எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

மருதமலை முருகன் கோயில்.

மருதமலை முருகன் கோயில்.

மருதமலை மாமணியே முருகையா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா நீயா

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க
தேவன் மகனோடு மனம் விட்டுப் பேசிப்பாருங்க
தீராத வினையெல்லாம் தீர்ந்துபோகுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க.

என்ற இரு பாடல்களும் பள்ளிப்பருவத்தில் விரும்பிக் கேட்டவை. .

கோயமுத்தூர் சென்றால் மறக்காமல் தரிசிக்கும் இடங்களில் முதன்மையானது மருதமலை. கோவை அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. இந்த வழியில்தான் வடவள்ளி, அக்ரி காலேஜ் ஆகியன அமைந்துள்ளன. கோயிலுக்கு அருகில் காலேஜ் இருப்பதால் இளவட்டங்கள் குன்றிலிருக்கும் குமரனைச் சுற்றுவார்கள்.

இங்கே மூன்று மூன்று படிகளாக அமைந்திருப்பதால் நடக்கும் களைப்பு அதிகம் தெரியாது. பக்கத்திலேயே வாகனப்பாதை. படிகளில் மாங்காய், பைனாப்பிள் மிளகாய் உப்பு போட்டுக் கிடைக்கும். செவ்விளநீரும் கிடைக்கும். இங்கே மலை வாழ் மக்களின் உண்டு உறைவிடப் பள்ளிக்கூடமும் உறைவிடங்களும் கடந்துதான் மலை ஏற வேண்டும்.

ஒவ்வொரு மண்டபத்தின் மேலும் அமைக்கப்பட்டிருக்கும் தெய்வீகச் சிலைகள் அழகு. இன்னும் இயற்கையை அதிகம் குலைக்காமல் கட்டப்பட்ட கோயிலில் இதுவும் ஒன்று. முக்கியமாக ஒன்று சொல்லவேண்டும். எல்லாக் கோயில்களிலும் முருகன் மலை உச்சியில்தான் குடி இருப்பார். ஆனால் இங்கோ பாதி மலை ஏறினால் போதும். அங்கேயே கோயில் கொண்டிருக்கிறார்.
இது முருகனின் ஏழாவது படை வீடாகும்.  12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டதாம். அதன் பின் இப்போது இந்து அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ளது.

இங்கே மேலே வர பஸ்ஸுக்கு 5 ரூபாய்தான் சார்ஜ். என்ன க்யூதான் பெரிசாக இருக்கும். வெயிட் பண்ணி போனால் போகலாம். பக்கத்திலேயே செருப்பு போடும் இடமும், முடி இறக்கும் இடமும் உள்ளது. அன்னதான மண்டபமும் அங்கே அமைந்துள்ளது. தினப்படியும் அன்னதானம் உண்டு. ஆனால் கூட்டம் எக்கித் தள்ளும்.
மலை ஏறும்போது  தாந்தோன்றி விநாயகரையும் இடும்பனையும் மலை ஏறியபின் பஞ்சவிருட்ச விநாயகரையும் சுயம்புவான முருகன் வள்ளி தெய்வானையையும் தரிசிக்கலாம். அதன்பிந்தான் இப்போது புதிதாகக் கட்டியிருக்கும் பால தண்டாயுதபாணி & மருதமலை ஈசன், மருதாசல மூர்த்தியை க்யூவில் நின்று தரிசிக்கலாம்.  இங்கே முருகன் மற்றும் கோஷ்ட தெய்வங்களாக சிவன் பார்வதி, துர்க்கை, பெருமாள் சண்டீசர் ஆகியோரையும் வணங்கலாம்.
சுயம்பு மூர்த்திக்குப் பின்னால் உள்ள பாதையில் பாம்பாட்டிச் சித்தர் குகைக்கோயில் உள்ளது. அங்கே சப்த கன்னியர் சன்னிதியும் உள்ளது.

தங்கரதம் வேண்டுதல் இப்போதெல்லாம் தினப்படியும் நடக்கிறது. மாலை 4 மணிக்குமேல் இதற்கு பெருங்கூட்டம் காத்திருக்கும்.
அழகன் முருகன் தங்கரதத்தில் அசைந்து வருகிறான்.

