எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும்

நவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும்


கும்பகோணத்தில் இருந்து திருவெண்காடு 52 கிமீ தூரத்தில் உள்ளது. காலை வேளையில் சென்று ஈசனுக்கும் அம்பிகைக்கும் திருவனந்தல் பார்த்தோம்.
இக்கோயில் சோழர் காலத்தில் கட்டிடப்பட்டது. கிபி 1000 இல் இருந்து தற்போது வரை அழகாகப் புதுப்பிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வெண்காந்தள் மலர்கள் நிரம்பிய காடாக இருந்ததால் இது திருவெண்காடு என அழைக்கப்பட்டது.



இங்கே மூன்று என்ற என் விசேஷம். மூன்று மூர்த்தி - சுவேதாரண்யர், அகோர வீரபத்திரர், நடராஜர், மூன்று அம்பிகை - பிரம்மவித்யாம்பிகை, துர்க்கை, காளி, மூன்று ஸ்தலவிருட்ஷம்-  வட ஆலமரம், கொன்றை, வில்வம், மூன்று தீர்த்தங்கள் -  அக்கினி, சந்திரன் சூரியன்
சமய குரவர் நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும்.சிவபெருமான் 1008 தாண்டவங்கள் புரிந்த திருத்தலம். மேலும் 108 சக்தி பீடங்களுள் ஒன்றாகும்.


பல்வேறு சிறப்புகளை உடையது திருவெண்காடு ஸ்தலம். மிகப் பெரும் கோயில் நம்மை வரவேற்கிறது. ஈசன் திருவெண்காடர் என்ற ஸ்வேதாரண்யேஸ்வரர், அம்மை, பிரம்மனுக்கு வித்தை போதித்த பிரம்மாவித்யாம்பிகை.
ஸ்ரீ பார்வதி கல்யாண ஓவியம்
ஆனந்த தாண்டவ ஓவியம்
திருஞானசம்பந்தர் இத்தலம் வந்தபோது ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் கண்டாராம். அதனால் அவர் அம்மா என்றழைக்க அம்பிகை அவரைத் தனது வலது பக்க இடுப்பில் சுமந்து கோயிலுக்குக் கொண்டு சென்றாராம். அதனால் அவருக்குப் பிள்ளை இடுக்கி அம்மன் என்று பெயர்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதனின் மஹாவிஷ்ணுவும் இங்கே கோயில் கொண்டுள்ளார். சீரான மாமன் உறவு, நரம்பு நோய்கள் ஆகியவற்றுக்கு காரகனும் இவரே.
ஈசன் தனிக்கோயிலில் அம்பாள் தனிக்  கோயிலிலும் புதன் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார்கள். மிகப் பெரிய கோயில் இது.
தாரைக்கும் சந்திரனுக்கும் பிறந்த புதன் தன் தோஷம் நீங்க திருவெண்காட்டிற்கு வந்து சந்திர புஷ்கரணியில் நீராடி சுவேதாரண்யரையும் பிரம்மவித்யாம்பிகையையும் வணங்கித்  தவம் செய்ய அவரது தோஷம் நீங்கி புதன் என்ற கிரகபதவியும் பெற்ற ஸ்தலம் இது.  புதன் அழகும் ஒளியும் மிக்கவர்.

புதனுக்கு உகந்தவை பச்சை நிறம், பச்சைப் பயறு, வெண்காந்தள் மலர்., மரகதப் பச்சைக்கல் நவரத்தினம், பால்சாதம் நைவேத்யம்.

இது புதன் பரிகாரத்தலம் .வாக்கு, கல்வி , மதிநுட்பத்துக்குக் காரணன்.கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் இங்கு வந்து புதனுக்கு உரியவைகளை அர்ப்பணித்து வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது உறுதி. பதினேழு மூலிகைகள் கொண்ட எண்ணெய் கோயிலின் உள்ளேயே   வாங்கி புதன் சன்னதியில் தீபம் ஏற்றுகிறார்கள்.



