எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 14 செப்டம்பர், 2020

இளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக்கோயில்.

இளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக்கோயில்.

ஈடு இணையற்ற இளையாற்றங்குடி என்றொரு புத்தகமே வந்திருக்கிறது. நான் அதை இன்னும் வாசிக்கவில்லை. இக்கோயில் காரைக்குடியில் இருந்து 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. கீழச்சீவல்பட்டி ஹைவேஸ் வழியாக இரணியூர் போகும் பாதையில் சென்று அதன் பின் பிரிந்து வரும் பாதையில் செல்லலாம்.

கி பி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில் இது. மூன்று நிலை ராஜகோபுரம் நம்மைக் கம்பீரமாக வரவேற்கிறது.  இங்கே ஒன்பது தீர்த்தம் ஒன்பது கோவில் ஒன்பது விநாயகர் இருப்பதாக என் அத்தை கூறினார்.

ஈசன் கைலாச நாதர், இறைவி நித்யகல்யாணி அம்மை. கோவிலின் பக்கவாட்டில் புஷ்கரணி இருக்கிறது.  எதிரே அங்காளம்மன் கோயிலும் கருப்பர் கோயிலும் பிரம்மாண்டமாய் அமைந்திருக்க பின்புறம் பெருமாள் கோயிலும் உள்ளது.

மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானம் அமைந்த ஊர். இவர் இளைப்பாறிய குடி என்பதால் இது இளையாற்றங்குடி என வழங்கப்படுகிறது. இங்கே வேதபாடசாலையும் உள்ளது.
சிதம்பரத்தில் இருந்து - சோழ நாட்டிலிருந்து பாண்டி நாட்டுக்குப் புலம் பெயர்ந்த நகரத்தார் இங்கேதான் முதலில் ஒன்றுகூடினார்கள். பாண்டிய மன்னன் கி பி 707 இல் இக்கோயிலையும் இந்த ஊரையும் அவர்களுக்கு வழங்கினார்.  அதன் பின் ஒன்பது பிரிவாகப் பிரிந்து ஒன்பது கோயிலாக அமைத்துக் கொண்டார்கள். இதுதான் முதல் கோயில். இக்கோயிலைச் சார்ந்தவர்களும் தம்மை எட்டு உட்பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டார்கள்.
இளையாற்றங்குடி பட்டண சாமியார் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் தன் சிரசைக் கொடுத்தற்காக அவர்களுக்குத்தான் பிள்ளையார் நோன்பு முதற்கொண்டு  எல்லா இடங்களிலும் முதல்மரியாதை வழங்கப்படுகிறது.
கைலாய நாதரும் கைலாய விநாயகரும். எல்லாருக்கும் கல்யாண நலம் அருளுவதால் ( சிறப்பான மண வாழ்வு தருவதால் அம்மையின் பெயர் ) நித்ய கல்யாணியம்மன்.


அசுரர் தொல்லை நீங்க  தேவர்கள் மணலால் சமைத்து வழிபட்ட லிங்கம் என்பதால் இவர் கைலாய நாதர். சிவன் தோன்றி இவர்களுக்காய் அசுரனை அழித்து இவர்களின் இளைப்பை ஆற்றியதாலும் இத்தலம் இளையாற்றங்குடி என அழைக்கப்படுகிறது.

அர்த்த மண்டபமும் மகா மண்டபமும் அழகு. அதன் கொடுங்கைகளும் வெகு சிறப்பு. இக்கோயிலில் எல்லாமே வெள்ளியில் புழங்கப்படுகின்றன. செட்டிநாட்டரசர் குடும்பம் இளையாத்தங்குடி பட்டணசாமியார் வகுப்பைச் சார்ந்தவர்கள் என்பதால் இருக்கலாம். எதிரே உள்ள நகரத்தார் சத்திரமும் வெகு சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. இங்கே அறுபதாம் எண்பதாம் கல்யாணங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. முகப்பு, பந்திக்கட்டு, வளவு, அறைகள் , சமையற்கட்டு எல்லாம் உள்ளன. பாத்ரூம்கள் மட்டும் இன்னும் சிறிது அக்கறை எடுத்துப் பராமரிக்கலாம்.
கோவில் மகா மண்டபத்தில் சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் நடைபெறும் இடம். இருபுறமும் காவல் பதுமைகள். எதிரே கொலுபொம்மை படிக்கட்டுகள் இருந்தன. அவற்றிலும் இரு காவல் பெண் பதுமைகள் அழகூட்டினார்கள்.
வெளிப்பிரகாரச் சுற்று. மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.
ஸ்ரீ லெக்ஷ்மி நாராயணன். திருச்சுற்றில். கோஷ்ட தெய்வங்கள். தனித்தனிச்சந்நிதிகளில் சிலா ரூபங்களாக வெகு அழகு.
குழையத்தழுவிய காமாட்சி அம்மன். இந்த அம்மனைத் துதித்தால் குடும்ப ஒற்றுமை பலப்படும் என்பது ஐதீகம். மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இங்கே வந்தபோது  இவளும் வந்திருக்கலாமென நினைக்கிறேன்.

”மங்கையர்க்கரசி வளவர்கோன்  எனத் தொடங்கும் திருஞான சம்பந்தரின் திருநீற்றுப்பதிகம் இங்கே எழுதப்பட்டுள்ளது.

“ மங்கயற்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடு அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே.

வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியுங்
கொற்றவன் றனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவி நின்றேத்தும்
ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழிந்திட்
டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற ஆலவா யாவதும் இதுவே.

