ஞாயிறு, 27 டிசம்பர், 2020

விஜயதசமியில் தஞ்சைப் பெரியகோவில்.

விஜயதசமியில் தஞ்சைப் பெரியகோவில்.

ஜகதிப்படை கல்வெட்டு, மெய்கீர்த்தி, பாந்து என சகோ கரந்தை ஜெயக்குமாரின்  “ ஜகதிப்படை “ இடுகையில் படித்தவுடன்  சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சை ப்ரகதீஸ்வரர் கோயிலுக்கு விஜயதசமியன்று சென்றதும் இரவில் புகைப்படங்கள் எடுத்ததும் ஞாபகம் வந்தது.

இராஜ ராஜ சோழன் பற்றிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. சினிமாவில் சிவாஜியையே ராஜ ராஜ சோழனாகக் கண்டிருக்கிறோம். ( படம் பார்த்ததில்லை என்றாலும் பாடல்கள் சில பார்த்திருக்கிறேன். ) இப்படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் இதற்கான ரசிகர்கள் அநேகம் பேரை அறிவேன். இனிமையாய் இருக்கும் எதையும் விரும்புவதுதானே மனித இயல்பு.

அந்த வருடம் ராஜ ராஜ சோழனின் 1027 ஆம் ஆண்டு சதயத் திருவிழா வேறு கொண்டாடப் பட்டுக் கொண்டிருந்தது. கோயில் தொல்லியல்துறையின் பராமரிப்பில் இருப்பதால் அதன் சாந்நித்தியம் எல்லாம் சிறுவயதில் உணர்ந்ததோடு போய்விட்டது. இதுவும் தாராசுரம் கோயில் எல்லாம் சுத்தமாக இருக்கின்றன ஆனால் நமக்கு பூக்கள், கற்பூரம், நெய்தீபம், அபிஷேக திரவியங்கள், அர்ச்சனைப் பொருட்கள் அதன் பழமைத்துவம் என்று ஏதோ வாசனை மிஸ்ஸிங். அதனால்  கோயிலுடன் கூடிய அந்தப் பழைய ஆத்மார்த்தம் போய்விட்டது. கோயில் என்பதும் ஒரு உள்ளுறை உணர்வு.

அங்கே விஜயதசமியின் போது எடுத்த சில படங்களைப் பகிர்ந்திருக்கிறேன்.

{கோவில்களிலும் ரயில்வே & பஸ் நிலையங்களிலும் ஒரு பயம் தரும் விஷயம் என்னன்னா அங்கங்கே பைரவர்கள் சுதந்திரமாக உலாவி நம்மைப் பயப்படுத்துகிறார்கள். அவ்வப்போது உரக்க திடீரென்று குரைத்துத் தள்ளுகிறார்கள்.குறுக்கும் மறுக்கும் ஓடுகிறார்கள். இதற்கு அறநிலையத்துறை ,தொல்பொருள் துறை , ரயில்வே  நிர்வாகம் எல்லாம் ஏதாவது செய்தால் தேவலாம். }

கோயில் பற்றிய பல்வேறு தகவல்கள் விக்கிபீடியாவில் கொட்டிக் கிடக்கின்றன. இது சதுரவடிவில் அமைக்கப்பட்ட கருவறைக் கோபுரம்

விஜயதசமிக்கென்று அலங்கார மின் விளக்குகள் ஜொலிக்கின்றன.


அழகான அகழி உண்டு இங்கே. முதலைகள் ஓடுமோ என்று கூடத் தேடியதுண்டு

இது போக அகழியில் அங்கங்கே பாஸ்டியன்ஸ் அமைப்பில் வீரர்கள் மறைந்து நின்று பொருதத் தோதான ட்ரபீஸிய வடிவத் திட்டுக்கள் உண்டு.

அகழி தாண்டியதும் பூங்கா. புல்வெளி. அதன் பின் கோவில் கோபுரம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதால் மற்றைய கோபுரங்களை விட வித்யாசமான அமைப்பு.

ஏனெனில் அப்போதெல்லாம் பள்ளிப்படைக் கோயில்களே தஞ்சையில் அமைக்கப்பட்டிருக்கலாம். இன்றும் கூட அவற்றின் எச்சத்தைக் காணலாம்.

மூன்று நிலை இராஜ கோபுரம்.

இக்கோவிலின் வெளியிலேயே இராஜராஜன் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும்.

கோவில் கோபுரத்தின் தோற்றம் நேர்வாட்டில்.


