எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 10 மே, 2020

அதியமான் கோட்டை ஆதி பைரவரும் பூசணிப் பிஞ்சு தீபமும்.

அதியமான் கோட்டை ஆதி பைரவரும் பூசணிப் பிஞ்சு தீபமும்.

இந்தியாவிலேயே இரண்டு இடங்களில்தான் உன்மந்திர/உன்மத்த பைரவர் கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று காசியிலும் இன்னொன்று தர்மபுரியிலும் இருக்கின்றன. இக்கோயில் 1200 வருடப் பழமை வாய்ந்தது. மிக உக்ரம் வாய்ந்த சக்தியான கோயில். சிவன் மூர்த்தி  ( சிலை) இல்லாமல் மஹாவீரரின் சிலை மட்டும் பைரவர் மூர்த்தி ( சிலை) யுடன் இங்கே ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது விசேஷம்.

நமது காலச்சக்கரத்தின் அதிபதி காலபைரவர்தான் . நம் காலக்கணக்கை ஆரம்பித்து வைப்பவரும் முடித்து வைப்பவரும்  இவரே. . இவரிடமே எல்லா சிவன் கோயில்களிலும் ( கோயில் சாவிப் பொறுப்பை ஒப்படைத்து வணங்கும் பூசையும்  ) அர்த்தசாம பூசையும் , ( அனுமதி பெற்று காலையில் கோயிலைத் திறந்து தினசரி நடைமுறை வழிபாடுகளை மேற்கொள்ளும் பூசை ) திருவனந்தலும் நடைபெறும்.

தர்மபுரியில் உள்ள காலபைரவர் கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது. இது ஒன்பதாம் நூற்றாண்டில் அதியமான் மன்னனால் கட்டப்பட்டது. இங்கே இருந்துதான் போருக்குச் செல்லும்முன் அவர் தனது  வீர வாளை வைத்து வணங்கிச் செல்வாராம். அதன் பின் அவருக்கு வெற்றிக் கோட்டையாகிவிட்டது அதியமான் கோட்டை. அவரது குலதெய்வமானார் காலபைரவர்.அரசர் காலத்தில்  கோட்டையின் சாவி இவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இன்னும் சில விசேஷங்களும் உண்டு. இங்கே ஒன்பது நவக்ரகங்களும் கோயிலின் மஹா மண்டபத்தின் மேற்கூரையில் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே இவற்றின் வழியாக வரும்போது நவக்கிரக தோஷங்கள் நீங்குமாம். அதே போல உன்மந்திர பைரவர் திருமேனியில் பன்னிரெண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும் அடக்கம்.

