எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 1 டிசம்பர், 2020

ஷண்முகநாதபுரத்தின் ( ஆராவயல் ) மூன்று கோயில்கள்.

ஷண்முகநாதபுரத்தின் ( ஆராவயல் ) மூன்று கோயில்கள்.

ஆராவயல் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர், வீரமாகாளி அம்மன், ஷண்முக விநாயகர்  இம்மூன்று கோயில்களும் அக்கம் பக்கமாக அமைந்துள்ளன. அது மட்டுமல்ல இந்த வீரமாகாளி அம்மன் கோவிலில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அது என்னவென்று பின்னர் சொல்லி இருக்கிறேன்.

சமீபத்தில்தான் அதாவது 1. 7. 2018 அன்று  ஆறாவயலில் இம்மூன்று கோவில்களுக்கும் ஒருங்கே கும்பாபிஷேகம் நடந்தன. எங்கள் பாட்டி ஆயா வீடு உள்ள ஊர் ( மஞ்சி வீடு ) என்பதால் எனக்கு ஆறாவயல் மிகப் பிடித்தமான ஊர்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் இக்கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் நிகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு திருமணத்தின் போதும் மாப்பிள்ளை அழைப்பு இங்கே இருந்துதான் நடைபெறும்.

ஆறாவயலில் திருவிழா சமயத்தில் நடைபெறும் கூத்தைப் பார்க்கப் பெரும்கூட்டம் கூடும். சின்னப் பிள்ளையில் அங்கே ஓரிரு சமயம் சென்று கூத்துக்களைப் பார்த்திருக்கிறோம். ஆரம்பிக்க வெகு நேரம் ஆகிவிடும் என்பதால் ( பாய் எல்லாம் கொண்டு சென்று அமர்ந்து கொண்டு பார்ப்பார்கள் ) உறங்கி விட்டதும் உண்டு.

பக்கத்திலேயே ஊரணியும் பெரு மரங்களும் சூழ கோயிலின் பின் புறத்தில் கூத்து மேடையில் கூத்து நடைபெறும்.

மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் மிக அழகானது.  நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கோவில் இது. வெளியே மிகப் பிரம்மாண்டமான யாக சாலை இருந்தது. கோவிலின் எதிரே நீண்ட பொட்டலும் அதன் பின் பள்ளி ஒன்றும் அமைந்துள்ளது.

இந்த வருடம் கும்பாபிஷேகம் நடந்தபோது திருடர்கள் ஜாக்கிரதை  என்ற போர்டில் இருந்தவர்களைப் பார்த்தால் திருடர்கள் என்றே நம்ப மாட்டோம். ஆனால் திருடர்கள் பற்றிய எந்தக் கவலையுமில்லாமல் அங்கே வந்திருந்த ஷண்முகநாதபுரம் பெருமக்களோ வீட்டில் & லாக்கரில் இருந்த அம்புட்டு வைர நகைகளையும் வஞ்சனை இல்லாமல் வாரி அணிந்து கொண்டு டிசைனர் பட்டுக்களில் உலா வந்து கொண்டிருந்தார்கள்.

அநேகர் வெளிநாட்டு வாசிகள். தங்கள் ஊரின் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அனைவரும் ஸ்பெஷல் டிக்கெட் எடுத்து வந்திருந்தார்கள். அனைவரின் வீடுகளிலும் விருந்து உபசாரங்கள் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்தன.

எனது உறவினர்கள் சிலர் அங்கே கும்பாபிஷேகப் பணியில் தொண்டாற்றிக் கொண்டிருந்தாலும் சூரிய  அனல் வெப்பம், & கூட்டம் காரணமாக தூரத்தில் இருந்து பார்த்துவிட்டுத் திரும்பி இருந்தோம்.

நாற்பத்தியெட்டு நாட்களுக்குள் ஒரு முறை சென்று வணங்கினால் கும்பாபிஷேகத்தில் வணங்கிய  பலன் கிடைக்கும் என்றாலும் செல்ல தாமதாகிக் கொண்டே இருந்தது. ஒருவழியாக சென்று தரிசித்தோம். கூட்டமே இல்லாமல் நாங்கள் மட்டும்.

