எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 ஜனவரி, 2021

காரைக்குடி வள்ளலார் திருக்கோயில்.

காரைக்குடி வள்ளலார் திருக்கோயில்.

காரைக்குடியில் நாகநாதபுரம்  என்கின்ற நாவன்னா புதூரில் பெருமாள் கோவிலுக்கு எதிரில் ( துபாய் நகரத்தார் சங்கத்துக்கும் பக்கவாட்டில் )  புஷ்கரணியின் கிழக்குப் பக்கம் தேர்முட்டியின் அருகில் அமைந்துள்ளது வள்ளலார் திருக்கோயில்.

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி

என்று ஜோதியையே ஈசனாக வழிபட்ட வள்ளலார் கோயிலை நெய்வேலி அருகிலுள்ள வடலூரில் கண்டதுண்டு. தைப்பூசத்தன்று சென்று தரிசிக்க வாய்த்ததில்லை. ஆறு திரைகள் விலக்கி ஜோதியாய் இருக்கும் ஈசனைத் தீப தரிசனத்தில் தரிசிக்கலாம் என்றார்கள். நாம் ஆறு திரைக்குமுன் இருந்த தீபத்தையே ஈசனாக வணங்கி வந்தோம்.


காரைக்குடி செஞ்சை பெருமாள் கோவில் எதிரில் இருக்கும் இந்த வள்ளலார் ஆலயத்தைத் தரிசிக்கும்  வாய்ப்புக் கிட்டியது ஒருமுறை.

இராமலிங்க அடிகள் என்னும் வள்ளலார் உலகிற்கு அளித்த ஒப்புயர்வற்ற திருவருட்பா சந்நிதியின் இருபுறமும் தனித்தனி பீடங்களில்/ மாடங்களில் அணி செய்கின்றது.


இத்திருக்கோயில் ஆரம்பித்துப் பத்துப் பன்னிரெண்டு வருடங்கள் இருக்கலாம்.

1823 இல் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தவர் இராமலிங்கர். பசிப்பிணி மிகுந்த மக்களின் துயரத்தைப் பார்த்துத் தனது நாற்பத்தி நான்காவது  வயதில் வடலூரில் தருமசாலை ஒன்றைத் தொடங்கி உணவளிக்க ஆரம்பித்தார். அது இன்று வரை அணையா ஜோதியாய் எரிந்து அனைவரின் வயிற்றுத் தீயையும் அவிக்கிறது. வள்ளலாய் உணவை அள்ளி அள்ளி வழங்கியவர் என்பதால் வள்ளலார் என அழைக்கப்படுகிறார் என நினைக்கிறேன்.

எல்லா மதங்களும் சுட்டும் உண்மை ஒன்றென உணர்ந்து  சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை ஆரம்பித்தவர் வள்ளலார். சமய நல்லிணக்கம் மத நல்லிணக்கம் கொண்டவராகத் திகழ்ந்தார் வள்ளலார். இந்த உண்மைகளை விளக்கும் அறிவு நெறியை வலியுறுத்த சத்திய ஞான சபையை ஆரம்பித்தார்.


உயிர்க்கொலை புரியக்கூடாது என்பதை வலியுறுத்தியவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர். எல்லா உயிர்களும் நமதுயிர் போன்றதே அதனால் அவற்றை வதைத்தலும் பலியிடுதலும் உணவுக்காகக் கொலைபுரிதலும் கூடாது எனப் போதித்தவர்.


கடவுள் ஒருவரே . அவர் அருட்பெருஞ்சோதி மயமாய் இருக்கிறார் என்பதை உலகுக்கு அறிவித்தவர்.


வள்ளலார் பிறந்து 198 ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் அவர் புகழ்பாடுகின்றோம். அவர் பெருமை பேசுகின்றோம். பசிப்பிணி நீக்கிய இறைவன் அவர். எவ்வுயிரையும் தன்னுயிராய்க் கருதியவர்.

காரைக்குடி சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் சார்பில் வருடா வருடம் இவர்
அவதார தினத்தன்று அகவல் பாராயணமும் திருவருட்பா ஜோதி வலமும் நடைபெறுகின்றது. சன்மார்க்கக் கொடி ஏற்றுதல், திருவருட்பா இன்னிசை நிகழ்ச்சி, சிறப்புச் சொற்பொழிவுகள், சிறப்பு அன்னதானம் ஆகியன வருடந்தோறும் நடைபெறுகின்றன.

இராமலிங்க அடிகள் என்னும் வள்ளலார் இயற்றிய திருவருட்பா 5818 பாடல்கள் அடங்கியது. அதில் எனக்கு மிகப் பிடித்த பாடல் இதுதான்.

3269 அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே.

செஞ்சை பெருமாளோடு வள்ளல் பெருமானாரையும் வணங்கி  வந்தோம்.

1 கருத்து:

  1. G.M Balasubramaniam13 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 3:55
    பேரூந்தில் போகும்போது கடந்து போயிருக்கிறேன் உள்ளே சென்றதில்லை

    பதிலளி

    KILLERGEE Devakottai13 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 4:52
    தகவல் நன்று சகோ நானும் ஓர்தினம் சென்று வர முயல்வேன் நன்றி.

    பதிலளி

    வெங்கட் நாகராஜ்13 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 7:52
    நல்ல தகவல். வடலூர் அருகிலேயே இருந்திருந்தாலும் இதுவரை அங்கே சென்று வர இயலவில்லை. ஒரு முறை சென்று பார்க்கும் ஆசையுண்டு.

    பதிலளி

    Thenammai Lakshmanan2 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 8:44
    ஒருமுறை சென்று வாருங்கள் பாலா சார்

    நன்றி கில்லர்ஜி சகோ சென்றீர்களா

    நிச்சயம் போய்வாருங்கள் வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.