எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 டிசம்பர், 2020

இரணியூர்க் காளி

இரணியூர்க் காளி

காரைக்குடி அருகில் உள்ளது இரணியூர். இது நகரத்தாரின் ஒன்பது கோவில்களில் ஒன்று. இக்கோவில் விமானத்தைத் தரிசித்தாலே இறைவனைத் தரிசித்ததற்குச் சமம். இன்னும் வக்கிர அமைப்பில் அமைந்த தெய்வச் சிலைகள், குபேரன், ஹிரண்யவதம், அரியும் அரனும் ஒன்றென உணர்த்தும் சம்பவங்கள், ஹிரண்யகசிபுவை அழித்தபின் ஆக்ரோஷமாய் அலைந்த நரசிம்மத்தை ஆற்றுப்படுத்தி ஆட்கொண்ட சிவன், அதனால் ஆட்கொண்டநாதர் & நரசிம்மேஸ்வரர் என்று பெயர் பெற்ற மூலவர் இன்னும் பல சிறப்புகள் உண்டு இரணியூருக்கு.

நரசிம்மரின் கோபம் கண்டு தங்கையான உமையும் உக்கிரமடைந்து அதன் பின் நவதுர்க்கைகளாக உள்மண்டபத்திலும் அஷ்டலெக்ஷ்மிகளாக வெளி மண்டபத்திலும் இரணியூர் ஆட்கொண்ட நாதர் கோவிலில் காட்சி தருகிறார்கள். தமிழரின் தொன்மையான சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு இக்கோயில்.

இத்தோடு கோபம் கொண்ட காளி, நரசிம்மர் ( நீலமேகப் பெருமாள் ) ஆகியோரை ஆற்றுப்படுத்தியபின் அவர்களுக்கும் தனிக்கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரணியூர்க் கோவில் பற்றியும் நீலமேகப் பெருமாள் பற்றியும் முன்பே பல்வேறு இடுகைகளில் குறிப்பிட்டுள்ளேன்.

இது இரணிக்காளி கோவில் பற்றியது. இக்கோவில் இரணியூர் ஆட்கொண்ட நாதர் கோவிலில் இருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது. தனியான ஆரண்யம்போன்ற இடத்தில் வாய்க்கால்கள் சூழ உள்ள இடத்தில் ஏகாந்தமாகக் கோவில் கொண்டிருக்கிறாள் இரணிக் காளி.
அடிக்கடி கோபம் கொள்ளும் இரணிக்கோவிலில் பிறந்த பெண் பிள்ளைகளை இரணிக் காளி வந்திருச்சு என்று பேச்சு வழக்கில் சொல்வது வழக்கம். நான் கூட இரணிக்காளிதான் என் அம்மாவின் சொல்வழக்கில். எனவே அவள் மீது மிகுந்த ப்ரேமையுண்டு.

ஒவ்வொரு தரமும் ஆட்கொண்டநாதர் கோவிலுக்கு மட்டுமே சென்றுவிட்டு வந்து விடுவோம். இந்த முறை என் காளியையும் தரிசித்தேன். புகைப்படம் எடுக்கலாமோ கூடாதோ என்ற பயத்தில் கர்ப்பக்ரகத்தை எடுக்கவில்லை. மிக எளிமையாகக் கோவில் கொண்டிருக்கிறாள் உக்கிரக்காளி. காற்றில் கூட கோப மூச்சு அனலாடுகிறது.


முன் மண்டபம் கர்ப்பக் கிரஹம் இவ்வளவே கோவில். ஆனால் அவள் சக்தி அளப்பரியது. ஈரேழு லோகத்திலும் நிறைந்திருப்பவளுக்கு இந்த இடம் ஒரு அடையாள வணக்கத்துக்குரிய இடம். அவ்வளவே.


கொடி மரத்தின் முன் சூலமும் பலி பீடமும். கொடிமரத்தின் பின் துர்க்கையும்.
செவ்வாடைகள் இங்கே வாயில் துவாரகிகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்தது.

உள்ளே உக்கிரச் சிவப்பில் குங்குமமும் அரளியும் பொலிய இரணிக்காளி. தீயவர்களிடம் எல்லையற்ற கோபமும் நல்லவர்களிடம் எல்லையற்ற கருணையும் கொண்டவள்.
துவாரகியைப் பார்க்கும்போதே தெரிந்திருக்குமே இரணிக்காளி எப்படி இருப்பாள் என்று. எலுமிச்சை மாலைகள்  அணிவகுக்க குங்குமச் சிவப்பில் சூலம் பதித்து அருளாட்சி செய்து வரும் இரணிக்காளியைத் தரிசித்ததும் ஒரு நிமிடம் விதிர்விதிர்த்தது மெய் என்பது மெய்.

இரணியூர் சென்றால் ஆட்கொண்ட நாதர், நீலமேகப் பெருமாளோடு இவளின் அருளையும் பெற மறவாதீர்கள். காத்திருக்கிறாள் உங்களைச் சுற்றி இருக்கும் தீமைகளைக் களைந்தெறிந்து நன்மைகளால் அரவணைக்க. சென்று வணங்கி இரணிக்காளியின் அருள் துணை  பெற்று வாருங்கள்.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan24 அக்டோபர், 2019 ’அன்று’ பிற்பகல் 7:47
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.