தொட்ட கணபதி, தொட்ட பசவண்ணா ( நந்தி ) கோயில்கள்.
தொட்ட கணபதி, தொட்ட பசவண்ணா ( நந்தி ) கோயில்கள்
பழைய பெங்களூருவில் இருக்கிறது தொட்ட கணபதி( DODDA GANAPATHI ) & தொட்ட பசவண்ணா/நந்தி/ காளை/ரிஷபம் ( DODDA PASAVANNA /NANDHI/BULL ) கோயில்.
கன்னடத்தில் தொட்ட என்றால் பெரிது என்று அர்த்தம். மிகப் பிரம்மாண்டமான விநாயகரை பிள்ளையார்பட்டிக்கு அடுத்து இங்கேதான் தரிசித்தேன்.
எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் 110 கிலோ வெண்ணய்க் காப்பு சாற்றப்படும் அளவு பிரம்மாண்டம்.
இக்கோயில் உருவான வரலாறு சுவாரசியம். இன்றைய அழகான பெங்களூரை நிர்மாணித்த கெம்பேகவுடா ஒருமுறை நடைப்பயிற்சி சென்றபோது மாபெரும் கல்லில் விநாயகர் உருவத்தைக் கண்டு சிற்பிகளைக் கொண்டு செதுக்கச் செய்தாராம்.
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட கணபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவில் ஒரு மேடான குன்றின்மேல் அமைந்துள்ளது. வாயிலில் திருநங்கைகள் நின்றிருந்தார்கள்.
உள்ளே கணபதிக்குவெண்ணெய்க் காப்பு நீக்கம் செய்து கொண்டிருந்தார்கள். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. எனினும் எடுத்துட்டோம்ல. விநாயகரின் கருவறையின் இருபுறமும் விநாயகர் சிற்பங்கள் சுவரில் பதிக்கப்பட்டுள்ளன.
பிரகாரமே படி ஏறிப் ப்ரகாரம் வந்து இறங்க வேண்டியதாய் இருக்கு. கோயில் குன்றின் மேல் அமைந்திருப்பதால் இப்படி இருக்கலாம்.
பசவங்குடியே அங்கங்கே மேடும் பள்ளமுமான ரோடும் வீடுமாகத்தான் இருக்கு. நம்மூரில் சமதளத்திலேயே நடந்து பழகிய நமக்குத்தான் நடக்கக் கடினமா இருக்கு
பக்கத்திலேயே புல் டெம்பிள் எனப்படும் நந்தி டெம்பிள். தொட்ட பசவண்ணா கோயில் என்கிறார்கள்.வாயிலிலேயே ரிஷபத்தின் கம்பீரக் கொம்புகள் கொண்ட வரவேற்பு வளைவு.
இக்கோயிலும் குன்றில் அமைந்திருப்பதால் படிகள் ஏறிச் செல்லணும். இன்னொரு பக்கம் வாகனங்கள், வீல்சேர் செல்ல சரிவான பாதை அமைக்கப்பட்டிருக்கு,
இதுவும் ஐந்து நிலைக் கோபுரம் கொண்ட கோயில். இந்தக் கோவில் பத்தி இன்னும் சில
விபரங்களைக் குறிப்பிட மறந்துட்டேன். இக்கோயிலில் இருக்கும் நந்தி சில காலத்துக்கு
முன்பு ( வருடம் தெரியல. ) சுகனஹல்லி என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் ( இப்போ
பசவங்குடி - பசவ - காளை , குடி - கோயில் ) கடலைப் பயிர்களை வயலில் புகுந்து
அழிச்சிருக்கு.
அப்போ விவசாயிகள் அதை விரட்டும்போது ஒருத்தர் கோலால் அடிச்சுருக்கார். உடனே அந்த
காளை கற்சிலையாய் அங்கேயே சமைந்து அமர்ந்துருச்சாம்.
அது மட்டுமில்ல அதுலேருந்து அது பிரம்மாண்டமா வளர ஆரம்பிச்சிருச்சு. அதுனால அந்தக்
காளையோட காலடியில் ஒரு சூலாயுதத்தை வைச்சு அதன் நெற்றியில் குத்தி நிறுத்தி
இருக்காங்க. அதன் பின் அதன் வளர்ச்சி நின்று போனதாம்
இந்தக் கோயிலையும் கெம்பேகவுடாதான் திராவிட முறைப்படி அமைச்சிருக்கார். நந்தி
இருக்கும் இடம் மண்டபமாக மட்டும் இருக்கு. இந்த நந்தியும் ஒரே கல்லில்
வடிக்கப்பட்ட சிற்பம் என்கிறார்கள். இதன் உயரம் 4.5 மீட்டர் மற்றும் இதன் நீளம் 6.5
மீட்டர்.
அதன் பின்னணியில் இருக்கும் சிவன் பார்வதி கருவறைக்கு மட்டும் சிறிய கோபுரம்
இருக்கு.
இங்கே வருடா வருடம் கடலைச்சந்தை பிரசித்தம். கார்த்திகை மாசத்தில் அதாவது
நவம்பர் டிசம்பரில் நடக்குது. மக்கள் வேண்டிக்கிட்டு கோயிலுக்கு வயலில் விளைந்த
கடலைக்காய்களை காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். இதற்கு கர்நாடகா
முழுவதுமிருந்து மக்கள் வருவாங்களாம்.
