எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 18 நவம்பர், 2020

ஆத்தங்குடி நகரச் சிவன்கோவில்.

ஆத்தங்குடி நகரச் சிவன்கோவில்.

ஆத்தங்குடி நகரச் சிவன் கோவில்

ஆத்தங்குடி நகரச் சிவன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் முடிந்தது. ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். கோபுரங்கள் புதுப்பொலிவுடன் ஜொலிக்க சுற்றிலும் நூற்றுக்கணக்கான யாகசாலைகள் காட்சி அளித்தன. எல்லா வகையிலும் ( வட்டம் , சதுரம், தாமரை, இதயம் ஆகிய வடிவங்களில் ) யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 


ஊருணியிலும் வண்ணக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தது சிறப்பு. தண்ணென்று விருட்சங்கள் சூழ்ந்திருந்த ஊருணியும் தூர்வாரி ( மழை பெய்ததால் ) நீர் நிரம்பி இருந்தது. ஊருணிக்கும் நாற்புறமும் பூதகணங்கள்  ரிஷபத்தோடு காவல் காக்க மிகப்பெரிய ஆறு படிக்கட்டுகள்  30, 40 படிகளோடு அமைந்திருந்தன. ஊரணியின் ஒவ்வொரு மூலையிலும் விளக்குத்தூண்கள் பொருத்தப்பட்டுள்ளன.  
கோயில் வாயிலின் இரு புறமும் விநாயகரும் முருகனும் தந்தை தாய்க்குக் காவலாய் இரு தனிச்சந்நிதிகளில் கோவில் கொண்டிருக்கிறார்கள். கோயில் வெளியிலேயே சுவரில் நால்வரின் பாடல்களை எழுதிப்போட்டிருக்கிறார்கள். நெடிதுயர்ந்த  எழுநிலை இராஜகோபுரம் கண்ணைக் கவர்ந்தது. 
கோபுரத்தில் ரிஷபாரூடராகக் காட்சி அளிக்கிறார்கள், அதிலும் வெகு அழகாக அம்மையும் அப்பனும் ஒருபுறம் விநாயகரோடும், இன்னொருபுறம் முருகனோடும் காட்சி அளிக்கிறார்கள்.. பணிப்பெண்கள் கவரி வீசுகிறார்கள். இந்த சிற்பத் தொகுதியின் அழகும் கண்ணை விட்டு மறையவில்லை. முதல் நிலையில் மூன்று பாகங்களாகப் பிரிந்து வித்யாசமாக இருந்தது. 
கோபுரத்தில் ஒவ்வொரு நிலையிலும் கால்களை ஊன்றி கம்பீரமாக கதையோடு சிம்மத்தின் தலையில் காலூன்றி நிற்கும்  துவார பாலகர்கள், இராமர் பட்டாபிஷேகம், பிரம்மா, விஷ்ணு நாரதர், சஞ்சீவி பர்வதத்தோடு அனுமன், இது போக ஒவ்வொரு நிலையிலும் மீசையை முறுக்கியபடி ஆஜானுபாகுவான பிரம்மாண்ட காவல் வீரர்கள்,  முருகன், சிவபூஜை செய்யும் விஷ்ணு, மீனாட்சி திருக்கல்யாணம், அம்பாள், விபீஷண சரணாகதி, நரசிம்மர், இராமர் வனவாசம்,ரிஷபங்கள், அம்பிகை தவம், குழலூதும் கிருஷ்ணன், விநாயகர், சரஸ்வதி, கருடவாகனத்தில் பெருமாள், வாமனன் , சிவனடியார்கள் என்று சிற்பங்களைப் பார்த்துப் பிரமித்தேன். 
நல்ல நீண்ட பிரகாரங்கள். விநாயகர் சுற்றுப் பிரகாரத்தில் காட்சி தருகிறார். கற்தூண்கள் ஒரே மாதிரியாக மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தென்முகக் கடவுள் இங்கே ஆலமர் அறம் சொல்மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார். 
கணபதி.