முதலில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில். :- 

அற்புதமான தரிசனம் . மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டது. செந்தாமரை மலர்களில் நின்று காவல் காக்கும் துவார பாலகர்கள் , துவாரகி சக்திகள், பிரம்மா, விஷ்ணு, சிவன், நரசிம்மர், விநாயகர், முருகன், தட்சிணா மூர்த்தி , துர்க்கை, ஆகியோர் கோபுரத்தைக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

கோயில் விரிவு படுத்தப்பட்டிருக்கின்றது.


உற்சவ மூர்த்திகள். நடராஜர் , சிவகாமியம்மை, மாணிக்க வாசகர். பன்னிரு திருமுறைகளும் சைவ சித்தாந்த நூற்கள் ஆகியனவும் வைக்கப்பட்டுள்ளன.


எதிரே உற்சவ காளி, திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர்.


ஆனந்த நடராஜர் துணை.

தேவாரம் :-

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத்து ஒளியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

திருவாசகம். :-

பண் சுமந்த பாடல் பரிசு படைத்து அருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்
கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை
மண் சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டு
புண் சுமந்த பொன்மேனி பாடுதும்காண் அம்மானாய்.

திருச்சிற்றம்பலம்.

கருமுத்து வெ. வே. வெங்கடாசலம் மீனாட்சி.
( இவர்கள் எனது சித்தப்பா & சித்தி )


தட்சிணா மூர்த்தி . தென்முகக் கடவுள். கோஷ்ட தெய்வம்.


தகப்பனுக்கு வலது கரமாய் அழகு விநாயகர். தனிச்சந்நிதி.

இன்னும் கலசங்கள் தங்கம் போல் மின்னுகின்றன. கும்பாபிஷேகத்தின் அடையாளம் கருக்கழியாமல் இருக்கிறது.  கோபுரத்தின் பின்புறம் ( மேற்கில் )  மஹாவிஷ்ணு.


வடமேற்கு மூலையில் தனிச்சந்நிதியில் ஸ்ரீ தண்டாயுதபாணியின் அருளாட்சி.



மீனாட்சியம்மையின் கருவறைக் கோபுரம்.  முப்புறமும் துர்கா, லெக்ஷ்மி, சரஸ்வதி அருள் பாலிக்கிறார்கள்.


நவக் கிரஹ சந்நிதி இன்னொரு வித்யாசம். நாற்புறமும் சிங்கங்கள்  தூண்களைத் தாங்கி நிற்க அதனுள் நவக்கிரஹங்கள் அருளாட்சி செய்கின்றார்கள்.

பொதுவாக காரைக்குடிப் பக்கக் கோவில்களி தூண்களில் நாகங்களும் யாளிகளும் சிம்மங்களும் யானைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் சிம்ம யாளி பிரசித்தம். சிம்ம ராசிக்காரர்களுக்குச் சிறப்பான கோவில்களை இவை.

கோபுரத்தை கோவிலிலிருந்து உட்பக்கமாக  எடுத்திருக்கிறேன். .

மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் காணக் கண் கொள்ளாமல் மிகப் பிரம்மாண்டம் இக்கோவிலில். அம்மன் வழக்கம் போலவே சிற்றாடை இடை உடுத்தி சிட்டுப் போலக் காட்சி அளிக்கிறாள்.

அடுத்து வீரமாகாளியம்மன் கோவில். :-

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை ஒட்டி இருக்கும் இக்கோயிலில் வீரமாகாளியம்மன் குடி கொண்டுள்ளாள். அதுவும் இரண்டு வீரமாகாளியம்மன்கள்.

முதலில் காட்டுக்குள் இருந்த இக்கோவிலை இங்கே புனர் நிர்மாணம் செய்து பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அப்போது காளியம்மன்  திருவுருவின் கை ஒச்சமாகிவிட அதை பித்தளையில் செய்து இணைத்திருக்கிறார்கள்.

பின்னர் பின்னமில்லாத முழு அம்மன் திருவுருவைக் கருவறையில் பிரதிஷ்டை செய்தவுடன் ஆதி அம்மனை முன் பக்கமே வைத்து வணங்கி வருகிறார்கள்.


