எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 11 டிசம்பர், 2020

தென்காசி உலகம்மன் சமேத காசிவிசுவநாதர் திருக்கோயில்.

தென்காசி உலகம்மன் சமேத காசிவிசுவநாதர் திருக்கோயில்.

குற்றாலத்துக்குச் சென்றிருந்த போது தென்காசியில்தான் தங்கி இருந்தோம். அங்கே காசி விசுவநாதர் உலகம்மன் கோயிலுக்கு ஒரு நாள் காலையில் சென்றோம். ஒன்பது நிலை ராஜ கோபுரம். பதினாலாம் நூற்றாண்டில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்டதாம். அடேயப்பா என்ன பிரம்மாண்டம் பார்க்கப் பார்க்க வியப்பு. நிமிர்ந்து பார்த்தால் தலை சுளுக்கிக் கொள்ளும் அளவு உயரம். சிலைகளோ எண்ணற்றவை. கிட்டத்தட்ட 800 பொம்மைகள் கோபுரத்தில் உள்ளனவாம். !

இன்னொரு சிறப்பு இக்கோயில் ஒரு தேர்வடிவிலும் அதை இரு பெரும்  யானைகள் இழுத்துச் செல்லும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சிவனுக்கு அம்பாளுக்கு முருகனுக்கு என்று தனித்தனிக் கோயில்களே உள்ளே இருக்கின்றன. ப்ரகாரங்களும் பிரம்மாண்டமானவை.

தல வரலாறு :-
புண்ணிய க்ஷேத்திரம் காசியில் இருப்பதைப் போன்று தனது விந்தன் கோட்டையிலும் ஒரு ஷெண்பக ஆரண்யத்தில் அமைத்ததே இக்கோயில். இதனால் இங்கே இருக்கும் விநாயருக்கு ஷெண்பக விநாயகர் என்று பெயராம்.

காசி புண்ணிய க்ஷேத்திரத்தில் எழுந்தருளியிருந்த ஆலயம் ஜீரணமாகுகையிலே ”நமது தட்சிண காசியிலே ஆலயம் செய்து தரவேணும்”என்ற கனவில் தோன்றி அருளிச் செய்தமையாலே நித்திய சச்சிதானந்த சொரூபியாக விளங்கும் பரம்பொருள் காசிவிசுவநாதருக்கு எங்கும் பைம்பொழில்,வாவி, குளங்களும், நீரோடைகளும், மலைகளும், அருவிகளும் சூழ்ந்த பொதிகை மலைச்சாரல் சித்ரா நதி தீரத்தில் தென்காசி நகர் அமைந்து கி. பி. 1445 ஆம் ஆண்டு கோயில் கண்டான் மாமன்னன் ஜடிலவர்மன் என்ற அரிகேச பராக்கிரம பாண்டியன்.

இத்தகைய பெருமை வாய்ந்த இத்திருத்தலத்தில் மாங்குயில் தூண் பதினொன்றும், ஓங்கு நிலை ஒன்பது கொண்ட கவின்மிகு கலையழகுடன் கி. பி. 1463 இல் மன்னன் பராக்கிரம பாண்டியனால் இராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. மகிஷாசுர மர்த்தினி மண்டபத்தில் உள்ளே உள்ள வாயில் காக்கும் பெண்கள் தமிழ் அணங்குகள் என்று சொல்கிறார்கள். ( ஜெய விஜயன் போல் ).

கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத் திருமேனி காசியில் உள்ள லிங்கம் போல் காட்சி தருவதால்தான் இந்தத் தலம் தென் காசி என அழைக்கப்படுகிறது.

எல்லா சிவன் கோயில்களையும் போல் விநாயகர், ( வல்லப கணபதி ), நடராஜர், தட்சிணாமூர்த்தி, சண்டேசர், நந்தி பகவான் , நால்வர், அறுபத்து மூவர் ஆகியோரோடு, காரைக்கால் அம்மையார், சுரதேவர், பதஞ்சலி , வியாக்கிர பாதர் ஆகியோரையும் காணலாம்.

மேலும் அம்மன் சந்நிதியில் அரிகேச பராக்கிரம பாண்டியன் வணங்குவது போன்ற தோற்றத்தில் சிலையாய் வடிக்கப்பட்டிருக்கிறார்.

