எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 3 டிசம்பர், 2020

திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஸ்ரீயோகபைரவர் திருக்கோவில்.

திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஸ்ரீயோகபைரவர் திருக்கோவில்.

காரைக்குடியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பத்தூர். அங்கே திருத்தளிநாதர் கோவிலுக்குச் சென்றோம் ஒரு ஞாயிறு காலையில் .மிக தேஜஸோடு ஜொலித்த அக்கோயிலைப்பற்றிய புகைப்படங்களும் விபரங்களும் பகிர்ந்துள்ளேன்.

ஈசன்  திருத்தளிநாதர் . அம்பாள் சிவகாமி அம்மை. யோக பைரவர் எனப்படும் ஆதி பைரவர் வழிபாடு இங்கே விசேஷம். இறைவனை மகாலெக்ஷ்மி வணங்கியதால் திருத்தளி நாதர் எனப்படுகிறார். வால்மீகி இங்கே தவமிருந்து அவரை புற்று மூடியதால் இந்த ஊர் திருப் புத்தூர் எனலாயிற்று. மேலும் ஈசன் கௌரிதாண்டவம் ஆடிய திருத்தலம்.

அப்பனுக்கும் அம்மைக்கும் ஸ்கந்தருக்கும் பைரவருக்கும் வன்னிமர விநாயகருக்கும், திருநாகேஸ்வரருக்கும் தனித்தனிச் சந்நிதிகள்.  ஸ்தலவிருட்சம் கொன்றை, தீர்த்தம் ஸ்ரீ தளி தீர்த்தம். அகத்தியர் வணங்கிய அகத்திய லிங்கம் இருப்பதும் சிறப்பு
வெளியே பார்க்க சிறியதாகத் தெரிந்தாலும் உள்ளே முன் மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியன கொண்ட பெருங்கோவில் இது.

சூரியபகவான் இடது புறம் வரவேற்கிறார்.


உள் பிரகாரம்.
தட்சிணாமூர்த்தி சந்நிதி.
வர்ணலிங்கம்.
ஸ்தலவிருட்சம் கொன்றை மரம்.
அகத்திய லிங்கம்.
வால்மீகி தவம் செய்த இடம் ?
ஜ்யேஷ்டா தேவி.
பெருமாள்
வலதுபுறம் சந்திரர்.
மிகப் பிரம்மாண்டமானமதில்களோடு கூடிய நந்தவனம் கொண்ட வெளிப்பிரகாரம்.
இதுதான் வால்மீகி தவம் செய்த இடமா தெரியவில்லை.
யோக பைரவர் = ஆதி பைரவர் சந்நிதி. மிக உக்கிரம் கொண்டவர் என்பதால் புகைப்படம் கூட எடுக்க இயலவில்லை பாருங்கள். ! மிகப் பெரும் நீண்ட சந்நிதி. கிட்டே சென்றால் அருளாட்சியில் ஒருவிதமான சன்னதம் நம்மைப் பற்றுகிறது. தேய்பிறை அஷ்டமியில் நடத்தப்படும் பைரவர் ஹோமக்குண்டங்கள் காட்சி தருகின்றன.

கிரஹ தோஷம் போக்கும் ஆதி பைரவர் இவர்தான். அஷ்ட பைரவர்களும் இவரிடமிருந்தே தோன்றினராம். எல்லாக் கோவில்களிலும் இவரே காலபுருஷன்.

அம்மன் சந்நிதி வெளிப்புறம்.


அடேயப்பா நீண்டு உயர்ந்த மதில்கள் இருபுறமும். பைரவர் சந்நிதியில் இருந்து அம்மன்கோவில் போகும் வழி

சிவகாமி அம்மன்/சௌந்தரநாயகி அம்மன்  பல்லக்கு.

இச்சந்நிதியில் நீதியரசர் பழநிவேலு இயற்றிய பதிகமொன்று கண்டேன்.

சிவகாம சுந்தரி :-

சிவகாம சுந்தரியாள் திருப்பாதம் பணிந்திடவே
செய்துவைத்த புண்ணியந்தான் திருப்புத்தூர் தேடிவர !
நவமூர்த்தி தலைவியவள் நற்கருணை நாம்வேண்டி
நாளெல்லாம் தொழுது நின்றால் நமைக்காக்கும் நல்லருளாள்.
சிவனணைந்த தேவியவள் திருப்பாதம் நாடி நின்றால்
சிறப்பான செல்வங்கள் தேடிவரும் இல்லத்தில்
தவவலிமை கொண்டவளைத் தஞ்சமென்று வந்துவிட்டால்
தந்திடுவாள் மங்கலங்கள் திருத்தளியார் நாயகியே.

