ற
     புநித சோலை மாமலைக்குள்
          முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே.

-- நன்றி திரு ஸ்ரீ கோபால சுந்தரம்.

டிஸ்கி :-பழமுதிர்ச்சோலை/சோலைமலைக் கோயிலைத் தேடாதீங்க. அப்போ இப்பிடி எல்லாம் படம் சரியா எடுக்கத் தெரியல. அதுனால பழமுதிர் சோலையை எடுக்காமல் இந்த வேண்டுதல் செலுத்தும் மக்களை ( அதுவும் வித்யாசமா காட்சி தந்ததால)  எடுத்திருக்கிறேன்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. இனி அடுத்து கடலாடும் இளையோன் திருச்செந்திலாண்டவனை தரிசிக்கச் செல்வோம்.

அறுபடை முருகன் கவசங்கள் பழமுதிர்ச்சோலை..

ஆறாவது கவசம் பழமுதிர்ச்சோலைக் கவசம்


சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கன்மால் மருமகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே
பழநிமா மலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்
சரவண பவனே சட்கோணத் துள்ளுரை
அரனருள்சு தனே அய்யனே சரணம்
சயிலொளி பவனே சடாட்சரத் தோனே
மயில்வா கனனே வள்ளலே சரணம்
திரிபுர பவனே தேவசே னாபதி
குறமகள் மகிழும் குமரனே சரணம்
திகழொளி பவனே சேவற் கொடியாய்
நகமா யுதமுடை நாதனே சரணம்
பரிபுர பவனே பன்னிரு கையனே
தருணமிவ் வேளை தற்காத் தருளே
சவ்வும் ரவ்வுமாய் தானே யாகி
வவ்வும் ணவ்வுமாய் விளங்கிய குகனே
பவ்வும் வவ்வுமாய் பழமுதிர் சோலையில்
தவ்வியே ஆடும் சரவண பவனே
குஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய்
தஞ்சமென் றுன்னைச் சரணம் அடைந்தேன்
கொஞ்சிய உமையுடன் குழவியாய்ச் சென்றங்(கு)
அஞ்சலி செய்வதன் அமுதமும் உண்டு
கார்த்திகை மாதர் கனமார்(பு) அமுதமும்
பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனே
நவமைந்தர் சிவனால் நலமுடன் உதிக்கத்
தவமுடை வீர வாகுவோ(டு) ஒன்பான்
தம்பி மா ராகக் கொண்ட
சம்பிர தாயா சண்முகா வேலா
நவவீரர் தம்முடன் நவகோடி வீரரும்
கவனமாய் உருத்திரன் அளித்தே களித்துப்
பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய்
ஓதிடச் செய்ய உடன் அவ் வேதனை
ஓமெனும் பிரணவத் துண்மைநீ கேட்கத்
தாமே யோசித்த சதுர்முகன் தன்னை
அமரர்கள் எல்லாம் அதிசயப் படவே
மமதைசேர் அயனை வன்சிறை யிட்டாய்
விமலனும் கேட்டு வேகம தாக
உமையுடன் வந்தினி துவந்து புரிந்து
அயனைச் சிறைவிடென்(று) அன்பாய் உரைக்க
நயமுடன் விடுத்த ஞானபண் டிதனே
திருமால் அயன்சிவன் சேர்ந்து மூவரும்
கௌரி லக்ஷ்மி கலைமக ளுடனே
அறுவரோர் அம்சமாய் அரக்கரை வெல்ல
ஆறு முகத்துடன் அவதரித்தோனே
சிங்க முகாசுரன் சேர்ந்த கயமுகன்
பங்கமே செய்யும் பானு கோபனும்
சூரனோ டொத்த துட்டர்க ளோடு
கோரமே செய்யும் கொடியராக் கதரை
வேருடன் கெல்லி விண்ணவர் துன்பம்
ஆறிடச் செய்த வமரர்கள் தமக்குச்
சேனா பதியாய் தெய்வீகப் பட்டமும்
தானாய்ப் பெற்ற தாட்டிகப் பெருமானே
திருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய்ச்
சிறப்புறு பழநி திருவே ரகமுதல்
எண்ணிலாத தலங்களில் இருந்தாடும் குகனே
விண்ணவர் ஏத்தும் விநோத பாதனே
அன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவனே
தஞ்சமென்(று) ஓதினர் சமயம் அறிந்தங்(கு)
இன்பம் கொடுக்கும் ஏழைபங் காளா
கும்பமா முனிக்குக் குருதே சிகனே
தேன்பொழில் பழநித் தேவ குமாரா
காண்பார்த்(து) எனையாள் கார்த்திகே யாஎன்
கஷ்டநிஷ் டூரம் கவலைகள் மாற்றி
அஷ்டலக்ஷ்மி வாழ் அருளெனக்(கு) உதவி
இட்டமாய் என்முன் னிருந்து விளையாடத்
திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே
அருணகிரி தனக்(கு) அருளியதமிழ்போல்
கருணையால் எனக்கு கடாட்சித் தருள்வாய்
தேவராயன் செப்பிய கவசம்
பூவல யத்தோர் புகழ்ந்து கொண்டாட
சஷ்டிக் கவசம் தான்செபிப் போரைச்
சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி வேலா
வந்தென் நாவில் மகிழ்வுடன் இருந்து
சந்தத் தமிழ்த்திறம் தந்தருள் வோனே
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் தமிழ்தரும் அரனே
சரணம் சரணம் சங்கரன் சுதனே
சரணம் சரணம் சண்முகா சரணம்!

