எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 ஜனவரி, 2021

கல்லுக்குழி ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர்.

கல்லுக்குழி ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர்.

 ஸ்ரீ ராம தூத மஹாதீர ருத்ரவீர்ய சமப்ரப
அஞ்சனா கர்ப்ப சம்பூதம் வாயு புத்ர நமோஸ்துதே !

திருச்சி கல்லுக்குழியில் இருக்கும் ஆஞ்சநேயரைத் தரிசித்ததில்லையா. வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்து இன்புற வேண்டியவர் இந்த ஆஞ்சநேயர். சுந்தரமாகக் காட்சி தரும் மூலவரையும் உற்சவரையும் ஒரு சனிக்கிழமை மாலை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என சுந்தரரின் காட்சி இன்பத்தைப் பகிர்ந்துள்ளேன். மூன்று நிலை இராஜ கோபுரம் நம்மை வரவேற்க கிழக்கு நோக்கி அமைந்த கோவில் கல்லுக்குழி சுந்தர ஆஞ்சநேயர் கோவில். ரயில்வே ஸ்டேஷன் சிப்பந்திக்களுக்காக ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இங்கே கொண்டு வந்து கட்டப்பட்டது இக்கோயில் என தலபுராணம் சொல்கிறது. 

நவக்ரகங்கள் ஈசான்ய மூலையில் காட்சி அளிக்கிறார்கள். 

கோயிலுக்கு வெளியேயும் உள்ளேயும். உள்ளே நுழையும்போதே வெப்பமானி, சானிடைஸர் கொண்டு வரவேற்கிறார்கள். 
தூரத்தே காட்சி அளிக்கும் சுந்தர ஆஞ்சநேயர் மிகச் சிறிய புடைப்புச் சிற்பமான ஓரடி உயரச் சிலா உருவம்தான். ஆனால் கொள்ளை அழகு & வசீகரம். மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது. 

கிழக்கு நோக்கிக் காட்சி அளித்தாலும் இடது பாதம் வடக்கிலும் வலது பாதம் கிழக்கு நோக்கியும் உள்ளது. கையில் பாரிஜாத மலர். 
அசோக வனத்தில் சீதையைக் கண்டு துள்ளி இறங்கிய திருக்கோலமோ இது என எண்ண வைத்தது. அதற்கேற்றாற்போல் அபய ஹஸ்த முத்திரை காட்டிக் கொண்டிருக்கிறார் அனுமன். 

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி 
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான். 

உற்சவரும் மூலவரும் காட்சிதரும் எழில் அழகை நேரில் பார்த்தால்தான் உணரமுடியும். அங்கே எந்த பூஜைப் பொருளையும் ஏற்றுக்  கொள்வதில்லை. பிரசாதமும் தருவதில்லை. தீபஹாரத்தி மட்டுமே காட்டுகிறார் பட்டர்.
வெளியே விற்கும் வெற்றிலை மாலையை கருவறைக்குள் அனுமதிப்பதில்லை. எல்லாம் தியான ஆஞ்சநேயருக்கு நாமாகவே சாத்த வேண்டியதுதான். அதிலும் அங்கே சக்கரத்தாழ்வார், நரசிம்மர் சந்நிதியில் இருந்த பட்டர் பெண்கள் சாத்தக் கூடாது. ஆண்கள்தான் வெற்றிலை மாலை போடணும் என்றார். ஏன் எனக் கேட்டேன். அவர் பிரம்மச்சாரி அதுதான் என்றார். அது சரி விநாயகரையும் அனுமனையும் நாங்கள் சகோதரனாகவோ பிள்ளையாகவோதானே பார்க்கிறோம். பிள்ளைக்குப் பூச்சூடி அழகு பார்ப்பதில்லையா என மனதிற்குள் நினைத்தாலும் அவர் சொன்னபடி ரங்க்ஸையே அணிவிக்கச் சொன்னேன். :) 
தியான ஆஞ்சநேயரும் வெகு கம்பீரம். தனி மண்டபத்தில் எழுந்தருளி இருக்கிறார்.  
துவஜஸ்தம்பம், கொடிமரம். 
விநாயகரும் முருகரும் முன்புறம் கிழக்குப் பக்கம் காட்சி அளிக்கிறார்கள். அவர்கள் முன்னே 13 நாகர்களும் எழிற்காட்சி தருகிறார்கள். ராகு, கேது இவர்களோடு  வாசுகி, ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன்,குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன், மகாபதுமன், சங்கன், கம்பளன் ஆகியோராய் இருக்கலாம். 
எழிலான மஹா மண்டபம். 
இங்கே மிகப் பிரம்மாண்ட ஆலமரமும், தியான ஆஞ்சநேயரும் தியான மண்டபத்தில் காட்சி அளிக்கிறார்கள். அதிலும் ஆஞ்சநேயரின் தியான ரூபம் தத்ரூபம். மேலும் ராகவேந்திரரும் ( அவரது இன்னொரு அவதாரம் ) காட்சிஅளிக்கிறார். சக்கரத்தாழ்வாரும் யோக நரசிம்மரும் வெகு சாந்தம். பாண்டுரங்கரையும் தரிசித்தோம். சுந்தர ஆஞ்சநேயரை நெஞ்சில் சுமந்து கொண்டோம்.  

இக்கோயிலுக்கு வந்தால் சனியின் தாக்கம் குறையும், வெளிநாடு செல்லும் யோகம், பதவி உயர்வு செல்வ வளம் கிட்டும் என்பது ஐதீகம். 

வடைமாலை,வெற்றிலை மாலை, வெண்ணெய் சாற்றுதல் உண்டு. ஆனால் கொரோனாவுக்குப் பின் அவர் சிந்தூரமும் வெள்ளிக்காப்பும் வெண்ணெய்க் காப்பும் அணிந்து யோகத்தில் தனித்திருக்கிறார். 

மனோஜவம் மாருதி துல்யவேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயுத்த முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

புத்திர்பலம் யசோதைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஸாத்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் சரணம் பவேத்

அஸாத்ய ஸாதக ஸ்வாமியின்
அஸாத்யம் தவ கிம் வத
ஸ்ரீராமதூதோ க்ருபாசிந்தோ
மத்கார்யம் ஸாதயப் ப்ரபோ

அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாரம் ப்ரம்மஹ்ச்சாரிணம்
துஷ்டக்ரஹ விநாசாயா ஹனுமன் முபாஸ்மஹே

குட்டிக் குழந்தையைப் போலக் காட்சிதரும் சுந்தர ஆஞ்சநேயரைக் கண் கொள்ளுமட்டும் தரித்து வந்தோம்.

1 கருத்து:

 1. வல்லிசிம்ஹன்11 டிசம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 8:09
  என்னை மறக்காதேன்னு தேன் வழியா ஹனுமான் சொல்கிறார்.
  திருச்சியில் இருந்த நாட்களில் இவரைக் காணாத வேண்டாத நாட்கள் சொற்பமே. அவ்வளவு வரப்ரசாதி. அதிசயம் என்ன என்றால் எங்கள் மாப்பிள்ளையும் இவர் மேல் அசையாத பக்தி கொண்டவர். அனுமன் தாள் சரணம். நன்றி தேனம்மா.

  பதிலளிநீக்கு

  Thenammai Lakshmanan28 டிசம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 2:34
  உண்மைதான் வல்லிம்மா.கல்லுக்குழி போய் அனுமனைத் தரிசிச்சிட்டு வந்தீங்களா.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

தீபாவளி & கந்தசஷ்டிக் கோலங்கள்

 தீபாவளி & கந்தசஷ்டிக் கோலங்கள்