எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 ஜூலை, 2020

நவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்கை நல்கும் ராகுபகவான்

நவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்கை நல்கும் ராகுபகவான்

"ராகுவைப் போலக் கொடுப்பவரும் இல்லை, ராகுவைப் போலக் கெடுப்பவரும் இல்லை" என்று சொல்வார்கள் நல்ல திருமண வாழ்க்கை அமையக் காரணகர்த்தா ராகுபகவான். போககாரன் என்று குறிப்பிடுவார்கள். இங்கே ராகு மங்கள ராகுவாக தன துணைவியர் நாகவள்ளி, நாககன்னி ( சிம்ஹி, சித்ரலேகா  ) யுடன் எழுந்து அருள்பாலிக்கிறார். நீண்ட ஆயுளும், சகல சம்பத்தும் அளிக்க வல்லவர் ராகு. இவர் ஆட்சி நடைபெற்றால் அந்த ஜாதகர் ராஜவாழ்க்கை வாழ்வார் என்பது ஜோதிட கணிப்பு. இவரது சுழற்சி ஒன்றரை ஆண்டுகள்.  ராகுவுக்கு உகந்த நிறம் நீலம். உகந்த மலர் மந்தாரை. உரிய ரத்னம் கோமேதகம். தான்யம் உளுந்து, நைவேத்தியம் உளுந்துப்பொடி சாதம் .
மூலவர் செண்பகாரண்யேஸ்வரர், இறைவி கிரிகுஜாம்பாள். நாகராஜன் வழிபட்ட ஈசன் எனவே நாகநாத ஸ்வாமி என்றழைக்கப்படுகிறார். கும்பகோணத்தில் இருந்து 6 கிமீ  அமைந்துள்ளது. ஸ்தலவிருட்ஷம் செண்பகம். தீர்த்தம் நாகதீர்த்தம் மற்றும் சூரிய தீர்த்தம் உட்பட பன்னிரு தீர்த்தங்கள். சூரிய புஷ்கரணி இது.
ராகு பாம்பின் உடல் கொண்டதால் காலசர்ப்பதோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம், நீக்கும் ஸ்தலம் இது.  இங்கு பூஜை செய்தால் ராகு தசை ராகுபுத்தி நடப்பவர்களுக்கு ராகு தோஷம் நிவர்த்தியாகும் என்கிறார்கள்.


கோட்டை அமைப்பில் உள்ள மதில்சுவர்கள். எவ்ளோ சப்போர்ட் பாருங்க. மிக அழகாக முன்யோசனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கார் நிறுத்தும் பகுதி. இங்கேயே கட்டணக் கழிப்பிடமும் உண்டு.
நெடிதுயர்ந்த அழகிய கோபுரங்கள்.
நெருக்கத்தில் ஒரு கோபுரம்
பாற்கடலைக் கடையும்போது கிடைத்த அமிர்தம் தங்கள் பக்கம்வருமுன் தீர்ந்துவிடுமா என்று எண்ணி காஸ்யப மகரிஷியின் மகனான ஸ்வர்பானு தேவர்களுக்குள் புகுந்து அமிர்தம் வாங்கி அருந்திவிட அதை சூரியனும் சந்திரனும் அமிர்தம் வழங்கிய மோஹினிக்குக் காட்டிக் கொடுக்கிறார்கள். அதனால் மோஹினி அகப்பையால் ஸ்வர்பானுவின் தலையில் அடிக்க அவரது உடல் தலைவேறு உடல்வேறாகத் துண்டாகி விழுகிறது. அமிர்தம் உண்ட காரணத்தால் மரணம் நிகழவில்லை. 
இறைவனை வேண்ட அவர் பாம்பின் உடலை ஸ்வர்பானுவின் தலையோடு பொறுத்த ராகுவாகவும், அதேபாம்பின் தலையை ஸ்வர்பானுவின் உடலோடு பொறுத்த அவர் கேதுவாகவும் ஆகி கிரஹபதவி பெறுகிறார்கள். ஆனாலும் இருவரும் நிழல்கிரகங்கள்தாம். எல்லா கிரகத்துக்கும் எதிர் திசையில் சுழன்று வருவார்கள். தங்களைக் காட்டிக் கொடுத்த சூரியனையும் சந்திரனையும் அவ்வப்போது கிரஹணமாகப் பீடிக்கிறார்கள்

திருமணத்தடை உள்ளவர்கள், ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கே பாலாபிஷேகம் செய்து வணங்கி வருகிறார்கள். தினப்படியுமே ராகுகாலத்தில் பூஜையும் பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. இவர் மேல் பொழியும் பால் நீல நிறமாக மாறிவிடுவதாகச் சொல்கிறார்கள்.
பிரசாதம் வழங்க பக்தர்கள் வருவதற்கான க்யூ பாதை
விசாலமான பிரகாரங்கள்.
 ராகு காயத்ரி மந்திரம்:
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம அஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்

ராகு மந்திரம்
ஓம் ப்ஹ்ராம் ப்ஹ்ரீம் ப்ஹ்ரௌம் சஹ ராகவே நமஹ|

ராகுபகவான் பாடல்

அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்மியா போற்றி

ராகு ஸ்தோத்திரம்

அர்த்தகாயம் மகாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்

தம் ராகும் ப்ரணமாம் யஹம்.

ராகு துதி

வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்
போகும் அக்காலம் உந்தன் புனர்ப்பினால் சிரமே யற்றுப் 

பாகுசேர் மொழியாள் பங்கன் பரன் கையில் மீண்டும் பெற்ற 
ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!

டிஸ்கி:- இதையும் பாருங்க.

நாகவல்லி நாககன்னியுடன் மங்கள ராகு.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. நவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன். 

2.  நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.

3. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும்

4. நவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை மிக்க கேதுபகவான்

5. நவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும் சுக்கிரமூர்த்தி

6. நவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூரியநாராயணரை நோக்கும் மங்களகுரு..

7. நவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன் சனி பகவான்.

8. நவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்கை நல்கும் ராகுபகவான்

9. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான்  

 

1 கருத்து:

  1. Thulasidharan V Thillaiakathu30 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 10:22
    படங்களும் ராகு குறித்த தகவல்களும் சிறப்பு. கோயிலுக்குச் சென்றிருக்கிறோம்...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:37
    nandri Tulsi sago

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

ஹனுமத் ஜெயந்தி கோலங்கள்

ஹனுமத் ஜெயந்தி கோலங்கள்  இந்தக் கோலங்கள்  22.12.2022 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.