எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 25 ஜனவரி, 2021

மந்திராலயம்.

மந்திராலயம்.

ஹைதையில் இருக்கும்போது ( 2014 ) மந்திராலயம் செல்வதென முடிவாயிற்று. இதற்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். 1992 இல் . கர்நாடக ஆந்திரா எல்லையில் இருக்கும் மந்திராலயம் எங்கள் மனங்கவர்ந்த ஊர். 

சிதம்பரத்தில் இருக்கும்போதே வாராவாரம் வியாழனன்று புவனகிரிக்குச் சென்று ( இராகவேந்திரர் திருவேங்கடநாதராகப் பிறந்தஸ்தலம் ).  வணங்கி வந்திருக்கிறோம் நானும் சங்கரி மாமியும். 


பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இம்மகானின்மேல் அபரிமித பக்தி உண்டு. 

பிரகலாதர், பாஹ்லிகர், வியாசராயர் அதன்பின் ராகவேந்திரராக அவதரித்தவர் இவர். இவரது பூர்வீகப் பெயர் திருவேங்கடநாதர். அதுவே பெருமாள் பெயரும் எங்கள் மூத்த மகனின் பெயரும். இப்பெயரை அடைய அவன் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அவன் பெருமாளின் நட்சத்திரமான திருவோணத்தில் பிறந்த திருவேங்கடநாதன் :) 

1992 இல் இருந்ததை விடக் கோவிலும் ஊரும் இன்னும் விரிவாகி இருந்தது. 

ராகவேந்திரரின் ஆட்சிதான் எங்கெங்கும்.

நீளமான பாதைகள் முடிவில் இரட்டை நுழைவாயில் அதன் பின் கோவிலின் எதிரே பிரம்மாண்டமாய் ஒரு ஒற்றை நுழைவாயில். 

நடைபாதையின் இருபுறமும் செயற்கை நீர்வீழ்ச்சிகளும் தெய்வத்திரு சிற்பங்களும் அணிவகுத்தன. 

எங்கும் நிற்காமல் சென்றாலும் ( பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலைத் தாண்டித்தான் போனோம் ). மதியம் ஆகிவிட்டது. 



உணவருந்திவிட்டு அனைவரும் கோவில் முன்புறமிருந்த நீளமான காரிடாரில்/நடையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். 

எதிரே மதங்க நர்த்தனமாடும் பாலகன் கிருஷ்ணன் மதியை மயக்கினான். பதினாறு தலைப்பாம்பு !


அதன் ஒற்றை வாலைப் பிடித்துக் கொண்டு நடனமாடும் தெய்வீகச் சிறுவனை ஆயர்பாடி மக்கள் பயத்துடன் கூக்குரலிட்டு அழைக்கின்றார்கள். பரிதவிக்கின்றார்கள். 

அவனோ அஞ்சாமல் ஆடி அடக்கி அதன் விஷத்தை நீக்கி அங்கிருந்து அகன்று போகுமாறு செய்கின்றான். என்னே வீரம். !

மனமென்னும் காளிங்கம் பதினாறு அல்ல பலநூறு வகையான ஆசைகொண்டு விஷம் பாய்ச்ச முயலும் அதைப் பக்தி என்னும் ஒற்றை நம்பிக்கை கொண்டு அடக்கி ஆள வேண்டும் என்பதை உணர்ந்தேன். 

பக்கவாட்டில் ஒரு பாதை .பக்கத்திலேயே மஞ்சளம்மா/மாஞ்சாலம்மா என்ற கிராம தேவதையின் சந்நிதி. 


அங்கே தீபம் பார்த்துவிட்டுத்தான் இங்கே வந்தோம். 


ராயரின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறோம். 

நீள் பாதையில் எம் கர்மாவைக் கடந்து வந்தபின்னும் இன்னும் கதவைத் திறவாதிருப்பதேனோ ராயரே. 




மூடிய கதவின் முன் மோனத்தவத்தில். 

வேங்கடநாதர் வரலாறு கண் முன்னே. மனைவி சரஸ்வதி இளைய மகன் ஆகியோரோடு எளிய வாழ்வு வாழ்ந்த மகான். இவரின் குருவான ஸுதீந்திர தீர்த்தர் தனக்குப் பின் இவரை த்வதைத்தைப் பின்பற்றும் மத்வ மடத்தின் பீடாதிபதியாக நியமிக்க துறவறம் ஏற்றுப் பீடாதிபதியானார். அதன் பின் இவர் இங்கே ஜீவ சமாதி அடைந்தார். துங்கபத்திரையின் கரையில் மன்சாலி என்ற இந்த இடத்தில் ராகவேந்திரரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. 

பக்தர்களின் உடற்குறைகளையும் உள்ளக் குறைகளையும் தீர்க்கும் தீர்த்தர் நம் குறையையும் களைவார் என்ற வேண்டுதலோடு காத்துக் கிடக்கிறோம். அப்பண்ணாவைப் போல ஓடி ஓடிப் பார்க்கிறோம். அவர் சொன்ன ஸ்லோகத்தின் கடைசி வரியை “ஸாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி” நினைத்துக் கொள்கிறோம். நம்முடைய வாழ்க்கையையும் பூரணமாக்க அவர் நமக்கும் அருள் பாலிப்பார். நம்மையும் அரவணைப்பார் என்று நம்பிக்கையோடு தவம் கிடக்கிறோம்.

ராகவேந்திரரை தரிசித்துப் புளகாங்கிதமடைந்ததை  இன்னுமொரு இடுகையில். தருவேன்.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan27 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 1:48
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்27 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 6:38
    தகவல்கள் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 4:30
    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.