தங்கரதம் ஒன்று இங்கு அசைந்துவர
செந்தில்வளர் கந்தனுமே கொலுவிருக்க
நங்கைமலர் தெய்வானை வள்ளியுடன்
நான் வணங்கும் திருக்கோலம் பாருங்களேன்.

முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல் முருகா.
மாபெரும் ஏழுநிலை இராஜகோபுரம். இதன் கதவுகளை இன்னொரு இடுகையில் போடுகிறேன். மிகப் பிரம்மாண்டமான கதவுகள். இந்த மலையே மூலிகை மலை போல் சிறப்பு வாய்ந்தது.
முன்புறம் கார் நிறுத்தும் வசதிகள்,
இடது , வலது , நடு என இறங்க ஏற வசதிகள். ( புதிதாகக்கட்டப்பட்டவை)
மருதமரங்கள் நிறைந்து இருந்ததால் மருதமலை என்று பெயர் பெற்றதாகச் சொல்கிறார்கள்.
இந்தப் படிக்கட்டுகள் மீதும் வெய்யில் நேரம் நடக்க முடியவில்லை.கால் கொப்புளித்துப் போகிறது.
இதன் மேலும் ஷெல்டர் போட்டால் பரவாயில்லை. இல்லாவிட்டால் பகல் பன்னிரெண்டு மணி வெய்யிலில் செருப்பைக் கீழே விட்டுவிட்டு மேலிருந்து கீழே வெறுங்காலுடன் ஓட வேண்டும்.
அருணகிரிநாதர் திருப்புகழில் மருதமலை முருகனைப் பாடியுள்ளார்.[6]
திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
சினமுடைஅசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி விடுவோனே!
பருவரை யதனை உருவிட எறியும்
அறுமுகமுடைய வடிவேலா!
பசலையொ டணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி தொடலாமோ!
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு வருவானே!
கனதனமுடைய குறவர்தம் மகளை
கருணையொ டணையும் மணிமார்பா!
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!

டிஸ்கி :- இதையும் பாருங்க. 

அறுபடை முருகன் கோயில்கள். - திருப்பரங்குன்றம்.

அறுபடை முருகன் கோயில்கள். :- பழமுதிர்ச்சோலை

(தொ. பரமசிவனின் அழகர் கோயில் - ஒரு பார்வை.)

அறுபடை முருகன் கோயில்கள் :- திருச்செந்தூர்.

அறுபடை முருகன் கோயில்கள் :- பழனி/திருஆவினன்குடி

அறுபடை முருகன் கோயில்கள் :- சுவாமிமலை/திருவேரகம் 

அறுபடை முருகன் கோயில்கள் :- திருத்தணி.  

1 கருத்து:

  1. பெயரில்லா26 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 2:57
    Elantha Vadai also famous in Maruathamalai

    பதிலளிநீக்கு

    கரந்தை ஜெயக்குமார்26 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 6:40
    ஒரு முறை சென்றிருக்கிறேன்
    படங்கள் அருமை
    நன்றி சகோதரியாரே
    தம 1

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University26 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 7:18
    1980களில் கோயம்புத்தூரில் பணியாற்றும்போது பலமுறை சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாகச் செல்லும் வாய்ப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு

    Anuprem26 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 8:47
    சிறு வயதில் சென்றது...

    படங்கள் மிக அழகு....தகவல்களும் மிக சிறப்பு....

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam26 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 9:45
    1996ல் என்ற நினைவு என் பேரனுக்கு சுமார் நான்கு வயது கோவியிலிருந்து காரில் மருத மலை சென்றோம் என் பேரன் மிகவும் ரெஸ்ட்லெஸாக ஸ்ட்ஸ்லெஸ் ஆக இருந்தான் ராமாயணக் கதைகள் கேட்டு வளர்ந்தவன் மலை ஏறும் போது தாடகை எங்காவது தென்படுகிறாளா என்னும் எதிர்பார்ப்பும் பயமும் இருந்தது

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:43
    ஆம் இலந்தை வடையைக் குறிப்பிட மறந்துட்டேன் பெயரில்லா.

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி அனுராதா ப்ரேம்குமார்

    நன்றி பாலா சார். அட அப்படியா.. ?!

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.