எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 ஜனவரி, 2021

நவநதிகள் சங்கமித்த தீர்த்தக்குளம்.

நவநதிகள் சங்கமித்த தீர்த்தக்குளம்.

என்னது நவநதிகள் சங்கமித்த தீர்த்தக் குளமா.. இரண்டு நதிகளையே இணைக்க முடியலையாம் . இதுல ஒன்பது நதிகள் இணைப்பான்னு நீங்க முணுமுணுக்குறது கேக்குது. உண்மைதாங்க. இதை இணைச்சவர் சாதாரண ஆளில்லை.. ஆனானப்பட்ட சிவபெருமானே ஆக்கும். அதுனாலதான் அந்தச் சிறப்புப் பெற்ற தீர்த்தக்குளம் ”மகா”மகக் குளம்னு அழைக்கப்படுது.

கும்பகோணம் காசி விசுவநாதர் விசாலாட்சி கோவிலுக்கு எதிரில் அமைந்திருக்கு இந்த மகாமகக் குளம். குளத்துக்கு நாற்புறமும் படித்துறை இருக்கும். இங்கோ குளத்தின் எல்லாப் பக்கமும் மண்டபங்களும் படித்துறையுமா இருக்கு. குட்டியும் பெரிசுமா கிட்டத்தட்ட 20க்குமேலே மண்டபம் அல்லது கோவில்களும் அதன் பக்கங்களில் படித்துறையுமா இருக்கு. இந்தப் படிகளும் சும்மா கட்டுக்கோப்போட மூணு மூணாக் கட்டப்பட்டிருக்கு.

மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று இத்திருக்குளத்தில் நீராடினாலோ கும்பம் சொரிந்து கொண்டாலோ மிகுந்த விசேஷம். சிம்மராசிக்காரர்களுக்கு சிறப்புத்தரும் கோயிலும் குளமும் இது. மகா கும்ப மேளா போல் இங்கே மாசிமகம் சிறப்பு.


ஒருமுறை கங்கை,யமுனை, சரஸ்வதி, காவேரி, கிருஷ்ணா, கோதாவிரி, நர்மதை, சரயு, துங்கபத்ரா ஆகிய நதிகள் அவற்றில் நீராடிய மனிதர்களின் பாவத்தை எல்லாம் சுமந்து இழிநிலை அடைந்தனர்.  காசிக்குச் சென்று சிவபெருமானை வணங்கி இதற்குப் பரிகாரம் கேட்டனர்.

வற்றாத நதிகளான அவற்றின் துயர் தீர்ப்பதாகக் கூறி காசி விசுவநாதர் அந்த ஒன்பது நதிகளையும் இங்கே அழைத்து வந்து மகாமகத்தன்று இத்திருக்குளத்தில் சேர்த்தாராம்.

மனிதர்கள் தீர்த்தமாடிச் சேர்த்த பாவத்தை எல்லாம் மாசி மகத்தன்று இந்தக் திருக்குளத்தில் தீர்த்தமாடி நதிகள் தம் தொல்லை நீங்கிப் புனிதமடைந்தனவாம்.

ஆச்சரியமா இருக்குல்ல. இன்னும் இந்தத் தீர்த்தக் குளம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீராடும் மனிதர்களின் பாவம் போக்கிப் புண்ணியத்தைப் பெருக்குதாம்.

நவநதிகள் சேர்ந்த இத்திருக்குளத்தில் தினசரியும் குளிக்கும் புண்ணியம் பெற்றவர்கள் இத்திருத்தலத்தில் வசிக்கும் பேறு பெற்றோர்.

பிரம்மாண்டக் குளம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது . இதன் எதிரிலேயே காசி விசுவநாதர் கோவில் அமைந்துள்ளது.

இத்திருக்கோவிலில் ஒரு சிறப்பு பிரம்மாவுக்கு உருவச் சிலை உள்ளது. !

மூலவர் மேற்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கிறார்கள்.


இத்திருக்கோவிலில் நவகன்னியருக்கான சந்நிதி உள்ளது. அது ஒன்பது நதிகளை காசி விசுவநாதர் தன்னுடன் இங்கே கொணர்ந்து மகாமகக் குளத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டதனை நினைவுறுத்தும் விதம் ஒன்பது நதிகளும் கன்னிகை வடிவில் சிலையாகியுள்ளனர்.


ஐந்து நிலை ராஜ கோபுரம் உள்ள கோவில் இது.  இதன் முன் பக்கம் ஆர்ச்சிலேயே ஒன்பது நதிகளும் சிவனுடன் மகாமகக் குளத்தில் புனித நீராடக் கிளம்பிய கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது வெகு அழகு.

கும்பகோணம் சென்றால் இத்திருக்குளத்தில் இறங்கி ஒரு கை தீர்த்தத்தையாவது தெளித்துக் கொள்ளுங்கள். மகாமகக் குளத்தில் ஒன்பது கன்னி நதிகளும் இணைந்திருப்பதால் அவ்வளவு புண்ணியம்.

நான் பார்த்ததிலேயே மிக மிகப் பிரம்மாண்டமான தீர்த்தக் குளம்.


இது மகாமகக் குளமோ வேறு புஷ்கரணியோ இல்லீங்க. எங்க வீட்டுக்குப் போற வழியில் ஓடும் பாலாறுதான் இது. தேனாறு பக்கத்தில் பாலாறு ஓடணுமில்லையா. இதன் கரையில் அதோ தெரிவது பாலாற்றங்கரை பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவில். மிகுந்த சக்தியானவர்.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்5 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 6:28
    சிறப்பான தகவல்கள்.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளி

    Thenammai Lakshmanan6 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 2:56
    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.