எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 17 டிசம்பர், 2020

சித்திரசபையின் சித்திரக் கடவுள்.

சித்திரசபையின் சித்திரக் கடவுள்.

சிவன் நடனமாடிய ஐந்து சபைகளில் நான்கை நான் தரிசித்திருக்கிறேன்.

சிதம்பரம் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருவாலங்காடு ரத்தின சபை, திருக்குற்றாலம் சித்திர சபை ஆகியன. திருநெல்வேலி தாமிர சபையை எப்போது தரிசிக்கப் போகிறேன் எனத் தெரியவில்லை.

தென்காசிக்குச் சென்றபோது சித்திரசபையை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இக்கோயில் திருக்குற்றாலநாதர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அருகிலேயே இன்னொரு குற்றாலநாதர் கோயிலும் இருக்கிறது.
இது தெப்பக்குளம்.

இது சிவன் மார்க்கண்டேயனை யமனிடம் இருந்து காத்த தலம். சிவகாமி அம்மையுடன் திருக்குற்றால நாதர் ஓவியமாகக் காட்சி அளிக்கிறார். இங்கே ஒரே ஒரு சந்நிதியும் பிரகாரமும்தான். அதைவிட அதிசயம் மூலவரிலிருந்து கோஷ்ட தெய்வங்கள் வரை எல்லாமே ஓவியங்கள்தான்.


கற்சிற்பங்களே இல்லாத கற்கோயில் இது. வாயிற்காப்பாளர்களும் ஓவியங்களே.

இங்கே புகைப்படமெடுக்க அனுமதி இல்லை எனவே கிடைத்ததை வலைத்தளத்துக்காக எடுத்திருக்கிறேன். நேரே இருக்கும் சந்நிதிதான் சித்திரசபை.

கேரளாக் கோயில்கள் அமைப்பில் உள்ளது.

உள்ளே சிவகாமி அம்மை அருகிருக்க முயலகன் மேல் திரிபுரதாண்டவம் ஆடும் சிவன் ஓவியமும் கீழே கரங்கூப்பி வணங்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுமாகக் கொள்ளை அழகு.

இவ்வோவியம் மட்டுமே கருவறையில் உள்ளது. தீபஹாரத்தி எல்லாம் காண்பிக்கவில்லை. அர்ச்சகர் என்ற ஒருவர் இல்லவே இல்லை.

நடுவில் சந்நிதி இருக்க உள் சுவரின் சுற்றிலும்  உள் ப்ரகாரம் வெளிப்பிரகாரம் ஆகியவற்றிலும் எண்ணற்ற ஓவியங்கள்.

உள்ளே அறுபத்து நான்கு நாயன்மார்கள், திருவிளையாடல்கள் ஆகியவை அடர்ந்த ஓவியமாக அழகுறப் பொலிகின்றன.

உள்பிரகாரத்தின் இருபுறத்திலும் இருக்கும் காவி நிறச் சுவரில் வரையப்பட்ட அந்த இயற்கை வண்ண ஓவியங்களைக் காணும்போதில் பக்தி பெருக்கெடுக்கிறது. அத்தோடு கூடவே யாரும் ஓவியத்தில் உரசாமலோ தொடாமலோ செல்லவேண்டுமே எனக் கவலுகிறது மனம்.

ஏனெனில் நாமே எதிர்பாராத விதமாக இருபுற ஓவியங்களையும் மாறி மாறிக் காணும்போது உரசும் அபாயம் இருக்கிறது.

வெளியில் திருநடனம் புரியும் பத்ரகாளி,

மயில்மேல் முருகன் அவர் எதிரில் அவரது அம்பு பட்டு மாயும் சூரபதுமன், தாரகாசுரன்,  ஆகிய உக்கிர ஓவியங்கள். அதோடு அதாக முருகனை வணங்கும் அரசன், வேதியர், விறலியர், தேவர்கள், முனிவர்கள் ஆகியோரும் ஓவியமாக்கப்பட்டுள்ளார்கள்.  மேலே வரந்தையில் அன்னங்கள் அணிவகுக்கின்றன.

கோயிலைச் சுற்றிக் கோட்டைச் சுவர் போன்ற மதிற்சுவர் !

ஓவியக் கடவுளைக் கண்ட திகைப்பில் வெளியே வந்தோம். வானம் மேகத்தோடு மிரட்டிக் கொண்டிருந்தது.

தென்மேற்குப் பருவக் காற்று ஈரத்தோடு மழைச்சேதி சொல்ல திரும்பத் தெப்பக் குளத்தைத் தரிசித்துவிட்டு ( என்ன அழகான மண்டபம்.- அதுவே கோயில் போல் இருக்கிறது ) குளம்தான் பாசம் பிடித்திருக்கிறது. ஆமாம் அந்த மண்டபத்திற்குள் எப்படி ஆடுகள் நீரைத் தாண்டி அவ்வளவு உயரத்தில் ஏறிப் போயின. ?!

கோயில் கோபுரத்தில் இடம்பெறவேண்டிய சிற்பங்கள் தெப்பக்குள மண்டபத்தில் கண்கவர் வண்ணமடிக்கப்பட்டு இடம்பெற்றிருந்தன. அவற்றில் சில தாங்கள்தான் அக்கோபுரத்தைத் தாங்குவதாக கைகள் தூக்கி நின்றது வெகு அழகு :)

இந்த ஓவிய அதிசயத்தை ஒருமுறையேனும் கண்டு வாருங்கள்.

1 கருத்து:

  1. Jayakumar Chandrasekaran7 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 3:00
    கோவில் போலவும் இல்லாமல் கோட்டை போலவும் இல்லாமல் உருவம் சிலை என்று இல்லாமல் ஒரு கோவில். தகவல் புதிது.
    Jayakumar

    பதிலளி

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University8 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:32
    சித்திர சபையை பார்க்கும் ஆவலை மிகுவித்த பதிவு. நன்றி.

    பதிலளி

    ராமலக்ஷ்மி8 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 6:41
    தெப்பக் குளத்துக்குள் இத்தனை சிற்பங்களுடனான கோபுரம் அபூர்வம். மிக அழகு.

    தகவல்களுடன் பகிர்வு நன்று.

    பதிலளி

    Thenammai Lakshmanan10 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:06
    ஆம் ஜேகே. கருத்துக்கு நன்றி

    நன்றி ஜம்பு சார்

    நன்றி ராமலெக்ஷ்மி

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளி

    Thulasidharan V Thillaiakathu14 மே, 2019 ’அன்று’ முற்பகல் 11:56
    மிக மிக வியப்பான தகவல்! சித்திரக் சபை என்ற பெயருக்கேற்றாற் போல சித்திரனளாலேயே கோயில் அல்லது மண்டபம் அல்லது கூடம் எனலாமோ. நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துவிட்டது.

    தெப்பக் குளத்து மண்டபம் மிக மிக அழகாக இருக்கிறது. சிற்பங்கள் அழகு

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.