வீரமாகாளி உக்கிரமானவள் என்பதால்  கோவில் வாசலும் சந்நிதியும் வடக்கு பார்த்து கம்மாயை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலின் வாயில் வடக்கு என்றாலும் தெற்கிலும் ஒரு வாயில் உண்டு. அங்கேயும் வீரமாகாளி வரவேற்கிறாள்.

மேற்கில் அவள் மஹாலெக்ஷ்மியாக தாமரை மலரில் அவதாரம் செய்திருக்கிறாள்.

நாற்புறமும் பூதகிகள் கூட கனிவோடு அமர்ந்திருக்கிறார்கள்.



உள்ளே துவஜஸ்தம்பம் மின்னுகிறது.

சூலத்தில் எலுமிச்சை.  பலி பீடம்.

வீரமாகாளியம்மன் முன்புறம் காட்சி அளிப்பவள் ஆதி வீரமாகாளி.  கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பவள் புதிதாகச் செய்யப்பட்ட அம்மன்.

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன். :)


கிழக்கிலும் மகிஷனை அடக்கிய வனதுர்க்கா


வீரமாகாளியம்மன் கோவிலிலிருந்து மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலுக்குச் செல்லவும் பிரதக்ஷணம் செய்யவும் ஸ்லாபுகளால் தளம் அமைத்திருக்கிறார்கள்.

முதலில் வணங்கி இருக்கவேண்டியவர் இவர்தான்.

ஸ்ரீ ஷண்முக விநாயகர்.

ஷண்முகநாதபுரத்தைக் காக்கும் விநாயகர்.

ராகு கேதுவுடன் காட்சி அளிக்கிறார் ஷண்முக விநாயகர்.

அவர் அருளாட்சி செய்துவரும் கோவிலில் இருந்து மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலின் கோபுரங்களின் காட்சி. ஆலயங்கள் படு தூய்மையாக பராமரிக்கப்படுகின்றன.

ஆராவயல் கோவில் கும்பாபிஷேகக் குழு பெரு முயற்சி எடுத்து இக்கும்பாபிஷேகங்களைச் சீரும் சிறப்புமாக நடத்தி இருக்கிறார்கள். நீர் மோரும், பானகமும் இறைபட்டது. எங்கெங்கும் மக்கள் வெள்ளம். ஆறாவயலின் ஆறு வீதிகளும் நிரம்ப நிரம்ப கார்கள். அதிலும் வெளியூர்க்காரர்கள் ஒரு வீதியில் சென்று மீள முடியவில்லை. கடைசி வீதிக்குச் சென்று திரும்பினோம்.

இக்கோயிலின் ராஜகோபுரத்தை அமைப்பதில் இவ்வூர்க்காரரான மாண்பமை நீதியரசர் எம் சொக்கலிங்கம் அவர்கள் பெரும் பங்காற்றி இருக்கின்றார்கள். அவர்களுக்கும் ஷண்முகநாதபுரத்து மக்களுக்கும் வாழ்த்துக்கள்.

கோயில் உலா மிக அருமையான  தரிசனமாக அமைந்தது. முப்பெரும் சக்திகளை வணங்கி வீடு மீண்டோம்.

1 கருத்து:

  1. G.M Balasubramaniam24 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 2:54
    ஆலயம் தொழுவது சாலவு நன்று கும்பாபிஷேகப் பொலிவுடன்மின்னும் கோவில்கள்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan24 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 9:49
    நன்றி பாலா சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University25 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 12:39
    அருமையான கோயில் உலா. நன்றி. இதைப் பார்த்ததும் கட்ந்த மகாமகத்தின்போது குடமுழுக்கு கண்ட கோயில்களை கும்பகோணத்தில் நான் பார்த்தது நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan27 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 9:38
    நன்றி ஜம்பு சார்.

    பதிலளிநீக்கு

    Unknown24 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 5:58
    I just happen to see your write up of the temple .You have missed out Vairavar Sabbath.

    பதிலளிநீக்கு

    Subu24 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 8:31
    அருமையான தொகுப்பு!, இதைப் படித்தவுடன் மீண்டும் சென்று எங்கள் ஊர் கோயிலை உற்றுப் பார்க்க வேண்டும் என ஆவல்..

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.