எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 10 நவம்பர், 2020

சமயபுரம் மாரியம்மன் கோவில்.

 சமயபுரம் மாரியம்மன் கோவில்.


சமயபுரம் மாரியம்மன் கோவில்.

பால்குடமும் மதுக்குடமும் பூச்சட்டியும் சுமந்து சென்று கொண்டிருந்தார்கள் திருச்சி மக்கள். இது கிட்டத்தட்ட 3 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது. திங்கள், செவ்வாய், புதன். பங்குனிப் பால்குடம். 

திருச்சியில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் கண்ணனூர் என்னும் இடத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் மாரியம்மா. ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவியாக இருந்த அம்மன் தான் மாரியம்மனாக இங்கே கோயில் கொண்டிருக்கிறாளாம். தீர்த்தம் மாரி தீர்த்தம். ஸ்தலவிருட்சம் வேப்பமரம். நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் இது.
என் சின்னப் பையனுக்கு இங்கே முடி இறக்க வந்திருக்கிறோம். பல்லாண்டுகளுக்கு முன். அப்போதே கூட்டமும் கடைகளுமாக இருக்கும். இப்போது இன்னும் அதிகமாகிவிட்டது. இங்கேயிருந்து திரும்பும்போதுதான் தமாஷாகி விட்டது. எங்கள் வீட்டில் குடி இருக்கும் காளிமுத்து அக்கா என்பவரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு இங்கே முடி இறக்க வந்தேன். முடி இறக்கியபின் நேரே ஸ்ரீரங்கம், திருவானைக்காவில் வணங்கிவிட்டு காரைக்குடி பஸ் ஏற வேண்டும். அன்று பந்த் தினம் வேறு,

பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சூரிய ஒளியில் போர்டு மின்ன காரைக்காலா காரைக்குடியா எனத் தெரியாமல் ஏறி அமர்ந்தாச்சு. உட்கார்ந்திருந்த ஒருவர் கூட காரைக்குடிப் பக்கம் மாதிரித் தெரியவில்லை. அக்கா சொன்னார். மூணு வயசுப் பையனுக்கு எதுக்கு டிக்கெட்டு ? நான் எடுக்கிறேன் கொடு என்றார்.

கண்டக்டர் வர சிறிது நேரம் ஆனது. பஸ்ஸோ எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. கண்டக்டர் கிட்டே வந்ததும் அக்கா இரண்டு காரைக்குடி என்றார். என்னது காரைக்குடியா யம்மா இது காரைக்கால் போற வண்டிம்மா என்றதும் முழு பஸ்ஸும் எங்களைத் திரும்பிப் பார்த்தது.

இப்போ செந்தணீர்புரம் வரும். கீழே இறங்கி எதிர்த்தாப்புல நில்லுங்க. திரும்ப வர்ற பஸ்ல திருச்சி மெயின் பஸ் ஸ்டாண்டு போய் காரைக்குடி போங்கம்மா என்று இறக்கி விட்டார். ஒருவழியாக திரும்பி வந்த வேறொரு பஸ்ஸில் ஏறி திருச்சி செண்ட்ரல் பஸ் ஸ்டாண்டு போனோம். இருட்டி விட்டது. காரைக்குடி பஸ்ஸே காணலை. பஸ்கள் வேறு கம்மி. பரமக்குடி போற பஸ்ஸில் பலமுறை கேட்டு காரைக்குடி போகுமா என விசாரித்து ஏறினோம்.

அது கிட்டத்தட்ட ஒன்பது மணிக்குக் காரைக்குடி போனது. அப்போதெல்லாம் இந்த பைபாஸ் ஹைவேஸ் ரோடு எல்லாம் இல்லை. ஒன் டூ த்ரி , பாயிண்ட் டு பாயிண்ட், எக்ஸ்ப்ரஸ் பஸ் எல்லாம் இல்லை. இருக்கும் அனைத்து ஊரிலும் பஸ் நின்று நிதானித்துப் புறப்படும். கூதல் காத்து அடிக்குது. என்னையும் காளிமுத்து அக்காவையும் தவிர பஸ் பூரா ஆண்கள் மட்டுமே. அதிலும் சிலர் குடித்துவிட்டு ஏறி பீதியைக் கிளப்பினார்கள். எப்போதடா காரைக்குடி வரும் என்று காத்திருந்து இறங்கினோம். சமயபுரத்தாள்தான் சமயத்தில் காப்பாத்தினாள்.

இந்த முறை டெம்பிள் இன்னில் தங்கி இருந்து சென்றோம். வழி நெடுக திங்கட்கிழமையிலிருந்து ஒரே பால்குடம் சென்றுகொண்டிருந்தது. அன்னதானம் வேறு. நீர்மோர் தண்ணீர்ப் பந்தல் எல்லா ரோட்டிலும். காரை எல்லாம் திசை திருப்பி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

புதனன்று கண்ணனூருக்குக் காரில் சென்றோம். ஆனால் ஆடிப் பால்குடம் என்பதால் அன்றும் கூடப் பெருங்கூட்டம்தான். மக்கள் கூட்டம் அள்ளியது. வெய்யிலும் கொளுத்தியது. இதில் தீச்சட்டி சுமந்தும் பலர் நேர்த்திக்கடன் செலுத்திக் கொண்டிருந்தார்கள். நாங்கள் 200 ரூபாய் கொடுத்தும் க்யூவில் சென்று சாமியை வணங்கினோம். நல்ல சிவப்பு நிறத்தில் கண் கொள்ளா பேரழகோடு அவள் வீற்றிருந்த கோலம் வெகு அற்புதம்.

எட்டுக்கரங்கள், நாகம் குடைபிடிக்க, கபால மாலை அணிந்து சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறாள் காளி. சந்நிதிக்கு நேரே வரும்போது தீபாராதனை பார்த்து மனம்குளிர வணங்கி வெளி வந்தோம். எங்கெங்கு பார்த்தாலும் செவ்வாடைச் சக்திகள். குங்குமச் சிவப்பாய்த் தொற்றி அவளும் நம்மோடு கலந்து வந்து கொண்டிருந்தாள். அவள் வந்த வெம்மை சுமந்து வெய்யில் கதகதப்பாக நம்மேல் பொழிந்து கொண்டிருந்தது. ஓம் சக்தி.

 

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan18 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:02
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

நரசிம்ம ஜெயந்திக் கோலங்கள்

   நரசிம்ம ஜெயந்திக் கோலங்கள்