-- நீதியரசர் ச. பழநிவேலு, உயர்நீதி மன்றம், சென்னை.


அம்மன் சந்நிதியில் காணப்பட்ட இவை என்ன ?  சிறு தேர் உச்சியா ?
வாகனக்கூடம். அது ஏன் வாகனத்தில் ராவணனை எழுப்பி உள்ளார்கள். ?

திருப்பத்தூர் கோவில் யானை மிகவும் உக்கிரம் பிடித்தது போல. அதனால் பக்தர்களை வெகு தொலைவில் இருந்தே பார்க்க அனுமதிக்கிறார்கள். அதிலும் சிலர் எதையும் கேட்காமல்  வாழைப்பழத்தை யானையிடம் வீசி எறிந்தார்கள்.


கௌரி தாண்டவம் :-

வைகாசி நிறைமதி நன்னாளில் ( பௌர்ணமி) சிவசக்தியாகிய கௌரி அன்னை சிவன் திரிபுர சங்கார வெற்றிக் களிப்பில் ஆடிய திருக்கூத்தினை மறுமுறையும் காண விரும்பி இறைவனிடம் வேண்டினாள். அதற்கிணங்க சிவபெருமான் திருப்புத்தூரில் உள்ள சிற்சபையில் திருத்தாண்டவம் ஆடினார். கௌரி அன்னை காண ஆடியதால் கௌரி தாண்டவம் என்றும், லெக்ஷ்மி தேவி இத்தாண்டவத்தைக் காண தவமிருந்து வழிபட்டதால் லெட்சுமி தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது.

கௌரிதாண்டவ மூர்த்தியின் இடது பக்கம் சிவகாம சுந்தரி அன்னை வலது கரத்தில் மந்தார புஷ்பத்துடனும் இடது கரத்தை டோல ஹஸ்தத்தில் வைத்தும் அருள் பாலிக்கிறாள். சுவாமியின் வலது புறத்தில் மானிட ரூபத்தில் நந்தியம்பெருமான் மத்தளம் வாசித்துக் கொண்டிருக்க ஆடல் வல்லான் நடராஜர் கௌரி தாண்டவமூர்த்தி பத்துக் கரங்களுடனும் அக்கரங்களில் உடுக்கை, அக்னி,வில், அம்பு, கத்தி, கேடயம், பாசம், அங்குசம், மற்றும் வேறு எங்கும் இல்லாதவாறு வலது கரத்தில் சூலத்துடன் ஒன்பது விதமான ஆயுதங்களுடன் காணப்படுகிறார். வலது பாதத்தை முயலகன் மீது ஊன்றி இடது பாதத்தை வீசியும் , வீசிய அப்பாதத்தை பதஞ்சலி மாமுனிவர் தன் தலையால் தாங்கிக் கொண்டிருக்கிறார்.

கஜ ஹஸ்தம் மற்றும் வலது கரம், தலை  பாதம் ஆகியவற்றின்  மீது சர்ப்பங்கள் அணிகலன்களாகக் காணப்படுகின்றன. தலையில் விரிசடையின் மீது வலதுபுறத்தில் கங்கையும் இடதுபுறத்தில் பிறை சந்திரனும் காணப்படுகின்றார்கள்.

முகத்தில் ஆனந்தக் குமிழ் சிரிப்புடன் காணப்படுகின்றார். சப்த தாண்டவங்கள் எனப்படும் ஏழு வகை  தாண்டவத்தையும் தாண்டவத்தின் 108 கரணங்களையும் கௌரி அன்னைக்காக ஆடியருளினார்.

இத்தாண்டவம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து வகைத் தொழில்களையும் உணர்த்துகிறது. சப்த ஸ்வரங்களான ச, ரி, க, ம, ப, த, நி , ச என்னும் ஸ்வரங்களில் இந்நடனம் ரி யைக் குறிக்கிறது. ரி என்பது ரிஷபம் என்பது பொருள். தாண்டவத்தில் பரத நாட்டியக் கலையில் இக்கௌரி தாண்டவத்தை ஊர்த்துவ ஜானு என்னும் பரதப் பெயராலும் குறிப்பாகக் காத்தல் தொழிலையும் குறிப்பிடுகிறது.

இக்கௌரி தாண்டவ மூர்த்தியை வழிபட்டால் வீரம் புகழ் செல்வம் ஞானம் மேலோங்கும்.