நந்தவனத்தில் வில்வம், நந்தியாவட்டை, அரளி,, கொன்றை, வேம்பு, துளசி, செம்பருத்தி  ஆகியவற்றோடு திருவோடு மரமும் காணப்பட்டது.


அரிகேச பராக்கிரம பாண்டியன். !!!
அம்மன் சந்நிதி நிறைய மண்டபங்களைக் கடந்து செல்ல வேண்டி வந்தது. !!!


சிவனின் திருமேனியை பாடல் வடிவில் வடிவமைத்தவர் ( திருவெழுக் கூற்றிருக்கை ) போல வடிவமைக்கப் பட்டுள்ளது.
இதனை வடிவமைத்தவர் காவல்துறையைச் சார்ந்த வன்னியப் பிள்ளை என்பார்.

கார்கொண்ட புண்ணியத்தால் காமதிப்பால் மங்களஞ் செய்தார் மதியேறிப் புனைந்த சாத்து கணயன் சீர்வஞ்சி யன்னவனைப் பாகார்த்தா னாங்கருள்வான் மாவிடையோன் தென்காசி யத்தனையே செப்பு. !!!அம்மன் மண்டபத்தில் மக்கள் தங்கி இருப்பார்கள் எனத் தோன்றுகிறது. பொழுது போக்க ஏதேனும் விளையாட்டுகள் விளையாடி இருக்கலாம். அம்மானை போல். ஏதோ குழி போல் இருக்கு மேலும் ஆடுபுலி ஆட்டம் , பரமபதக் கட்டங்கள்.

அம்மன் சந்நிதிக்கும், சாமி சந்நிதிக்கும் இடையில் இருக்கும் பால சுப்ரமண்யர் சந்நிதியும் அம்மன் சந்நிதியும் வெகு அழகு.அதே போல் அனைத்து மூர்த்தங்களும் மனதைக் கொள்ளை கொண்டன. இங்கு பஞ்ச பாண்டவர் சிலை, கர்ணன் சிலை ஆகியனவும் வடிக்கப்பட்டு இருக்கின்றன.  திருமால், ( உக்கிரமான ) காளி தேவி, ரதி மன்மதன் ஆகியோர் சிலையும் உண்டு.

ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் திருவிழா நடக்கிறது. அதற்கு விசுவநாதப்பேரி, சீவலப்பேரி ஆகிய ஏரிகளில் இருந்து தண்ணீர் வந்து தெப்பக்குளத்தை நிரப்புகிறது. இதை வடிவமைத்தவனும் மன்னன் அரிகேச பராக்கிரம பாண்டியனே. !.

சாமி சந்நிதியில் இரண்டு வீர பத்திரர்கள், இரண்டு தாண்டவ மூர்த்திகள், இரண்டு தமிழ் அணங்குகள், எல்லாமே மிரட்டும் அளவு பிரம்மாண்டம்.

இரண்டு தலமரங்கள் ஷெண்பக மரம் & பலாமரம்.

தீர்த்தம் நான்கு :- சித்திர கங்கை, காசி தீர்த்தம், அன்னபூரண தீர்த்தம், ஆனந்த தீர்த்தம்.

ஆறு கால பூஜையும் விமர்சையாக நடைபெறுகிறது.


கோயிலைத் தேராக இழுத்துச் செல்லும் யானை. !
இந்திராதி தேவர்கள், நந்தி தேவர், கண்ணுவர், மிருகண்டு, அகத்திய முனிவர், இடும்பாசுரன் ஆகியோர் வணங்கிய தலம் இது.

முக்கிய திருவிழா ஆவணி மூலம், ஐப்பசி திருக்கல்யாணம், மாசி மகம்.

ஜோதிர் லிங்கஸ்தலங்கள்  போல் கட்டாயம் தரிசனம் செய்ய வேண்டிய சிவத் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

1 கருத்து:

 1. Thulasidharan V Thillaiakathu30 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 12:42
  கோவில் மிகப் பெரியது போலத் தோன்றுகிறது! அருமையாக இருக்கிறது. - துளசி

  நான் ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன் ஒரு கல்யாணத்திற்காக அங்கு சென்றிருந்த போது. ஆனால் அவசர அவசரமாகப் போய் வந்ததால் சரியாகப் பார்க்க இயலவில்லை. கோபுரம் பிரமிக்க வைக்கும்... - கீதா

  பதிலளி

  Thenammai Lakshmanan6 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:14
  ஆம் துளசி சகோ நன்றி கீத்ஸ்.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.