எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 27 நவம்பர், 2020

குரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில்.

குரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில்.


குரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில்.

குன்றக்குடியில் இருந்து நான்கைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில். எல்லா ஐயனார் கோவில்களும் போல இருந்தாலும் இது இன்னும் மிரட்சியோடு கூடிய அழகு.

அமைவிடமே ஒரு ஆற்றின் மேல் என்பதால் இவர் ஆறடி ஐயனார். கோவிலின் இடப்புறம் அந்தப்பக்கட்டு ஒரு கண்மாய் தெரிகிறது. அதன் நீர்த்தடம் வரும் ஆற்றுப்பாதை கோவிலின் வலப்புறம் ஒரு மாபெரும் ஆற்றுப்பாதை. மதகடி போல் காட்சி தந்தது.

குன்றக்குடியில் இருந்து இதோ வந்துவிடும் அதோ வந்துவிடும் என புகுந்து புறப்பட்டால் தட்டட்டி வந்தது. அங்கே ஒரு சித்தி விநாயகர் கோவிலும் ஒரு டீக்கடையும் ஒரு பொது விநியோகக் கடையும் ஆங்காங்கே அமைந்திருந்தது.

அதையும் தாண்டிப் போனால் மண் சாலை அதுவும் இரு புறமும் நெருக்கமாக புதர்ச் செடிகளும் கொடிகளும் மரங்களும். ஒரு கார் மட்டுமே செல்லலாம். ஆங்காங்கே புத்திசாலித்தனத்தோடு ஒதுங்கினால் இன்னொரு காரை போக விடலாம். இதே போல் ஒரு இரண்டு கிலோமீட்டர் பாதை. மிரட்சி தந்த நல்ல நெடிய வனம். ஐயனார்களுக்கும் ஆக்ரோஷ தேவதைகளுக்கும் ஏற்ற இடம்.

பாதை முடியும் இடத்தில் இடது புறம் கோவில். அதன் வாயிலின் முன்பு மிகப்பெரும் சரிவு. அதன் பக்கவாட்டில் ஏறி இறங்கிக் காரை நிறுத்திச் சென்றால் ஐயனார் புரவி. மேலும் பல புரவி எடுப்புகள் நின்றிருந்தன. ஆறேழு புரவிகள். பின் புலத்தில் மாபெரும் புரவி ஐயனார் கருப்பர் ஆகியோருடன்.

உள்ளே சென்றால் உண்ணாமுலையம்மன், பதினெட்டாம்படிக் கருப்பர், சிறுமி அம்மன், மூல கணபதி, பூரணா புஷ்கலா சமேத ஆறடி ஐயனார் காட்சி அளித்தார்கள். இந்த ஐயனார் கோவில்களுக்கு வரும்போது மட்டும் உடலும் மனமும் புல்லரித்துவிடும். அது ஏனோ தெரியவில்லை ஒரு மாதிரி மயிர்க்கூச்செரியும் உணர்ச்சி.

இரத்த ஓட்டம் எல்லாம் சுறுசுறுப்பாகிவிடும். அந்தக் கரம்பைக் கற்களை மிதித்து நடக்கும்போது உடலில் அக்யுபக்ஞ்சர் செய்ததுபோல் ஒரு பரபரப்பு. பிரகாரம் சுற்றி வந்து எல்லாரும் அமர்ந்தார்கள்.

வேளார் மாம்பழச் சாற்றினை அபிஷேகத்துக்காக எடுத்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் மலைபோல் மாம்பழங்கள் குவிக்கப்பட்டிருந்தன. பாலும் பூவும் பூமாலைகளும் அபிஷேகத்திரவிங்களும் குவிந்து கொண்டிருந்தன.

நல்ல மதிய நேரம். அனைவரும் சமுக்காளம் விரித்து அமர்ந்திருந்தார்கள். அபிஷேகம் ஆராதனை பூஜை எல்லாம் பார்த்துத் திரும்ப நேரமாகிவிடும் என்பதால் நாம் இன்னொரு வேளாரிடம் விபூதி வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

சொல்ல மறந்துட்டேன். கோவிலில் முன்னோடி பூரணா புஷ்கலா ஸ்ரீ ஆறடி சாத்தையனார் சந்நிதிக்கு நேர் எதிரிலேயே வாசலில் கோவில் கொண்டிருக்கிறார். நுழைந்ததும் அவரிடம்தான் விபூதி – துண்ணூறு வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம்.

இக்கோயில்கள் இருக்கும் ஊர்களிலும் நகரத்தார் கோவில்கள் இருக்கும் ஊர்களிலும் நகரத்தார் வசிப்பதில்லை. அது ஏதோ சாபமாம். ஆகையால் இக்கோவில்களை விட்டு வேறு 96 ஊர்களில் அவர்கள் வீடுகளைக் கட்டிக் கொண்டார்கள். அது இப்போது 72 ஆக சுருங்கி விட்டது.

இந்த சாத்தையனார் என்ற பேரிலும் ஒரு மரபுச் செய்தி இருக்கு. வணிகம் செய்யச் சென்ற நகரத்தார் குழுக்களுக்கு அப்போது சாத்து வணிகம் என்று பேரும் அதில் பலருக்கு சாத்தப்பன் என்ற பேரும் வழங்கியது. இப்போதும் வழக்கத்தில் உள்ளது. வணிகத்தில் காவலாக உறுதுணையாக வந்ததால் இவர் சாத்தையனார் அதுவும் ஆறு அடியில் இருக்க அதில் அமர்ந்திருப்பதால் ஆறடி ஸ்ரீ சாத்தையனார் ஆக அருள் பாலிக்கிறார். 

மரஞ்செடிகொடிகள் நெருங்க சோலை போன்ற குளிர்ச்சியான இடத்தில் மிக அருமையான தெய்வீகக் காட்சி கண்டு வணங்கி அருள் பெற்று வந்தோம்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்1 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 2:18
    இன்று தான் அறிந்தேன்...!

    பதிலளிநீக்கு

    கரந்தை ஜெயக்குமார்1 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 2:53
    அருமை

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan9 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 11:33
    நன்றி டிடி சகோ.

    நன்றி ஜெயக்குமார் சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.