திங்கள், 4 மார்ச், 2019

கானாடுகாத்தான் சிதம்பர விநாயகர் கோவில் & ஸ்ரீ பத்மாவதி தாயார், வெங்கடேச பெருமாள் கோவில்.

கானாடுகாத்தான் சிதம்பர விநாயகர் கோவில் & ஸ்ரீ பத்மாவதி தாயார், வெங்கடேச பெருமாள் கோவில்.

கானாடுகாத்தானில் மாட்டா ஊரணிக்கரையோரம் கோயில் கொண்டிருக்கும் சிதம்பர விநாயகர் கோவில் மிக அழகானதும் கலைநயத்தோடு கட்டப்பட்டிருப்பதும் கூட. ஊரணியின் கட்டுக்கோப்பும் அழகும் காணக் கண்கோடி வேண்டும். இக்கோயிலின் அருகிலேயே கோயில் கொண்டுள்ள ஸ்ரீ பத்மாவதித் தாயார், வெங்கடேசப் பெருமாள் கோயிலும் இன்னொரு அழகான மன நிம்மதி அளிக்கும் கோயில். இங்கே கும்பிட்டுச் சென்றால் பணங்காசு பெருகுவதாக அங்கே வசிக்கும் ஒருவர் குறிப்பிட்டார்.
மிக சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன இக்கோயில்கள். பக்கத்திலேயே ஊரணியும் பூங்காவும் மகா பெரிய விருட்சங்களும் அமைந்திருப்பதால் காற்று அள்ளிக் கொண்டு போகிறது.

சிதர்காய் உடைக்க மூலைக்கருடன் சந்நிதி.
மிக நீண்ட அழகான நடை பாதை கோயிலுக்கு இட்டுச் செல்கிறது. மாலை வேளைகளில் இங்கே போடப்பட்டிருக்கும் பெஞ்சுகளில் அமரலாம். காலாரா நடைப்பயிற்சியும் செய்யலாம்.
மிக அழகான அருள் பொங்கும் கோயில்களை இங்கே சென்றால் தரிசிக்க மறவாதீர்கள்.

கொஞ்சம் பணக்காரக் கோயில்களும் கூட. பூஜா பொருட்கள் அனைத்துமே வெள்ளி. மற்றும் ஒவ்வொரு சந்நிதியிலும் கம்பீரமும் பணத்தின் ஆட்சியும் அருளும் எழிலும் எதிரொலிக்கிறது.
மூன்றரை மணிக்குச் சென்றோம். நான்கு மணிக்குக் கோயில் திறந்தாச்சு.
இங்கே கருவறையில் ஈசனாரும் அம்மையும் அவரின் சகோதரன் இளவல் பாலசுப்ரமண்யமும் நாகர்களோடு அருள் பாலிக்கிறார்கள். சிவனோடு இருப்பதாலோ என்னவோ இவர் சிதம்பர விநாயகர்.
நல்ல கற்றளிக் கோயில் இது. கல்தூண்கள் கரவுசெறிவாக அமைக்கப்பட்டுள்ளன.
எப்பக்கம் நோக்கினும் கற்றூண்களின் பலத்தில் மிக அழகாக நிற்கிறது.
இனி நகாரா வாத்தியமும் நவக்ரக சந்நிதியும். ஒரு பிரகாரம் ( பிரதக்ஷிணம் ) வந்தாச்சு. :) இனி இக்கோயில் பற்றிய பாடல்கள் ஸ்லோகங்களைப் பார்க்கலாம். முதலில் நவக்ரக ஸ்துதிகள்.
சூரியன்.

சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.

சந்திரன்.

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி, திருவருள் தருவாய்
சந்திரா போற்றி, சத்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி.

செவ்வாய் .

சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறையிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு.

புதன்.

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புதபகவானே பொன்னடி போற்றி
பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி.

குரு.

குணமிகு வியாழக் குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
ப்ரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரகதோஷம் இன்றிக் கடாட்சித்தருள்வாய்.

சுக்கிரன்.

சுக்கிரமூர்த்தி சுபமிக ஈவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
வெள்ளிச் சுக்கிர வித்தகவேந்தே
அள்ளிக்கொடுப்பாய் அடியார்க்கு அருளே.

சனி.

சங்கடந் தீர்க்கும் சனிபகவானே
மங்கலம் பொங்க மனம்வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தாதா.

ராகு.

அரவெனும் இராகு ஐயனே போற்றி
கரவாது அருள்வாய் கடுந்துயர் போக்கி
இரவா இன்பம் எதிலும் வெற்றி
இராகுத் தேவே இறைவா போற்றி.