-- நன்றி விதை & விருட்சம் 

டிஸ்கி :- இதையும் பாருங்க. 

அறுபடை முருகன் கோயில்கள். - திருப்பரங்குன்றம்.

அறுபடை முருகன் கோயில்கள். :- பழமுதிர்ச்சோலை

(தொ. பரமசிவனின் அழகர் கோயில் - ஒரு பார்வை.)

அறுபடை முருகன் கோயில்கள் :- திருச்செந்தூர்.

அறுபடை முருகன் கோயில்கள் :- பழனி/திருஆவினன்குடி

அறுபடை முருகன் கோயில்கள் :- சுவாமிமலை/திருவேரகம் 

அறுபடை முருகன் கோயில்கள் :- திருத்தணி. 

1 கருத்து:

  1. கரந்தை ஜெயக்குமார்12 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 6:56
    இவ்வளவு பெரிய அரிவாளா?

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University12 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 8:07
    பழமுதிர்ச்சோலை வாயிலிலிருந்து புகைப்படம் எடுக்கமுடியுமே? இருக்கட்டும். பெரிய வாள்களைக் கண்டு வியந்தேன். பலமுறை இக்கோயிலுக்குச் சென்றுள்ளேன்.செந்திலாண்டவனைக் காணக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

    Anuprem12 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 10:51
    அழகு...

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam12 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:52
    நாங்கள் இரண்டு மூன்று முறை சென்றிருக்கிறோம் இவ்வளவு பெரிய வாளைப் பார்த்ததில்லை பழமுதிர் சோலையிலும் நூபுர கங்கையிலும் குரங்குகள் அட்ட காசம். சென்னையில் பெசண்ட் நகரில் அறுபடைக் கோவில்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாமே

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:11
    ஆம் ஜெயக்குமார் சகோ

    என்னவோ அப்போது படம் எடுக்க பயமாக இருந்தது ஜம்பு சார்.

    நன்றி அனுராதா

    நன்றி பாலா சார். ஆம் பாலா சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    பெயரில்லா24 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 9:45
    'பழமுதிர்சோலை' என்பதே சரி. இடையில் ச் வராது. வினைத்தொகையில் ஒற்று மிகாது என்பது இலக்கணம்.

    பதிலளிநீக்கு

    பெயரில்லா24 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 9:49
    அருணகிரிநாதர் பாடலில் ஒற்றறெழுத்தடன் ஆரம்பிக்கும் 'த்யாகர்' என்ற சொல் இடம் பெற்றிருக்கிறதா?
    நீங்கள் எழுதும்போது தமிழை எப்படி வேண்டுமானாலும் கொலை செய்யுங்கள் ஆனால் பிறரது வரிகளை மாற்றுவது தவறு.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan24 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 11:51
    பழமுதிர்சோலை திருத்திவிட்டேன். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பற்றிய வலைத்தளத்திலும் அப்படித்தான் த்யாகர் என்று எழுதி உள்ளது. மேலும் அதில் நன்றி என்று நான் குறிப்பிட்டு இருக்கும் திரு ஸ்ரீ கோபால சுந்தரம் அவர்களின் வலைப்பூவிலும் அப்படித்தான் எழுதப்பட்டு உள்ளது. அது சரி.. ஒற்றறெழுத்தடன் இது என்ன தமில்க்கொலையா.. :) முதலில் பெயருடன் பின்னூட்டமிடுங்கள் பெயரில்லா.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan24 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 11:54
    http://thiruppugazh-nectar.blogspot.in/2017/03/500.thudikol-noy.html

    முநிவர் தேவர் ஞான முற்ற
    புநித சோலை மாமலைக்குள்
    முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே.

    http://www.kaumaram.com/thiru/nnt1316_u.html

    முநிவர் தேவர் ஞான முற்ற
    புநித சோலை மாமலைக்குள்
    முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே.

    https://www.facebook.com/615408448571560/videos/629958653783206/

    முநிவர் தேவர் ஞான முற்ற
    புநித சோலை மாமலைக்குள்
    முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே.

    பதிலளிநீக்கு

    பெயரில்லா25 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 6:22
    1. நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் ஸ்ரீ கோபால சுந்தரம் அவர்களின் வலைப்பூவிலும் 'பழமுதிர்ச்சோலை' என்று தவறாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது.

    2. இந்தப்பாடலின் தொடுப்பு
    {தனன தான தான தத்த
    தனன தான தான தத்த
    தனன தான தான தத்த ...... தனதான} என்று இருக்கிறது. இந்த ஓசையையொட்டியே(யாப்பிலக்கணப்படிச் சீர்களையொட்டியே) எல்லா கண்ணிகளும் அமையும். இந்தத் தொடுப்பில் எந்தச் சொல்லும் ஒற்றெழுத்தில் ஆரம்பிக்கவில்லை. எனவே பாடலின் எந்தச் சீரும்(சொல்லும்) ஒற்றெழுத்தில் ஆரம்பிக்காது என்பது பாலபாடம். 'முருக வேலத் யாகர்' என்பதே சரியான அமைப்பு. எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், பாடியவன் பாட்டைக் கெடுத்தான் என்பதுபோல எப்படியோ எழுதிக் கெடுக்கிறார்கள். உங்கள் மீது குறை சொல்வது தவறு என்று உணர்கிறேன் சகோதரி. மன்னிக்கவும்.
    பெயரில்லாமல் பின்னூட்டம் இட வாய்ப்பளித்த பிறகு பெயரைக் குறிப்பிடுமாறு வேண்டுவது ஏன் என்பது புரியவில்லை.

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.