எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 26 நவம்பர், 2020

திருக்காளஹஸ்தி காளத்தியப்பர் கோவில்.

திருக்காளஹஸ்தி காளத்தியப்பர் கோவில்.

திருக்காளஹஸ்திக்கு ஒருநாள் மாலையில் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. திருத்தணியில் இருந்து டாக்ஸி மூலம் சென்றடைந்தோம். மின்னும் வெய்யிலில் பளீரென்ற மூன்று நிலை வெண் கோபுரம் கண்ணைக் கவர்ந்தது. இன்னொரு புறம் எழுநிலை இராஜகோபுரம் இருக்கிறது. 


செருப்பு, செல்ஃபோன் காமிரா எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு டோக்கன் வாங்கிச் செல்லவேண்டும். எனவே மிக மிக அழகான தங்க வேலைப்பாடுகள் ( ! ) ஆமாங்க தங்கமும் வெள்ளியும் பிடித்த விதானத்தின் தொங்குகொம்புகள், தூண்களிலிருந்து நீண்ட தாமரைகள், தாமரை மொக்குகள், விளக்கு வளையங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தாலும் புகைப்படம் எடுக்க இயலவில்லை. பணக்காரத்தனம் மிரட்சியூட்டும் அளவு இருந்தது. அவ்வளவு திருப்பணிகள் இக்கோயிலுக்குப் பலரும் செய்திருக்கிறார்கள். பணக்காரச் சாமி J
வெய்யில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது மாலை ஐந்தரை மணி அளவிலும். முதலில் கோவிலுக்கு வெளியில் இருக்கும் ஆழத்துப் பிள்ளையாரை வணங்கிவிட்டு பின் கோயிலுக்குள் சென்றோம். அங்கே நீர்மோர், சர்பத் விற்பனை கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது. 

அநேகமாக தெலுங்கு பேசும் மக்கள்தான். ஆந்திரா சித்தூரில் அமைந்திருக்கும் இக்கோயில் வாயு ஸ்தலம். கர்ப்பகிரகத்தில் தீபம் காற்றில் ஆடும் காட்சி காணலாம்.யானை, சிலந்தி, பாம்பு மூன்றும் வணங்கிய ஸ்தலம். நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலம். ஒரு போட்டியில் ஆதிசேஷன் கயிலாய மலையை முழுமையாக மூடிக்கொள்ள வாயு அசைத்ததால் திருக்கயிலாயத்தில் இருந்து விழுந்த மூன்று துண்டுகளில் ஒரு துண்டுதான் இந்த மலை என்கிறார்கள்.

இத்தல இறைவன் காளத்திநாதர், இறைவி ஞானப்பூங்கோதை. இக்கோயிலை பத்தாம் நூற்றாண்டில் கட்டியவர் இராஜேந்திர சோழன். பல்லவர், சோழர், விஜயநகரப் பேரரசர்கள் இக்கோயிலுக்குத் திருப்பணி புரிந்திருக்கிறார்கள். 

லிங்கத்தின் அடிப்பாகம் சிலந்தியையும், நடுத்தண்டு யானையின் இரு தந்தங்களையும் மேல்பாகம் ஐந்து தலை நாகபடத்தோடும் அமைந்துள்ளது. விசேஷ பூஜை செய்வோர் மட்டும் நேரே சென்று வணங்கலாம். ஸ்பெஷல் டிக்கெட் எடுத்தாலும், தர்மதரிசனம் என்றாலும் பக்கவாட்டில் சென்று சுற்றிவளைத்து வந்துதான் வணங்க முடியும்.


காளத்திநாதர் சுயம்பு மூர்த்தி. மலைமேல் கண்ணப்பர் கோயில் உள்ளது. இந்தக் காளத்தி நாதருக்குத்தான் கண்ணப்பர் தன் கண்ணை அப்பி இருக்கிறார். பிரகாரத்தில் ஓரிடத்தில் சுவாமி கோபுரம், அம்பாள் கோபுரம் மலைமேல் இருக்கும் கண்ணப்பர் கோவில் கோபுரம் அனைத்தையும் பார்க்கலாம். பக்கத்திலேயே பொன் முகலி ஆறுதான் ஸ்தல தீர்த்தம். ஸ்தல விருட்சம் மகிழமரம். கல்லால மரமும் வில்வமரமும் கூட ஸ்தல விருட்சம்தான். மலைக்குச் செல்லும் வழியில் மண்டபம் ஒன்று உண்டு. அதில் கண்ணப்பரின் கதை ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருப்பது சிறப்பு.
ராகு கேது , சர்ப்ப தோஷம் பரிகாரம் செய்ய திருமணத் தடைநீங்க , புத்திரப்பேறு வாய்க்க இங்கே ஸ்பெஷல் பூஜைகள் செய்கிறார்கள். பேச்சு வராத குழந்தைகளுக்குப் பேச்சு வர சரஸ்வதியை வணங்குகிறார்கள். கேது ஸ்தலம். நவக்ரகங்கள் இல்லை என்றாலும் சனீஸ்வரருக்குத் தனிச்சந்நிதி உண்டு. 

(கோயிலுக்கு வெளியே வரும்போது இந்த சிவா விஷ்ணு சிலையைப் பார்த்தேன். ஒரு க்ளிக். பட் மூவிங்கில் சரியா விழலை. )

பிரகாரத்தில் பூராவுமே பிரம்மாண்டமாகவும் விமரிசையாகவும் அனைத்து கோஷ்ட தெய்வங்களும் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கோயில் காட்சியே ஒரு கடவுட் காட்சிதான். மிகப் பெரும் லிங்கங்கள், உக்கிர தெய்வங்களின் அரசாட்சி மெய்சிலிர்க்க வைத்தது. உள்ளே சங்கில் கர்ப்பூரம் கலந்த தீர்த்தம் தருகிறார்கள். வெளிப்புறம் நெய் வழிய வழிய சர்க்கரைக் பொங்கலும்,அதை ஒட்டிய விருட்சங்கள் சூழ்ந்த ஒரு மண்டபத்தில் சங்கீத உபன்யாசமும் கேட்கும் பேறு பெற்றோம். காளத்திநாதரைக் கண்ணப்பர்போலக் கண்டு உண்டு வந்தோம். :)

1 கருத்து:

  1. G.M Balasubramaniam23 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 3:02
    கோவிலுக்கு ஒரே முறைதான் சென்றிருக்கிறோம் ஆண்டுகள் பலஓடி விட்டது பின் ஒரு சமயம்கோபுரம்விழுந்துவிட்டதாகப் படித்த நினைவு

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்24 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 8:21
    பணத்திற்கேற்ப தரிசனம்... ம்...

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu25 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:42
    கோயிலுக்கு ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன். அழகான படங்கள், விவரணங்கள் சகோ

    கீதா: நானும் ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன். அட நீங்களும் போட்டிருக்கீங்க! சூப்பர்! நம்ம துரை செல்வராஜு அண்ணாவும் இக்கோயில் பற்றி போட்டிருக்கிறார் சமீபத்தில் போய் வந்தது பற்றி....


    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 7:10
    இப்போது சீராக இருக்கிறது பாலா சார்

    ஆம் டிடி சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ். பார்க்கிறேன் துரை சார் ப்லாகில் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.