தலையில் மேஷத்தில் இருந்து பாதத்தில் மீனம் வரை ( சிரசு தலை மேல் அக்கினிப் பிழம்பு  - மேஷம், முகம் - ரிஷபம், கழுத்து - மிதுனம், மார்பு - கடகம், இரண்டு கால்களுக்கும் மேல்  - சிம்மம், வயிறு - கன்னி, ஆண்குறி - துலாம், தொடை - விருச்சிகம், முட்டி - தனுசு , முட்டியின் கீழ்ப்பகுதி - மகரம், பாதம் - கும்பம், பாத விரல் - மீனம் ) அடங்கி உள்ளதால் சம்பந்தப்பட்ட ராசிக்காரர்கள் அந்த ஸ்தானங்களை நோக்கி வணங்க தோஷம் நீங்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நினைத்த காரியம் நிறைவேற எலுமிச்சை விளக்கு, எள் விளக்கு, தேங்காய் மூடியில் விளக்குப் பார்த்திருப்பீர்கள். இங்கே சாம்பல் பூசணிப் பிஞ்சில் தீபம் ஏற்றப்படுகிறது. குளம்போல் வேப்ப எண்ணெய், சிகப்புத்திரி விட்டு அழகழகான தீபங்கள் தேய்பிறை அஷ்டமி அன்று  ஏற்றப்படுகின்றன. பசு நெய், தாமரைத்திரி, தேங்காய் எண்ணெயும் உபயோகப்படுத்தப்படுகின்றன.
பூசணி தீபமும், அஷ்ட பிரதட்சணமும்  பன்னிரெண்டு ஞாயிற்றுக் கிழமை மற்றும் மூன்று தேய்பிறை அஷ்டமிகளில் கடைப்பிடித்தால் எண்ணியது சித்தியாகுமாம்.
காசியிலிருந்து புனித ஆராதனைகள் செய்து எடுத்து வரப்பட்டு தெற்குத்திசை நோக்கிப் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். எனவே எப்பேர்ப்பட்ட எதிரிகளையும் சம்ஹாரம் செய்துவிடுவார்.
என்னென்ன தோஷங்களுக்கு என்னென்ன காலம், அபிஷேகம்,தீபம், மலர் அர்ச்சனை என்று குறிக்கப்பட்ட அட்டவணை.
ஸ்ரீ காலபைரவருக்கும் சனிக்கட்டு உண்டாம் அதை கீழே கொடுத்திருக்கிறேன். பாருங்கள். சனி எப்படி ஈஸ்வரர் ஆனார். ? நவக்ரஹ பதவி வகித்தார் என்று சொல்லி இருக்காங்க.
சன்னதியின் முன்னும் பின்னும் சுவரில் நிறைய சிலைகள் செதுக்கப்பட்டிருந்தன.
செந்நிற மேனி வண்ணம் கொண்டவர். சிரசில் அக்னியைத் தாங்கியவர். உடலில் பன்னிரெண்டு ராசிகளுக்கான இடம் குறிக்கப்பட்டுள்ளது. விதானத்தில் இருக்கும் பன்னிரெண்டு ராசிகளும் நவக்கிரகங்களும்.
பாம்பைப் பூணூலாகவும் அரைஞாண் கொடியாகவும் அணிந்திருக்கிறார். நிர்வாணக் கோலத்தில் காட்சி அளிக்கும் கடவுள் இவர் ஒருவரே. எனவே உடல் நலம் , மனநலம் சம்பந்தப்பட்ட வியாதிகளைக் குணப்படுத்துகிறார்.
திருத்தேர்/இரதம். இவரை வணங்கினால் கெட்டநேரமும் நல்ல நேரமாகுமாம். இவருக்கு எட்டு விசேஷமான எண். எட்டு அபிஷேகங்கள், எட்டு அர்ச்சனைகள், எட்டு மலர்கள், எட்டு பத்ரங்கள், எட்டு நைவேத்தியங்கள். ( சித்ரான்னங்கள் ), எட்டு பலகாரங்கள், எட்டு ஆரத்திகள், விசேஷம். இவற்றை எட்டு சிவாசாரியார்கள் கொண்டு செய்விப்பார்கள். இன்னும் சிறப்பு என்னன்னா சிவனின் அம்சமான இவர் நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று, சூரியன், சந்திரன், ஆத்மா ஆகிய எட்டு சக்திகளில் நிரம்பி இருக்கிறார்.
விளக்கேற்றியபின் கோயிலை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வருகிறார்கள்.
இங்கே இரு வாகனங்கள். நந்தி மற்றும் பைரவர்.
பைரவர் ( நாய் ) வாகனம். அகண்ட ஹோமம் சன்னதிக்கு எதிரில். அதை யானைமுகங்கள் காவல் காப்பது வெகு அழகு. நந்தி வாகனமும் உள்ளது.
நிரம்பி இருக்கும் ஹோம சமித்துகள். காலபைரவரின் பிறந்தநாள் கார்த்திகை - 6 . காலபைரவாஷ்டமி சிறப்பு.

உடைத்து மலை போல் கிடக்கும் தேங்காய் மூடிகள்.
சைவம் வைணவம் இரண்டுக்கும் உரிய கடவுள். இருபத்திநாலு மணி நேரமும் வணங்கக் கூடிய கடவுள். விரும்பியதைக் கொடுக்கும் காலபைரவக் கடவுளுக்கு விதம் விதமான பிரார்த்தனைகளுக்குப் பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கு.

இனி சனி எப்படி நவக்ரஹ நாயகரானார் என்பதைப் பார்ப்போம்.

 சனிக்கும் காலபைரவருக்கும் இருக்கும் தொடர்பு என்ன ?

மிருகண்டு மகரிஷிக்கு அவரது பிறந்த நட்சத்திரப்படியும் ஜாதகப்படியும் ஏழரை ஆரம்பமானதாம். எனவே அவரை சிக்கலில் மாட்டி விட்டாராம் சனி.

சித்தர்கள், ரிஷிகள், மகான்கள், சாதுக்கள், எந்த ஒரு ஆசையும் இல்லாமல் கோடிக்கணக்கான ஆண்டுகளாக தியானம், தவம், பிரணாயாமம் என்று இருந்து வருபவர்கள். இவர்களுக்கு என்று எந்த ஆசாபாசமும் கிடையாது. ஆசையின் மூலமாகவே சனி நமது நல்ல நேரத்தின் போது தவறுகளைச் செய்ய வைக்கிறார்.

பிறகு ஏழரைச்சனி அஷ்டமச் சனி வரும்போது அந்த தவறுக்குரிய தண்டனையைத் தரும்விதமாக செயல்படுகிறார். இந்த விதியெல்லாம் நம்மைப் போன்ற சராசரி மனிதர்களுக்கே பொருந்தும்.