கேது.

கேதுத் தேவே கீர்த்தித் தேவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேதுத்தேவே கேண்மையாய் ரட்சி.

நமஹ சூர்யாய சந்திராய மங்களாய புதாயச குரு சுக்கிர சனி ப்யஸ்ச ராஹவே கேதுவே நமஹ.

சிதம்பர விநாயகர் திருத்தாள் போற்றி.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்துப் போற்றுகின்றேனே.

-- திருமூலர்.

அடியமர்ந்து கொள்வாயே, நெஞ்சமே ! அப்பம்
இடியவலோடு எள்ளுருண்டை கன்னல் - வடிசுவையில்
தாழ்வானை ஆள்வானை தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்.

-- கபிலர்.

அருளாய் உருவாய் அருவாய்ப் பேரின்பத்
தெருளாய் முதியமறை தேடும் - பொருளாய
தந்திமுகத் தோனே ! தமியேன் குறித்தவரம்
வந்தினிது தந்துதுதவு வாய்.

-- மாம்பழக் கவிச்சிங்கர்.

நல்மழை பொழிந்து நல்லறம் விரிந்தோங்க
நம்நாடு செழித்து நம்குலம் தழைத்தோங்க
நம்பிக்கை வைத்து விநாயகன் தாள்வணங்கத்
தும்பிக்கை யுடைவன் துணைவந்தருள் வானே.!

நாவினால் உனை நாடொறும் பாடுவார்
நாடுவார் தமை நண்ணிப் புகழவும்
ஓவிலாதுனைப் பாடவும் துன்பெலாம்
ஓடவும் மகிழோங்கவும் செய்குவாய்.
காவிநேர் களத்தான் மகிழ் ஐங்கரக்
கடவுளே, நற்கருங்குழி என்னும் ஊர்
மேவி அன்பர்க் கருள் கண நாதனே
விளங்குஞ் சித்தி விநாயக வள்ளலே.

-- இராமலிங்க சுவாமிகள்.

இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும் பஞ்சென மாயும் ;
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச் செய்யும்;
கடவுள் முதலோர்க்கு ஊறுஇன்றிக்
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவு மருப்புக் கணபதி பொற்
சரணம் சரணம் அடைகின்றோம்.

-- கச்சியப்ப முனிவர்.

மதிஞானம் தவம் தானம் மானம் ஒளி புகழ்குலம் வண்சரீரம் முற்றும்
பதிவான தனம் தான்யம் கிருகம் மனைவி மைந்தர் பயில்நட்பு ஆதிக்
கதியாவும் கலந்து சர்வாயுதர்காக்க : காமர் பவுத்திரர் முன்னான
விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர் எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க.

-- காசிப முனிவர்.

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் துணர்வூறி
இன்பரசத்தே பருகிப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே ;
தம்பிதனக் காகவனத் தணைவோனே,
தந்தை வலத்தால் அருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமானே.

-- அருணகிரிநாதர்.


மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸூத்ர
வாமந ரூப மஹேஸ்வரி புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸூதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.

ஸ்ரீ கணேச ஸ்ருத ஜனபாலனம்
சக்திரூபதரம் சகல விக்னஹரம்
கரிகலபமுகம் கருணா ஸாகரம்
சித்திபுத்தி தாயகம் மஹா கணபதிம்
பாசாங்குச தரம் பக்தயோஷிதம்
ஞான விநாயகம் நாகயக்ஞ சூத்ரதரம்
கௌரி தனயம் நமாமி ஸததம்.

ஜெயகணேச ஜெயகணேச
ஜெயகணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச
ஸ்ரீ கணேச ரக்ஷமாம்.

1 கருத்து:

 1. priyasaki28 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 11:24
  அழகான,வித்தியாசமான கோவில் அக்கா. நல்ல முறையில் பராமரிக்கிறார்கள் என்பது படத்தை பார்க்க தெரிகிறது.

  பதிலளிநீக்கு

  iramuthusamy@gmail.com2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:20
  கானாடுகாத்தான் சிதம்பர விநாயகர் கோவில் - சிறப்பான அறிமுகம்.

  பதிலளிநீக்கு

  Thenammai Lakshmanan6 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 11:24
  நன்றி ப்ரியசகி அம்மு

  நன்றி முத்துசாமி சகோ.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

ஆயுள் பலம் தரும் கோலங்கள்.

  ஆயுள் பலம் தரும் கோலங்கள்.