எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 29 நவம்பர், 2020

மணக்குள விநாயகர். கஜானனை பூஜிக்கும் லெக்ஷ்மி.

மணக்குள விநாயகர். கஜானனை பூஜிக்கும் லெக்ஷ்மி.

புதுச்சேரி மணக்குள விநாயகர ஆலயம் மிக அழகானது. இது பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோவில். தொள்ளைக்காது சித்தர் என்பவர் ஒரு மணற்குளத்தங்கரையில் உருவாக்கி வழிபட்டு வந்த விநாயகர் இவர். எனவே கருவறை அமைந்திருக்கும் இடமே ஒரு கிணறு போன்ற நீர்நிலைமேல் என்கிறார்கள். பக்கத்திலேயே ஒரு குழியில் எப்போதும் வற்றாமல் நீர் நிரம்பி நிற்கிறது என்றும் சொல்கிறார்கள்.

பிள்ளையார்பட்டிக் கோவிலுக்குப் பின்  அருளாட்சி வெகுவாகப் பொலிய நான் பார்த்த விநாயகருக்கான தனிக்கோவில் இது. சுமார் 35 லட்சரூபாய் மதிப்பிலான ஏழரைக்கிலோ தங்கத் தகட்டால் செய்யப்பட்ட தங்கத்தேர் கொண்ட கோவில் இது. தங்கத்தேர் மட்டுமல்ல. கோபுரம் கூட தங்கத்தால் வேயப்பட்ட கோவிலாம். !

புதுவை கடற்கரைக்கும், அரசு அலுவலகங்களுக்கும் அரவிந்தர் ஆசிரமத்துக்கும் பக்கத்தில் உள்ளது. மிக அழகான நீண்ட தூய சாலைகள் கொண்டது புதுவை.
இக்கோவிலில் வெளிக்கோபுரம் விநாயகரின் விதம் விதமான சுதைச் சிற்பங்களால் அழகூட்டப்பட்டுள்ளது. கோவில் முழுக்கவும் உட்புறமும் வெளிப்புறமும் விதம் விதமான விநாயகர் சிற்பங்களாலும், ஓவியங்களாலும் அழகூட்டப்பட்ட கோவில் இது.

மணல் குள விநாயகர் என்பது மருவி மணக்குள விநாயகர் ஆகியுள்ளது.

உள்ளே பெற்றோர் தம்பியுடன் விநாயகர் தனி மண்டபத்தில். உள் மண்டபம் பூரா விநாயகரின் புடைப்புச் சிற்பங்களும் ஓவியங்களும் அழகூட்டுகின்றன.


எல்லாக் கோவில்களிலும் துணைவியுடன் பள்ளியறையில் பெருமாள் இருப்பார்கள். இங்கோ தாயார் சக்தி தேவியுடன் பிள்ளை விநாயகர் அமர்ந்திருக்கும்  தாய்மைமிக்க பள்ளியறை.

வெளியே கணநாதனின் கணங்கள் தலையில் பழங்கள் சுமந்து சேவிக்கக் காட்சி தரும் கஜானனன்.
மூன்று நான்கு வாயில்கள் இக்கோவிலுக்கு.

அதில் பலவும் யானை நுழையும் அளவு அமைக்கப்பட்டிருக்கிறது. !
அபூர்வமான விநாயகர் திருமணக் கோல புடைப்புச் சிற்பம். பிரம்மா விஷ்ணு சிவன் அனைவரும் துணைவியருடன் காட்சி அளிக்க சுப்ரமண்யரும் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். நாரதரும் பக்கவாட்டில் நிற்கிறார்.

வெளி மண்டபம்.

இம்மண்டபத்தின் விதானத்திலும் விநாயகர் சித்தி புத்தியை மணந்த காட்சி.

எனவே இக்கோவிலில் கேதுகாரனான விநாயகரை வணங்குவது சிறப்பு.

இவ்வோவியத்தில் மும்மூர்த்திகளுடன் சுப்ரமண்யர் சிறுவனாகக் காட்சி தருகிறார்.

அட. இதென்ன கோவில் யானை லெட்சுமி வருகிறாளே.!!!

அஹா ! கோவிலுக்குள்ளே நுழைகிறாள். எதற்காம்.

எழிலான கஜானனை தீபம் காட்டி தினமும் இவள் வழிபடுகிறாளாம். வாங்க போய் பார்ப்போம். உள்ளே காமிரா அனுமதி இல்லை. :(


அதோ சன்னிதியில் தீபத்தட்டை வாங்கி ஹாரத்தி காட்டுகிறாளே.
அகிலும் சாம்பிராணியும் தூபமும் தீபமும் மணக்கிறது.

வெளியே சிம்ம யாளிகள் கர்ஜிக்கிறார்கள் ! சஞ்சீவி மலையைச் சுமந்த சிரஞ்சீவி ஆஞ்சநேயரும் தூண்களில் காட்சி தருகிறார்கள்.


வலம் வந்து பள்ளியறையிலும் வழிபடுகிறாள். அற்புதக் காட்சி.

விதம் விதமான பூக்கள் கொண்ட பூக்கடை. அதிலும் தாமரைகள் அதிகம்.

கோவிலில் தீபம் முடிந்ததும் சுண்டல் , பொங்கல் போன்றவை தருகிறார்கள். அமிர்தமாய் இருக்கிறது.
ஸ்ரீ மணக்குள விநாயகரின் பேரில் புதுவை நெல்லித்தோப்பு ராமானுஜம் செட்டியார் என்பவர் பதிகம் பாடி உள்ளார். !

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல். சங்கடஹர சதுர்த்தி மாதாமாதம் கொண்டாடப்படுகிறது. சித்தி புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம், தங்கத்தேர் இழுத்தல் ஆகியனவும் நடைபெறுகின்றன. திருமண வரம், பிள்ளை வரம் அளிக்கும் கடவுள்.

இக்கோவிலுக்குச் சென்று வந்தபின் ஆன்ம சக்தி பெருகியது போல் உணர்ந்தேன்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:54
    அழகான கோவில்...

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 10:43
    பாண்டிச்சேரி செல்லும்போதெல்லாம் நான் செல்கின்ற கோயில். இக்கோயிலுக்குச் செல்பவர்கள் அந்த யானையைப்பார்க்காமல் வரமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan24 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 9:24
    நன்றி டிடி சகோ

    நன்றி ஜம்பு சார். உண்மைதான் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.