எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 22 நவம்பர், 2020

ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்

”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அடிக்கடி நான் முணுமுணுப்பது. அதேபோல் குழந்தைகளைக் கொஞ்சும் போது “ ங்கா ங்கா ங்கா காவேரி ரங்கா கஸ்தூரி ரங்கா எங்கே இருக்குமாம் ரங்கம்பழம் . தீர்த்தக் கரைக்கும் திருவானைக்காவலுக்கும் நடுவிலே இருக்குமாம் என்னைப் பெத்த ரங்கம் பழம்” என்று கொஞ்சுவார்கள் காரைக்குடிப் பக்கம்.  மேலும் ஸ்ரீரங்கம் என்றால் ஸ்ரீரங்கத்து தேவதைகளும் ரங்கநாதன் ஆகிய சுஜாதாவும் நினைவுக்கு வராவிட்டால் நாம் என்ன எழுத்தாளர். ? 

108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்று. காவிரிக்கரையில் அமைந்திருக்கும் சிறப்புப் பெற்றது. ஏழு சுற்று மதில்கள், 21 கோபுரங்கள் மட்டுமல்ல. தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிதான இக்கோபுரம் தமிழக அரசின்  பண்பாட்டுச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றியது இங்குதானாம். !

மூலவர் அரங்கநாதர், தாயார் ரங்கநாயகி, ஸ்தலவிருட்சம் புன்னை, தீர்த்தம் சந்திர தீர்த்தம் & நவதீர்த்தம். வைகுண்ட ஏகாதசி, பிரம்மோத்ஸவம் விசேஷம். இக்கோவிலின் வெளிச்சுற்றிலும் வீடுகள் அமைந்துள்ளன. கோயில் மதிலை ஒட்டிய பிரகாரத்திலும் வீடுகள், கடைகள் காணப்படுவது விநோதம். 


இக்கோயில் விமானம் திருப்பாற்கடலில் இருந்து சுயம்புவாகத் தோன்றியதாம். இதை இஷ்வாகு குல அரசன் அயோத்தியில் வைத்து பூஜித்துவந்தாராம். இராமர் இதை விபீஷணன் கேட்டதால் கொடுக்க அவர் இலங்கைக்குச் செல்லும் வழியில் இங்கே இளைப்பாறினாராம். அப்போது இதை இங்கே வைக்க திரும்ப எடுக்க முடியவில்லையாம். விபீஷணன் விருப்பத்திற்கிணங்க பெருமாள் தென்திசை நோக்கிப் பள்ளி கொண்டிருக்கிறாராம். தர்மவர்ம சோழன் என்ற மன்னன் கட்டிய கோவில் இது. இதுதான் கோயில் ஒழுகு குறிப்பிடும் இத்தல வரலாறு.


இக்கோயிலைப் பற்றி நாலாயிரந்திவ்யப் ப்ரபந்தத்தில் பாசுரங்கள் இயற்றப்பட்டுள்ளன. இதற்கு மங்களாசாசனம் செய்தவர்கள் பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர்.

நாங்கள் சென்றபோது பெருங்கூட்டம். இதுதான் சாக்கு என்று போலீசாரும் அங்கே மூலஸ்தானத்தின் கண்காணிப்பாளர்களும் மேலே கை வைத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். கை வைக்காதீர்கள் என்று மூலவரைத் தரிசித்துவிட்டு ( பாதுகா தரிசனம் செய்துவிட்டு ) வருவதற்குள் பத்து செகண்ட் கூட ஆகியிருக்காது.  ம்ம் இதுக்குத்தான் தள்ளுறது என்று உடனே தோளில் கைவைத்துத் தள்ள வந்தார் கண்காணிப்பாளர். தொடாதீர்கள் தொடாதீர்கள் என்று கத்திவிட்டு நகர்ந்து வந்தோம். 

சாமியைப் பார்க்க இந்த ஆசாமிகள் செய்யும் அக்கிரமம். கடவுள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். இந்த அரசாங்கமும் அறநிலையத்துறையும் இதற்கு ஒரு முடிவு கட்டினால் தேவலை.

பூலோக வைகுந்தம் என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் நான்காம் ப்ரகாரங்களில் அனுமதிச் சீட்டுப் பெற்று வேண்டுதலுக்காக இரவு தங்கும் மக்களைப் பார்த்தேன்.

அதன் பின் நாங்கள் பெரிய திருவடி, சிறிய திருவடி, ஹயக்ரீவரை வணங்கினோம். சக்கரத்தாழ்வாரின் சந்நிதிக்கு வந்தால் சாத்தி இருந்தது. இராக்கால பூஜை போல. எல்லாரும் அமர்ந்திருந்தார்கள். நாமும் அமர்ந்தோம். நகாரா சத்தத்துடன் தீப தூப ஆராதனை பார்த்து மனமகிழ்ந்து வந்தோம்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்18 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 11:22
    இந்தக் கோயிலில் இருப்பது உண்மையான மூலவர் தானே...?

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan18 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:19
    ஏன் இப்படி ஒரு கேள்வி டிடி சகோ. ? இது பத்தின விபரம் தெரியலையே..

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam18 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 4:44
    மொட்டைக் கோபுரம் நல்ல நின்ற கோபுரமாக வள்ர்ந்ததை கண்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 7:05
    அப்படியா பாலா சார். ?!

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.