இக்கோயில் உருவாக உழைத்த பெருந்தச்சர்கள், சிற்பிகள், இசைவாணர்கள், ஓதுவார்கள், நடனமாதர்கள் அனைவரின் பங்களிப்பையும் கோவிலில் பதித்துள்ள ஒவ்வொரு கற்களிலும் பொறித்துள்ளார் எனத் தகவல். இக்கோயில் கட்டும்போது சிற்பிகளுக்கு  நீர்மோர் கொடுத்த அழகி என்ற ஆயர்குல மாதின் பெயர்தான் கோபுரத்தின் மேலிருக்கும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளதாம்.


அக்கல்லுக்கு இடைச்சி கல் எனப் பெயராம். அக்கல்லின் நிழலிலேதான் பெருவுடையார் உறைகிறார் எனக் கூறப்படுகிறது.


நாயக்கர்கள் அமைத்த மாபெரும் நந்தி.

சின்ன வயதில் இந்த நந்தி வளர்கிறது என்ற செவிவழிச் செய்தி கேட்டுப் பயந்ததுண்டு. தொட்டால் திரும்பி முட்டுமோ எனத்தொடக்கூட அஞ்சியதுண்டு.


இக்கோவிலின் அருகிலிருக்கும் சிவகங்கைப் பூங்காவுக்கு லீவுகள் தோறும் செல்வோம்.


இராஜராஜன் பெருவிழா.


1027 ஆம் ஆண்டு சதயத் திருவிழா.


கவியரங்கம்/கவிமன்றம் நடந்துகொண்டிருந்தது.


கோயிலின் வலதுபுறத் தோற்றம்.


விநாயகர் சந்நிதிக் கோபுரத் தோற்றம்.


கோமுகி.  கோமுகி தாண்டியதும் சகோ கரந்தை ஜெயக்குமார் குறிப்பிட்டபடி இந்த ஜகதிப்படைக் கல்வெட்டு, மெய்க்கீர்த்தி, பாந்து ஆகியன படிக்க இன்னொரு நாள் பகலில் செல்லவேண்டும்.

அவர் கூறியபடி பார்த்தால் இக்கல்வெட்டுக்கள் சோமசூக்தப் பிரதக்ஷிணப்படி அமைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.


ஜாமர் வைத்திருப்பார்களோ என்னவோ புகைப்படம் ஒன்று கூட உருப்படியாய் விழவில்லை. அல்லது இரவு நேர லைட்டிங்குக்கு அட்ஜஸ்ட் செய்து எடுத்திருக்க வேண்டுமோ என்னவோ.

பழங்காலக் கோயில்களில் எனக்குப் பிடித்தது இந்த கல் சாளரங்கள்/ஜன்னல்கள். கோயிலுக்குக் காற்றோட்டம் அளிக்கும் கற்பகத் தருக்கள். கருவறை புழுங்காமல் இருக்கும்.


மகிஷாசுரனை மர்த்தனம் செய்த மகிஷாசுர மர்த்தினி. சிம்மம் கூட கம்பீரமாய் நம்மைப் பார்த்துக்கொண்டே  சேர்ந்து மிதிக்கிறது பாருங்கள்.

கீழே கொய்யப்பட்ட சிரம் மட்டும் சிம்ம யாளிகளுக்கிடையில் பொறிக்கப்பட்டுள்ளது வித்யாசம்.


அதேதான்  ஆனால் மகிஷாசுர மர்த்தினியுடன் இன்னொரு சிற்பம் யாரெனத் தெரியவில்லை.


அஹா இதோ வந்துவிட்டது சகோ கரந்தை ஜெயக்குமார் குறிப்பிட்ட ஜகதிப்படை. ஒரே வரிசையில் தொடர்ந்த நீண்ட கல்வெட்டை இப்படிக் குறிப்பிடுவார்களாம். முழு விபரத்துக்கு இந்த இணைப்பில் பாருங்கள்.

ஜகதிப்படை. 

இதன் அருமை தெரியாமல் இரவில் சென்றதால் கிடைத்தை எடுத்துள்ளேன். அதன்மேல் சிம்மங்கள் வரிசை கட்டிக் காவல் காக்கின்றன. இங்கேயும் கல் சாளரங்கள். பழமையான கோவில்களில் கல் சாரளரங்கள் காணக்கிடைக்கின்றன. கும்பகோணம் கோவில்கள் , தாராசுரம் , தஞ்சைப் பெரிய கோவில் , ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழீஸ்வரம், ஆகியவற்றில் இந்த கல் சாளரங்களைக் கட்டாயம் காணலாம்.


பிரகாரத்தைச் சுற்றி அங்கங்கே ஸ்பாட் லைட்கள் வேறு.

இதோ உலா புறப்பட்டு விட்டாள் அம்பு போடுவதற்காக பெரியநாயகி அம்மன். மகிஷனை அழிக்கக் கையில் அம்பு. குதிரைக்கோ ஓடி ஓடி நாக்குத் தள்ளுகிறது.