சனியின் இந்தச் செயல்பாட்டினால் மிருகண்டு மகரிஷி அவமானப்படும் சூழலை அடைந்தார். இதற்கு யார் காரணம் என்று தனது தவ ஆற்றல் மூலம் தேடி சனிதான் காரணம் என்று கண்டறிந்தார். உடனே சனிக்கு வாதநோய் வரக்கடவது என்று சாபமிட்டார். முனிவரின் பிடி சாபத்தினால் சனிக்கு உடனே வாதம் பீடித்துவிட்டது.

சனியின் வேதனையை உணர்ந்த அவரது அன்னை சாயாதேவி சனியை பைரவ வழிபாடு செய்யும்படி போதனை செய்தார். அதன் படி பல கோடி ஆண்டுகளாக சனி பைரவ ஆராதனை செய்து வர பைரவரின் அருளால் மிருகண்டு மகரிஷியின் சாபம் நிவர்த்தியானது. சனியின் வாதநோய் விலகியதும் அகமகிழ்ந்த சனி ஸ்ரீ காலபைரவப் பெருமானிடம் தன்னை அவரது சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.

ஸ்ரீ காலபைரவப் பெருமானும் அவரை சீடராக ஏற்றுக் கொண்டு அவருக்கு ஏராளமான தெய்வ உபதேசங்களைப் போதித்தார். அதன்படி சனி மீண்டும் ஸ்ரீ காலபைரவ வழிபாடு செய்து நவக்ரகஹ பதவி பெற்றார்.

பூமியில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருடைய தொழில்/வேலை, மற்றும் ஆயுளை நிர்ணயிக்கும் பொறுப்பை ஸ்ரீகாலபைரவப் பெருமான் சனியிடம் ஒப்படைத்தார்.

யார் என்னைத் தொடர்ந்து வழிபடுகின்றார்களோ அவர்களை ஒரு போதும் துன்புறுத்தக் கூடாது என்று சனியிடம் ஸ்ரீ காலபைரவப் பெருமான் சத்தியம் வாங்கிய பின்னரே நவக்ரஹமாக செயல்பட அனுமதித்தாராம். !

1. உன்மத்த பைரவர் தியானம்.

த்ரிநேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
ஹேமவர்ணம் மஹாதேவம் அஸ்வவாஹன ஸுஸ்த்திதிம்
கட்கம் கபாலம் முஸலம் தநந்தம் கேடகம் ததா
வாராஹி சக்தி ஸகிதம் வந்தே உன்மத்த பைரவம்.

2. உன்மத்த பைரவர் காயத்ரி - ஸ்ரீ வாராஹி (புதனின் ப்ராணதேவதை)

ஓம் மஹா மந்திராய வித்மஹே
வராஹி மனோகராய தீமஹி
தன்னோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்.

ஓம் மஹிஷத் த்வஜாய வித்மஹே
தண்ட ஹஸ்த்தாய தீமஹி
தந்நோ வாராஹி ப்ரசோதயாத்.

3. பைரவர் மூலமந்திரங்கள்.

அஸ்யை ஸ்ரீ பைரவ மஹா மந்த்ரஸ்ய ப்ரஹதாரண்ய ரிஷி: அனுஷ்டு சந்த: பைரவோ தேவதா வம்பீஜம், மாயா சக்தி: கம் கீலகம்,  மம அபீஷ்ட,  ஸித்யர்தே ஜபே விவியோக:

ஏக ஷஷ்டி அக்ஷரம் மந்திரம், லகு சித்திப் ப்ரதாயகம்
ஏக ஷஷ்டி சதம் குர்யாத் ஜபம் மந்திரஸ்ய ஸித்தயே.

ஓம் ஹ்ரீம் ஹம் வடுகாய ஆபத்துத்தாரணாய குரு குரு வடுகாய ஹ்ரீம்.

ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்: ஹ்ரைம்
ஹரௌம், க்ஷம் க்ஷேத்ரபாலாய நமஹ:

நம்மையும் நவக்ரஹங்களின் கொடிய பார்வையிலிருந்து பைரவர் காப்பாராக.

1 கருத்து:

  1. பெயரில்லா15 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 1:30
    ஓம் வைரவரே நமகா!

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்15 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:27
    அழகான படங்களுடன் அருமையான விளக்கங்கள்... நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University15 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 1:28
    அற்புதமான கோயில்கள். அருமையான செய்திகள். இதுவரை நான் அறிந்திராதவை. நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan3 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 10:51
    நன்றி பெயரில்லா

    நன்றி டிடி சகோ

    நன்றி ஜம்பு சார்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan3 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 10:51
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

வைகுண்ட ஏகாதசிக் கோலங்கள்

வைகுண்ட ஏகாதசிக் கோலங்கள்  இந்தக் கோலங்கள்  5. 1. 2023  குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.