செந்துவர் வாயாள் சேலன கண்ணாள் சிவன்திரு நீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி பணிசெயப் பாரிடை நிலவுஞ்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந் தண்ணெருக் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.



வாயில் காவலாய்.

இக்கோயிலின் சிறப்பம்சமாக வாயிலிலேயே தனிச்சந்நிதியில் ஸ்ரீ அரச மங்களநாத சுவாமியும் , ஸ்ரீ மங்களேஸ்வரியும் காட்சி தருகிறார்கள்.
இக்கோயில் கோபுரத்தின் உட்புறத்தில் தசாவதார சுதைச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. முதல் நிலையில்  வலப்புறம் கூர்மாவதாரமும் இடப்புறம் மச்சாவதாரமும் காணக் கண் கோடி வேண்டும்.
எதிரே உள்ள தனி விநாயகர் திருக்கோயில் இங்கே விநாயகர் சதுர்த்தி பிரமாதமாகக் கொண்டாடப்பட்டது.
இதன் பக்கவாட்டில் உள்ள பாதையில் திருக்கோயில் நந்தவனமும் மலையாளக் கருப்பரும், நாகரும் குடிகொண்டுள்ளார்கள்.

புஷ்கரணியைச் சுற்றிலும் இக்கோயிலைச் சுற்றிலும் நாகப் புற்றுகள் அதிகம் காணப்படுகின்றன.

”சர்ப்பதோஷம் எனப்படும் நாகதோஷம் நீங்க, பரிகாரம் செய்ய வேண்டிய கிரகங்கள் ராகு - கேது ஆகும். அவர்களுக்கு உரிய பரிகாரத்தை சிரத்தையுடன் செய்தால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம் ஏற்படும். குழந்தைப் பேறு உண்டாகும். ராகு சிவனோடு இணந்தவர். அவர் இளையாத்தங்குடியில் இணையில்லா தெய்வமான கைலாசநாதரின் கடாட்சம் பெற்று நாகரூபமாய் சர்வ சக்தியுடன் திகழ்கிறார். கேது விநாயகரின் அருள் பெற்றவர். ஒக்கூராரின் கைலாச விநாயகர் ஆலய நந்தவனத்தில் எழுந்தருளி உள்ளார். வணங்கி வளம் பெறுங்கள். ” என்றொரு பலகை புஷ்கரணியின் பக்கம் மாட்டப்பட்டுள்ளது.
இது கருப்பர் சந்நிதி. எதிரே மணிகள். சன்னிதியில் கருப்பர் கருக்கருவாளோடு காட்சி தருகிறார்.
இக்கோயில் பற்றிய இன்னொரு பலகையில்

”அஷ்டமா சித்தி அனைதரு காளத்தி என்று சம்பந்தர் போற்றுவது போல இளையாற்றங்குடி ஒக்கூரார் நந்தவனத்தில் கம்பீரமாக அமர்ந்து அருள் பாலிக்கும் மஹா நாகேஸ்வரனை வணங்கி வழிபட்டு பரிகாரங்கள் செய்து பலன் பெறுங்கள்.” என எழுதப்பட்டுள்ளது.
அழகு துலங்கும் கோபுரம். விநாயகர் கோவிலிலிருந்து . நடுவில் தட்சிணா மூர்த்தியும் சனகாதி முனிவர்களும்.
கோயில் முன்பு இருக்கும் சிறு அம்மன் பீடம் போன்றதொன்று.

“இளையாற்றங்குடிக் கோயிலில்
வித்தகர் கூடிய இளசையிலே
வீற்றிருந் துலகைக் காத்தருளும்
நித்திய கல்யாணி அம்மையையும்
நீள்சடைக் கைலாச நாதரையும்
சுத்த மனத்தொடு தலைதாழ்த்தித்
தூமலர் தூவித் தொழுதோமேல்
எத்தகு குறையும் வாராமல்
எல்லா நலன்களும் பெறலாமே. !

-- நன்றி நவம்பர் 2015 செட்டிநாடு இதழ்.
தேர்க்கொட்டகை.
இளையாற்றங்குடிக் கோயிலார் தம்மை

”கல்வாசனாட்டில் இளையாற்றங்குடியான குலசேகர புரத்தில்

1. ஒக்கூருடையார், 2. அரும்பார்க்கிளையாரான பட்டின சாமியார், 3. பெருமருதூருடையார், 4. கழனிவாசக்குடியார், 5. கிங்கிணிக்கூருடையார், 6. பேரச்சந்தூருடையார், 7, சிறு சேத்தூருடையார், 8. திருவேட்பூருடையார். ” என்று குறிப்பிடுவர்.  இவர்களில் திருவேட்பூருடையார் இரணியூரிலும் பிள்ளையார் பட்டியிலும் தனித்தனிக் கோயில்கள் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. மாத்தூர் ஐந்நூற்றீசுவரர்  பெரியநாயகியம்மன் திருக்கோயில்

2. இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் சவுந்தரநாயகியம்மன் திருக்கோயில் :- 

3. வேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில் 

4. இளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும். 

5. சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.

6. இளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக்கோயில்

7. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோயில்.

8. நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திருக்கோயில்.

9. வைரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன் திருக்கோயில்.

10. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்17 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 9:49
    சிறப்பான தகவல்கள்.... நன்றி.

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam17 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:47
    நாங்கள் நகரத்தார் கோவில்களுக்குப் போய் வந்ததை நினைவு படுத்துகிறது நன்றி

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 4:24
    நன்றி வெங்கட் சகோ

    நன்றி பாலா சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.