வேட்டுச் சத்தத்துடன் கிளம்பி ஒருவழியாக சம்ஹாரம் செய்து திரும்புகிறாள் வீரத் திருமகள் ., வெற்றித் திருமகள்.இக்கோவிலில் தளிச்சேரிப் பெண்கள் என ஒரு பிரிவினர் வாழ்ந்து வந்தனர் என்பது கல்வெட்டுக்களின் வாயிலாகத் தெரிகிறது. உழவாரப்பணி, கோயிலைப் பராமரித்தல், திருவிழாக்காலங்களில் நடனமாடுதல் எனத் தங்கள் வாழ்க்கையை இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் அவர்கள்.  அவர்களை இராஜராஜன் தகுந்த சன்மானமும் மரியாதையும் கொடுத்துக் காத்து வந்தான் என்பது கல்வெட்டுக்கள் கூறும் செய்தி. இவர்களில் சிலர் திருமணம் புரிந்துகொண்டு இல்வாழ்விலும் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் அது தெரிவிக்கிறது.

இவர்களுக்கு மட்டுமல்ல இதேபோல் கோவில் தொண்டில் ஈடுபட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் முறையாக நிலங்கள், பரிசில்கள், கல்வெட்டில் தனக்குச் சமமாகப் பெயர் பொரித்தது, தன் பெயரையே ராச ராச என்று அவர்களின் முதற்பெயராக ஈந்து கௌரவித்தது என வரலாற்றில் இன்னும் பேசப்படுபவராக இருக்கிறார் ராஜ ராஜ சோழன். ( பல முறைகள் இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட போது  நிகழ்ந்த தடைகள், தீவிபத்துகள் வேறு நினைவில் ஆடுகின்றன )


அதே சமயம் நாடகத்துறையில் இருக்கும் ஒருவர் பல்லாண்டுகளுக்கு முன்பு பகிர்ந்த செய்தி ஒன்று. பல்வேறு தேசங்களின் மீது  படையெடுக்கும் மன்னர்கள் அந்நாட்டை வென்றதும் பிணையாகப் பிடித்து வரப்படும் அந்தப்புரப் பெண்கள், பணிப்பெண்களை இம்மாதிரி தளிச்சேரிப் பெண்டிராக்கின கொடுமையும் நடந்தது என்று தெரிவித்தார்.  இத்தகவல்கள் அனைத்துமே கேள்விப்பட்டவையும் படித்தவையுமே தவிர உண்மை என்னவென்று இன்னும் துலங்கவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் ஒருவர் செய்த செயல்கள் நல்லவை அல்லவை எனப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. என்றைக்கும் எவ்விதத்திலும் கறைபடியாமல் வாழ்வது மன்னர்களுக்கே சாத்தியமில்லை போலும்.

காலத்தின் கலங்கரை விளக்காகத் திகழும் இக்கோவில் தீவிபத்து,  எத்தனையோ புயல், எத்தனையோ வெள்ளம், மழை பார்த்தும் தப்பி ஒரு துளியும் மாசுபடாது நிற்கிறது , ஊரின் எப்பக்கமிருந்து பார்த்தாலும் உயர்ந்தே  தெரிகிறது  தஞ்சைப் பெருவுடையார் கோவில்.

1 கருத்து:

 1. ஸ்ரீராம்.14 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 5:59
  சுவாரஸ்யமான விவரங்களுடன் புகைபபடங்களை ரசித்தேன். ஜாமர் கருவி கேமிராக்களை ஒன்றும் செய்யாது. இரவில் - விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள இரவில் எடுத்த புகைப்படங்கள் என்பதால் அப்படியிருக்கின்றன.

  பதிலளி

  கரந்தை ஜெயக்குமார்14 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:27
  ஆகா தஞ்சைப் பெரியக் கோயிலுக்கு வந்துள்ளீர்களா
  மகிழ்ச்சி
  படங்கள் அருமை
  நன்றி

  பதிலளி

  துரை செல்வராஜூ14 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 1:04
  அழகான படங்களுடன் பதிவு அருமை....

  பெரிய கோயிலைப் பார்த்திராத பலரும் இப்போது பேச ஆரம்பித்து இருப்பது விந்தையிலும் விந்தை...

  பதிலளி

  வெங்கட் நாகராஜ்14 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 10:14
  சிறப்பான பகிர்வு.

  பதிலளி

  Thenammai Lakshmanan10 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 4:32
  விவரம் தெரிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி ஸ்ரீராம்

  ஆம் ஜெயக்குமார் சகோ நன்றி

  நன்றி துரை செல்வராஜ் சகோ. ஆம்

  நன்றி வெங்கட் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள்.

தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள். தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள்.