சக்திமிக்க நந்தி . இதைத் தொடவேண்டாம் என எழுதி இருந்தது திருவெண்காட்டில். நந்தியின் உடலில் சில இடங்களில் குத்துப்பட்டதுபோல் பள்ளங்கள். ரிஷிகளைத் தவம் செய்யவிடாததோடு மருத்துவன் என்னும் அரக்கன் அகந்தையால் உண்டாக்கிய காயங்கள் இவை. சினந்த சிவன் அகோரமூர்த்தியாகத் தோன்றி அவனை அழித்தது இத்தலம் 

இங்கே நடந்து நடந்து காலே வலித்து விட்டது. அவ்வளவு பெரிய கோயில் !

நீண்ட பாதைகளை பார்த்துக் கோயில் முடிஞ்சிருச்சா இன்னும் இருக்கா எனக் கேட்கத்  தோன்றியது.
 புதன் வித்யாகாரன். இவரை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். ( புத்தகம் போடுவதென்றால் கூட இவரின் அருள் வேண்டுமாம். ! அது அபரிமிதமாக இருந்தால்தான் புத்தகம் வெளிவருமாம் !  ) நாமளும் நல்லாக் கும்பிட்டுக்குவோம் :)
புதன் துதி
ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்

புதன் பாடல்
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந் தந்தாள்வாய் பண்ணொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி

மதனநூல் முதல் நான்கு மறை புகல் கல்வி ஞானம்
விதமுடன் அவர வர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்
சுதன்; பவிசு பாக்கியங்கள் சுகம் பல கொடுக்க வல்லவன்;
புதன், கவிப்புலவன், சீர்மால் பூங்குழல் போற்றி! போற்றி !

“புத கவசம்”- நோய், துன்பம் நீங்க, புண்ணியங்கள் பெற- தினமும்/ புதன் கிழமை.

 அம்பொனாடை அழகுபடப்பனை
பம்பு குங்கும மேனியும் பார் எலாம்
நம்பு புத்தக கையும் நயந்துகொள்
தம்பிரான் புதன் தால் மலர் ஏத்துவாம்!

 வரும்புதன் சென்னி காக்க!
வளர்தரு மதியின் மைந்தன்
அரும்பிறை நெற்றி காக்க!
அறிஞன் கண் இரண்டும் காக்க!

 விரும்பு உறு செவி இரண்டும்
விதுமகன் காக்க! மெய்க்கண்
தரும்பல சுகந்தம் பூசும்
சவுமியன் உயிர் புரக்க!

 புத்தகம் ஏந்து நாதன்
புயவரை இரண்டும் காக்க!
நித்தமும் தேவர் போற்று
நின்மலன் மருங்குல் காக்க!

 வித்தக வன நாதன்
விழைகரு நாபி காக்கச்
சுத்தநூல் கலைவல்லாளன்
சொலும்கடி தடம் புரக்க!

 தேவர்கள் தலைவன் என்றும்
திருமலி தொடை புரக்க!
மேவரும் உரோகிணி மைந்தன்
விழைதரு முழந்தாள் காக்க!

 ஆவன தருவோன் சங்கம்
அளிக்க வில் அமர் கரத்தோன்
பாவடி காக்க மேனி
பனிமதி புதல்வன் காக்க!

 நலமேவும் புதகவசம் படிப்பவர்
கேட்பவர் கேட்க நயந்து செய்வோர்
வலமேவும் துன்பு ஒழிய நோய் ஒழியப்
பல்லாண்டு வாழ்க்கை எய்தி
நிலமேவும் புத்திரரும் பௌத்திரரும்
மிகப்பெருக நினைந்த எல்லாம்
அலமேவும்படி பெறுவர் புண்ணியமும்
மெய்க்கதியும் அடைவர் அன்றோ!


டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. நவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன். 

2.  நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.

3. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும்

4. நவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை மிக்க கேதுபகவான்

5. நவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும் சுக்கிரமூர்த்தி

6. நவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூரியநாராயணரை நோக்கும் மங்களகுரு..

7. நவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன் சனி பகவான்.

8. நவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்கை நல்கும் ராகுபகவான்

9. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான் 

1 கருத்து:

  1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University28 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:48
    பல முறை சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக, நன்றி.

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam28 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 3:14
    கும்பகோணத்திலிருந்து ஒரு முறை நவக்கிரக கோவில்கள் எல்லாவற்றுக்கு ஒரே நாளில் சென்று வந்ததும் உண்டு

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:33
    Nandri Jambu Sir.

    Nandri Bala Sir. superb !

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.