இக்கோயிலில் ஒரு சிறப்பு. குண்டோதரன் மீனாட்சி திருக்கல்யாணத்தில் காய்கனிகளையும் உணவு வகைகளையும் உருட்டி விழுங்கும் கிராஃபிக்ஸ் காட்சியும் சிவன் அனுகிரஹத்தால் அவன் கை வைக்க அவ்விடத்தில் வைகை உருவாகி அதை அவன் உறிஞ்சிக் குடிக்க தாகம் தீர்த்த காட்சியும் விதான ஓவியமாக வரையப்பட்டுள்ளது. திருவிளையாடல் புராணத்தில் உள்ள சிவன்  விறகு விற்றல், வளையல் விற்ற காட்சிகளும், வளையல் போடுதலும் ஓவியமாக உள்ளன.  
திருநடையில் சிம்ம யாளியும் செம்பு துவஜஸ்தம்பமும் ( கொடிமரம் ) பலிபீடமும் நந்தியும் கருவறை வாயிலில் பிரம்மாண்ட பித்தளைத் திருவாட்சியும் மின்னுகின்றன. 

நாங்கள் சென்றபோது உச்சிக்கால பூஜை நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு சன்னிதியிலும் அபிஷேகம் நடைபெற்றது. கோயில் மூலவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அம்பிகை மீனாட்சி அம்மன். பைரவர் வெகு அழகு. மூவருக்கும் அபிஷேகம் பார்த்தோம்.

கோவில் எதிரில் துவஜஸ்தம்பம் போல செல்ஃபோன் சிக்னல் டவர் இருக்கிறது. J  

உள்ளே உள்ள மூன்றுநிலைக் கோபுரமும் அழகு. அதிலும் துவாரபாலகர்கள், பூதகணங்கள், பணிப்பெண்கள், ரிஷபங்கள், விநாயகர், ரிஷபாரூடர், தட்சிணாமூர்த்தி, மயில்மேல் சுப்ரமண்யர், குறவன் குறத்தி குழந்தை, வேடுவன் வேடச்சி, ஐந்துமுக விநாயகர், அறுமுகன், அம்பிகையுடன் விடையேறுபாகன், மீனாட்சி திருக்கல்யாணம், சிவனடியார்கள், மகாலெக்ஷ்மி, கஜலெக்ஷ்மி ஆகியோர் அழகுத் திருக்கோலத்தில் காட்சி நல்குவது வெகு சிறப்பு. 

ஒவ்வொரு அபிஷேகம் முடிந்த பின்னும் சந்தனமும் பாலும் அளித்தார்கள். வரும் வழியில் எல்லாம் கை மணத்துக் கொண்டேயிருந்தது.

4 கருத்துகள்:

  1. திண்டுக்கல் தனபாலன்14 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 8:22
    அருமை...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan18 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:15
    நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. சகோதரி,

    நகரத்தாரின் 9 கோவில்கள் பற்றி கேள்வி பட்டு அவை குறித்து தேடித் தேடி படித்தும் you tube ல் பார்த்தும் ஓரளவு தெரிந்து கொண்டுள்ளேன். அப்படி தேடிக்கொண்டு இருக்கும் போது தான் கூகிள் என்னை உங்களுடய இந்த பக்கத்திறக்கு அழைத்து வந்தது. அள்ள அள்ள குறையாத காமதேனு போல எண்ணற்ற தகவல்கள் விரவிக்கிடக்கினற்றன. தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள். you tube வந்தால் பெரிய அளவில் இன்னும் மக்களைச் சென்று அடைவீர்கள் என்பது என்னுடய எண்ணம் .

    பதிலளிநீக்கு
  3. நிச்சயம் முயல்கிறேன். உங்கள் அன்பான வாழ்த்துக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. Thenammai Lakshmanan17 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 10:49
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.