அப்புறம் இன்னொரு விஷயம் இங்கே பல்ஜ் ராக் என்ற ஒன்று இருக்கு. அது 3,000
மில்லியன் வருடம் பழமையானது. பெங்களூரில் நான்கு வாட்ச் டவர்ஸ் இருக்கு.இது
தென்பகுதியில் இருப்பதால் இங்கே இருக்கும் வாட்ச் டவரில் விளக்கு
ஏற்றப்பட்டதும் நான்கு டவர்களிலும் ஏற்றுவார்களாம். பாறையைக் குடைந்து அதன்
பொந்துகளில் விளக்கு ஏற்றுவார்களாம். பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம்
என்பதை உணர்த்த மன்னராட்சியில் இது கடைபிடிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
மூன்றாம் மைசூர்ப் போரின் போது மிர் கமருதீன் தலைமையில் மைசூர்ப்படைகள் இந்த வாட்ச் டவரில் இருந்து ப்ரிட்டிஷ் படையைத் தாக்கப் பாசறை அமைத்தார்களாம்.
இந்த நந்தியின் காலடியில் இருந்துதான் விருஷபாவதி நதி உற்பத்தி ஆகிப் பெருகுவதாக ஐதீகம். மிகப் பிரம்மாண்டமான நந்திதான் இங்கே மையத்தில்.
ரிஷபதேவர் எனப்படும் நந்தி தேவரும் சிவனின்மைந்தர்தான் என்பதால் இவரின் இருபுறமும் கோபுரத்தில் விநாயகரும் முருகனும் காட்சி அளிக்கிறார்கள்.
சிவனின் காளை வாகனமான இவர் இவ்வளவு பிரம்மாண்ட ரூபமாய் இருக்க. இவரின் பின்னே ஒரு சிறிய
சந்நிதியில் சிவன் அம்பாளோடு காட்சி அளிக்கிறார்.
ஆகக்கூடி இது சிவன் கோவில்தான். ஆனால் நந்தி பிரம்மாண்டமாய் மேலெழும்பி இருப்பதால்
நந்திக்குச் சிறப்பு.
பச்சைப் பட்டில் கழுத்துத் துண்டும் பிரம்மாண்ட மணிகளும் சாமந்தி மாலைகளும்
அணிந்து கம்பீரக் காட்சி தந்தார் பசவண்ணா.
பசவங்குடி என்றாலே நந்தியின் கோயில் என்று அர்த்தமாம். தெற்கு பெங்களூருவில் ஆட்சி
செய்து கொண்டிருக்கும் பசவங்குடி நந்தி கோயிலுக்கும் தொட்ட கணபதிக் கோயிலுக்கும்
ஒரு முறையாவது சென்று வாருங்கள்.
சொல்ல மறந்துட்டேன். தொட்ட கணபதி கோயிலின் பின்புறம் அழகான சயன நிலையில் உள்ள
ஆஞ்சநேயர் கோவிலும், சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் முருகன் கோவிலும் கூட
இருக்கு
நந்தி கோயிலின் எதிரில் ஒரு பெரிய பார்க் இருக்கு. குழந்தைகளுக்கான இடம். அது போக
இந்த சிவன் பெருமாள் கோவில்களின் எதிரே காளைகள் காராம் பசுக்களுக்கு அகத்திக்கீரை
வாங்கித் தருகிறார்கள்.
திருமூலரின் திருமந்திரத்தில் சொன்னது போல
“யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே”
-- திருச்சிற்றம்பலம். ”








Thenammai Lakshmanan6 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:22
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
பதிலளி
ராமலக்ஷ்மி6 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 11:12
அருமையான பகிர்வு. பல வருடங்களுக்கு முன் சில முறைகள் சென்றிருக்கிறேன். மீண்டும் செல்லும் எண்ணம் உள்ளது. வெண்ணைக் காப்புடன் மகா கணபதியை ஒரு விநாயகர் சதுர்த்தி அன்று தரிசனம் செய்திருக்கிறேன். இந்தக் கோவில்களுக்கு முன் வருடம் ஒருமுறை நடைபெறும் கடலைக்காய் (நிலக்கடலை) சந்தை மிகப் பிரசித்தமானது.
பதிலளி
Thenammai Lakshmanan6 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 1:29
ஆம் அதைக் குறிப்பிட மறந்துவிட்டேன் ராமலெக்ஷ்மி. நினைவூட்டியமைக்கு நன்றி. இடுகையில் இன்னும் சில சேர்க்க வேண்டி உள்ளது. சேர்த்துவிடுகிறேன் :)
பதிலளி
G.M Balasubramaniam6 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 4:27
எங்களூருக்கு வந்தீர்கள் என்று தெரிகிறது பசவன்குடி பெங்களூரின் புராதன இடமென்று நினைக்கிறேன்
பதிலளி
Thenammai Lakshmanan12 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 9:07
ஆம் பாலா சார்