-- என்றும் இறைப்பணியில் ஸ்ரீ வால்மீகி மகரிஷி சத்சங்க திருச்சபை, திருப்புத்தூர்.

யோக பைரவர் குறித்து இன்னும் சில சிறப்புச் செய்திகள். :-

ஸ்ரீ யோக பைரவர் துணை :-

இத்திருத்தலத்தில் எழுந்தருளி கம்பீரத்துடன் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ யோகபைரவர்தான் ஆதி பைரவர். நம் நாட்டில் உள்ள மற்ற எல்லா ஆலயங்களிலும் எழுந்தருளி இருக்கும் பைரவமூர்த்திகளுக்கும் இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பைரவமூர்த்திதான் மூலமூர்த்தி ஆவார்.

இவரிடமிருந்துதான் முதலில்

1.அசிதாங்க பைரவர்,  2. உரு பைரவர், 3. சண்டபைரவர் 4. குரோதன பைரவர், 5. உன்மத்த பைரவர், 6. கபால பைரவர் 7 .பீஷ்ண பைரவர் 8 சம்ஹார பைரவர்.

என்னும் அஷ்ட பைரவர்கள்  தோன்றினார்கள். பின்னர் இந்த எட்டுத் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக வெவ்வேறான காரணத்திற்கேற்ப 64 திருக்கோலங்களில் நிர்வாணமாகவும் ஆடை அணிகலன்களுடனும் வாகனத்துடனும் வாகனமில்லாமலும் உக்கிர தோற்றத்துடனும் உக்கிரமில்லாமலும் பல கைகளுடனும் பல்வகை ஆயுதங்களுடனும் நம் நாட்டில் உள்ள எல்லாக் கோவில்களிலும் பைரவர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

பிரபஞ்சத்தில் சகல ஜீவராசிகளும் வானமண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களும், சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி ராகு கேது ஆகிய நவக்கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுமைக்குட்பட்டதே. காலச்சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் பைரவரே. கிரகங்கள் எல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றனர். ஆனால் அந்தக் கிரகங்கள் அத்தனை பேரையும் ஸ்ரீ யோகபைரவர்தான் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார்.

ஸ்ரீ பைரவர் அரசர் என்றால் அவர் இட்ட கட்டளையை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள். பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது. அவர் கட்டளைப்படியே எல்லாக் கிரகங்களும் செயல்படுகின்றன. அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரகதோஷங்களை அகற்றி நன்மை புரிவார்.

ஸ்ரீ யோக பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாகக் கொண்ட காலபுருஷனாகக் கொள்கின்றன. பன்னிரண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன. மேஷம் - சிரசு, ரிஷபம் - வாய், மிதுனம் - இரு கரங்கள், கடகம் - மார்பு, சிம்மம் - வயிறு, கன்னி - இடை, துலாம் - புட்டங்கள்,  விருச்சிகம் - லிங்கம், தனுசு - தொடைகள், மகரம் - முழந்தாள், கும்பம் - கால்களின் கீழ்ப்பகுதி, மீனம் - அடித்தளங்கள் ( பிருஹத் ஜாதகம் ) 12 ராசிகளின் அதிபதிகளான சூரியன், சந்திரன் , செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனீஸ்வரர், ராகு கேது ஆகிய கிரகங்களும் அவருள் அடக்கம், எனவே நவக்கிரகங்களால் ஏற்படும் அனைத்து தோஷங்கள் கிரகப் பெயர்ச்சியின்போது பாதிக்கப்பட்ட ராசிக்காரர்கள் அனைவரும் பாதிப்பு அகல சாந்தி பரிகாரம் வேண்டி இங்கேயே ஸ்ரீ யோக பைரவரைச் சரணடைந்து மனமுருக வழிபடலாம்.  ஸ்ரீ யோகபைரவரின் கடைக்கண் பார்வையால் பாதிப்புகள் அகன்று நலம் பெறலாம். சரணடைந்த பக்தர்களை தேவையான நேரத்தில் வந்து காப்பாற்றுவார்.  எனவேதான் ஸ்ரீ ஆபத்துத்தாரணர் என்று போற்றப்படுகிறார்.

ஸ்ரீ ஆபதுதாரணர் என்றால் பக்தர்களின் ஆபத்தைத் துன்பத்தை அடியோடு அழிப்பவர் என்று பொருள். அனைவரையும் வணங்கி அருளாசி பெற்று வந்தோம்.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan17 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:53
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பரிகாரக் கோலங்கள்

பரிகாரக் கோலங்கள்