எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 மே, 2020

காரைக்குடிக்கு அருகே கல்வி, செல்வம் , சந்தோஷம் அளிக்கும் கோயில்கள்.

காரைக்குடிக்கு அருகே கல்வி, செல்வம் , சந்தோஷம் அளிக்கும் கோயில்கள்.

காரைக்குடிக்கு அருகில் இருக்கும் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி உலகப் புகழ் வாய்ந்த கோயில்கள். ஆனால் இங்கே குன்றக்குடி பிள்ளையார்பட்டி சாலையில் இருக்கும் லெக்ஷ்மி குபேரர் கோயில்( வாஸ்து கோயில் ), ஞான சரஸ்வதி கோயில் மற்றும் பாதரக்குடி அருகே இருக்கும் சந்தோஷி மாதா கோயில்களும் சிறப்பு வாய்ந்தவைதாம்.

விநாயகருக்கு அருகில் லெக்ஷ்மி , சரஸ்வதி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள் புகைப்படங்களில் . அதே போல் சந்தோஷி மாதா விநாயகரின் மகள். இம்மூவரும் பிள்ளையார் பட்டியின் அருகருகே கோயில் கொண்டிருப்பது வெகு சிறப்பு.   குபேர (லெக்ஷ்மி), ஞான சரஸ்வதி, சந்தோஷிமாதா ஆகிய கோயில்கள் ஒரு சீரற்ற அஃகன்னா போல் அமைந்துள்ளன.

கல்வியும் செல்வமும் இன்றியமையாதன. கல்வியும் செல்வமும் இருந்து குடும்ப ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது. குடும்பத்தில் நிரந்தர ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவுவது அத்யாவசியமானதுதானே.

இதற்கு முன் சில இடுகைகளில் இந்த வாஸ்து கோயிலில் இருக்கும் விநாயகர்களைப் பகிர்ந்திருப்பேன். கோயிலில் படம் எடுக்க அனுமதி இல்லையாததால் கடைகளையும் வாஸ்து மீனையும் எடுத்திருந்தேன்.

காரைக்குடியில் இருந்து பதினாலுகிலோமீட்டரில் உள்ள குன்றக்குடியில் இருந்து பிள்ளையார் பட்டி செல்லும் வழியில் இடப்புறம் பிரியும் சாலையில் சிறிது திரும்பி உள்ளே சென்றால் இக்கோயில் அமைந்திருக்கிறது.
தாமரை பீடமும், முன்னே வாஸ்து மீன்கள் நீந்தும் தொட்டியும் இருக்கிறது. மேலேறி சென்றால் குபேரன் சந்நிதி. மிக அருமையான சோலையின் நடுவே அமைந்துள்ள இக்கோயில் தரிசிக்க வேண்டிய ஒன்று. பக்கங்களில் குழந்தைகள் விளையாட பூங்காவும் உள்ளது.
குபேர பூஜை யந்திரங்கள் , தாமரை பீடங்கள் கிடைக்கின்றன.


 குபேரன் இராவணனின் தம்பி என்பதும் ( இவர் மனைவி பெயர் சித்ரலேகா. சங்கநிதி, பதுமநிதி என்ற உதவியாளர்கள் உள்ளவர். ) ஒரே ஒரு கையசைவில் ஒருவரை கோடீஸ்வரர் ஆக்கும் வல்லமை உள்ளவர் என்பதும் உபரி தகவல்.

வந்து வேண்டிச் செல்லுங்கள். உங்கள் கோரிக்கைக்குச் செவிசாய்த்து லேசா கையசச்சுட்டாப் போதும். நீங்க மாபெரும் கோடீஸ்வரராயிடுவீங்க. :)

அடுத்துச் சென்ற இடம் ஞான சரஸ்வதி கோயில். இதுவும் அங்கே அருகிலேயே உள்ளது. அதே சாலையில் அதே போல் இடதுபுறம் திரும்ப வேண்டும்.

தமிழகத்தில் இருக்கும் ஒரு சில சரஸ்வதி கோயில்களில் காரைக்குடிக்கு அருகில் இருக்கும் இக்கோயில் ஞானத்தையும் கல்வியையும் அளிப்பதால் ஞான சரஸ்வதி கோயில் என்றழைக்கப்படுகிறது. மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுக் கிரீடத்துடன் காட்சி அளிக்கிறாள் ஞான சரஸ்வதி. அவளை வணங்குவோர்க்கு நல்ல ஞானத் தெளிவை அளிப்பாள் என்பது உறுதி.

பரிட்சை சமயங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்றைய நாட்களிலும் மக்கள் வந்து கல்விக்கடவுளின் அருள்பெற்றுச் செல்கிறார்கள்.
அங்கேயே முன்புறம் முருகனின் வேல் ஒன்று ஸ்ரீ ஜோதி சக்தி சொரூபவேல் என்று ஸ்தாபிதம் செய்யப்பட்டு வணங்கப்படுகிறது. மிக அழகான அமைதியான கோயில் இதுவும். நடக்க பாதைத் தளம் போடப்பட்டுள்ளது.
குன்றக்குடி செல்லுமுன்பே பாதரக்குடிக்கு அருகில் இருக்கும் இக்கோயில் தனித்தன்மை வாய்ந்தது. வடநாட்டார் மட்டுமே வணங்கும் சந்தோஷி மாதா இங்கே கோயில் கொண்டிருப்பது வித்யாசம். அதுவும் கோபுரத்தில் பத்தடி சிலையாகச் செதுக்கப்பட்டு அவ்வழி செல்வோருக்கெல்லாம் வீரத்தையும் தைர்யத்தையும் சந்தோஷத்தையும் அருள்கிறாள்.

ரக்‌ஷா பந்தன் திருவிழாவின் போது விநாயகரின் இரு குழந்தைகளான சுபமும் லாபமும் தங்களுக்கு ரட்சை கட்டிப் பாதுகாக்க சகோதரி இல்லையே என்று ஏங்கியபோது விநாயகர் சித்தி,   புத்தியின் துணையோடு அவர்களுக்கு ஒரு சகோதரியை உருவாக்கிக் கொடுக்கிறார். அவருக்கு பார்வதி, லெக்ஷ்மி, சரஸ்வதி ஆகியோர் தோன்றி ஆசி அளிக்கின்றனர். தன் சகோதரர்களுக்கு ரட்சை கட்டிச் சந்தோஷத்தை அளித்ததால் அவர்தான் சந்தோஷி மாதா என்றழைக்கப்படுகிறார்.

வெள்ளிக்கிழமைகளில் விசேஷம். கொண்டக்கடலை, வெல்லம், பாயாசம், பூரி போன்றவை நிவேதிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

இம்மூன்று கோயில்களுக்கும் அடுத்தமுறை காரைக்குடி வரும்போது கட்டாயம் சென்று தரிசித்து அருள் பெறுங்கள். வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan4 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 2:41
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.